? சத்தியவசனம் – இலங்கை. ?? 

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: லூக்கா 13:1-10

?  இன்னமும் தாமதம் ஏன்?

முதலாம் தூதன் எக்காளம் ஊதினான். அதினால் மரங்களில் மூன்றிலொரு பங்கு வெந்துபோயிற்று. பசும்புல்லெ்லாம் எரிந்துபோயிற்று. வெளி.8:7

அவுஸ்திரேலியா நாட்டின் காட்டுத்தீ முழு உலகையுமே அசைத்துப்போட்டது.  ஏராளமான ஏக்கர் நிலப்பகுதி எரிந்து, எண்ணுக்கணக்கற்ற விலங்குகள் கருகிவிட்டன. 28 மனிதர் இறந்துவிட்டனர். கடந்த ஆண்டிலே அமேசான் காடு பற்றியெரிந்ததும் நாம் அறிந்ததே. இதற்கெல்லாம் யார் யாரைக் குற்றம் சொல்வது? யாரோடு யுத்தம் பண்ணுவது? புவியியல் காரணிகள் கணிக்கப்பட்டாலும், இயற்கையின் சீற்றத்தை மனிதனால் கட்டுப்படுத்தவே முடியாது. வானத்தின் பலகணிகள் திறவுண்டு மழை கொட்டினாலே தவிர, இத் தீயை அணைக்கக்கூடியவர் யார்?

அன்று பிலாத்து சில கலிலேயரைக் கொன்று அவர்களுடைய இரத்தத்தை பலியுடன் கலந்ததாலே, கொல்லப்பட்டவர்களைக் குறித்த கேள்வியுடன் சிலர் இயேசுவிடம் வந்தார்கள். இயேசு அவர்களுடைய மனநோக்கை அறிந்தவராய், ‘அவர்கள் பாவிகளென்று நினைக்கிறீர்களோ! நீங்கள் மனந்திரும்பாமற் போனால் எல்லாரும் அப்படியே கெட்டுப்போவீர்கள்” என்றார்.

நித்தமும் பல திடுக்கிடும் சம்பவங்கள். ஒருபுறம் யுத்தம் வெடிக்கும் அபாயம், மறுபுறம், திடீர் மரணங்கள். நினைத்துப்பார்க்கவே நிலைகுலைகிறது. யாரையும் நியாயந்தீர்ப்பதை விடுத்து, நம்மை நாம் நிதானித்துப்பார்க்கும் காலம் இதுவே என்பதைச் சிந்திப்போம். நெருப்பும், கொட்டு மழையும், வெடித்துச் சிதறும் விமானங்களும், நில நடுக்கங்களும், வானத்தில் தோன்றும் அபூர்வ அடையாளங்களும் நம்மை எவ்வளவாக எச்சரிக்கின்றன! ஆனால், நாம் அதைச் சிந்திக்கிறோமா? யோவான் கண்ட தரிசனங்களை கவனத்திற்கொள்ளாதபடி, அல்லது இவற்றை நம்பமுடியுமா என்று சந்தேகிக்குமளவுக்கு மனித மனங்களை சத்துரு வேறுதிசைக்குத் திருப்பிவிட்டிருக்கிறான் என்றால் அது மிகையாகாது.

அன்று இஸ்ரவேலின் முதல் ராஜா, தேவனுக்கு விரோதமாக முரட்டாட்டம் செய்தபோது, சாமுவேலின் கட்டளையைத் தவிர அவனுக்கு வேறு எதுவும் இருக்கவில்லை. கீழ்ப்படியாத அவனையே கர்த்தர் தமது சமுகத்திலிருந்து தள்ளிப்போட்டார். இன்று நமது கையில் தேவனுடைய வார்த்தை; தேவனோடுள்ள உறவு, தேவசித்தத்தை அறிந்துகொள்ளும் அறிவு, எச்சரிப்புகள், மனந்திரும்புதலுக்கான அழைப்பு என்று எல்லாம் இருந்தும், நாம் தேவனுக்கு விரோதமாக முரண்டு பிடிப்போமானால், நம்மை யார் காப்பாற்றுவார். காலம் சமீபமாயிருக்கிறது. அநியாயம் செய்கிறவன் இன்னும் அநியாயஞ் செய்யட்டும். பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும். வெளி.22:10,11

? இன்றைய சிந்தனைக்கு:

சவுல் ராஜாவின் விழுகை என்னில் ஏற்படுத்துகின்ற தாக்கம் என்ன?  இந்த நாள் எனக்குக் கிடைத்த இன்னுமொரு தருணம் என்று எண்ணி மனந்திரும்புவேனாக.

?♂️ எமது விலாசம்
Back to the Bible (Sathiyavasanam),
120 A, Dharmapala Mawatte, Colombo 7, Srilanka.
Email: sathiyavasanam@backtothebible.lk
website: Backtothebible.lk  |  www.Sathiyavasanam.lk
Facebook: www.fb.com/sathiyavasanam
Call: 011-4691500 | 011- 4691532

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin