? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: மத்தேயு 24:25-35

இருதயம் உணர்வடையட்டும்!

வழியிலே அவர் நம்முடனே பேசி, வேதவாக்கியங்களை நமக்கு விளங்கக்காட்டினபொழுது, நம்முடைய இருதயம் நமக்குள்ளே கொழுந்துவிட்டு எரியவில்லையா. லூக் 24:32

‘மனதில் தோன்றியதை நான் கருத்திற்கொள்ளாததால், இப்படி நடந்துவிட்டது. அப்பொழுதே சுதாகரித்து, என் எண்ணத்துக்கு மதிப்பளித்திருந்தால் இப்படி நடந்திராது” என்ற அனுபவங்கள் உங்களுக்கும் ஏற்பட்டதுண்டா?

நம்பிக்கை இழந்து, எம்மாவுக்குப் பிரயாணப்பட்ட சீஷர்கள், தங்கள் எண்ணத்திற்குச் செவிகொடுக்கவோ சற்று நிதானித்துப் பார்க்கவோ முயற்சி செய்யவில்லை. அவர்களுடனேயே நடந்த உயிர்த்த ஆண்டவரிடமே அவரைப்பற்றிக் கூறி, இதுகூட உமக்குத் தெரியாதா என்று விசனத்துடன் வினவினான் கிலெயப்பா. வேதாகம தீர்க்கதரிசிகள் உரைத்ததை இந்த யூத சீஷர்கள் அறியாமலில்லை@ ஆனால், உணராதிருந்தார்கள். காரணம் அவர்கள் எதிர்பார்ப்பு வேறாக இருந்தது. ஆதியாகமத்தில் தேவனாகிய கர்த்தர் உரைத்த முதல் தீர்க்கதரிசனத்திலிருந்து, ஏசாயா, சகரியா, மல்கியா வரைக்கும் வேத வாக்கியங்களுக்கு நேராக இயேசு அவர்களைத் திருப்பினார். ஆனாலும் அவர்களது கண்கள் திறக்கப்படவோ, தம்முடன் பேசுகிறவர் யார் என்பதைக் கண்டுகொள்ளவோ முடியவில்லை. இயேசுவோ, முன்பு நடந்த ஒரு சம்பவத்தை மீண்டும் நிகழ்த்தி, அதாவது அப்பம் பிட்டுத் தம்மை அவர்களுக்கு வெளிப்படுத்தினார். அப்போதுதான் தங்களுடன் இருக்கிறவர் யார் என்று கண்டுகொண்டனர். அவர் வேதவாக்கியங்களை எடுத்துக்காட்டியபோது, தாங்கள் கவனம் செலுத்தாதிருந்த இருதய உணர்வை, அது கொழுந்துவிட்டெரிந்ததை உணர்ந்தார்கள். இத்தனையும் நடந்தது எப்படி? சீஷர்கள் கிராமத்தை நெருங்கியபோது, தம் வழியே போகிறவர்போல இயேசு காண்பித்தார். ஆனால் அவர்களோ தம்முடன் தங்கவேண்டுமென்று அவரை வருந்திக் கேட்டிராவிட்டால், விபரிக்கப்பட்ட வேதவாக்கியங்களை அவர்கள் உணராதே போயிருப்பார் கள். அவர் பேசியபோது தங்கள் இருதயத்தில் ஒரு தீ கொழுந்துவிட்டெரிந்தும் அவர்களுக்கு உணர்வு வரவில்லை. ஆனால், முன்னர் நடந்த சம்பவத்தைக்கொண்டே இயேசு அவர்களது கண்களைத் திறந்தபோதுதான், தமக்குள் ஏற்பட்ட உணர்வு இன்னதென்பதை அவர்கள் உணர்ந்தனர்.

இன்று நம் கைகளில் நமது பாஷையிலேயே எழுதப்பட்ட வேதப்புத்தகமும் வேத வாக்கியங்களை விளங்கிக்கொள்ள வாய்ப்புகளும் வழிமுறைகளும் ஏராளமாகவே உண்டு. ஆனால், நமது உணர்வுகள் மழுங்கியிருப்பது ஏன்? வேதவாக்கியத்தின்படி, இயேசு மரித்து உயிர்த்தாரெனில், அவரது வருகையும் அதிக நிச்சயமே! ஆண்டவர் முன்னர் நடந்த பல சம்பவங்களைக்கொண்டு இன்றும் நம்மை உணர்த்துகிறார். ஆலயத்தில் பிட்கப்படுகின்ற அப்பமும் ரசமும் இயேசுவின் ஜெயத்தை நினைவுபடுத்துமானால், அவரது உயிர்ப்பு இயேசுவின் இரண்டாம் வருகையை நினைவுபடுத்துகிறது. உணர்வடைந்து ஆயத்தமாகுவோமா!

? இன்றைய சிந்தனைக்கு:

வேதவாக்கியங்களை அறிவுபூர்வமாக மாத்திரம் அறிந்துள்ளேனா? அல்லது என் இருதயத்தில் அவை அக்கினியாய் பற்றியெரிகிறதா?

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin