6 டிசம்பர், 2021 திங்கள்

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰

📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு: யோவான் 4:43-54

நம்பிப் போனான்.

இயேசு அவனை நோக்கி, நீ போகலாம், உன் குமாரன் பிழைத்திருக்கிறான் என்றார். அந்த மனுஷன், இயேசு சொன்ன வார்த்தையை நம்பிப் போனான். யோவான் 4:50

ஒரு பாட்டுப் பாடினால் சொக்லேட் தருவேன், அல்லது இன்னதைச் செய்தால் நாளை பூங்காவுக்குக் கூட்டிச்செல்வேன் என்றெல்லாம் நமது சிறுபிள்ளைகளுக்கு நாம் வாக்குக் கொடுப்பதுண்டு. பிள்ளைகளும் அதை முற்றிலும் நம்பி நாம் சொல்வதைக் கேட்டுச் செய்வார்கள். நாங்களும் கொடுத்த வாக்கை நிறைவேற்றுவோம்; சிலவேளை களில் சாட்டுச்சொல்லித் தப்பியும் விடுகிறோம், அது நல்லதல்ல.

இங்கே ராஜாவின் மனுஷரில் ஒருவன், தனது குமாரனின் சுகத்திற்காக இயேசுவிடம் மன்றாடி நிற்கிறான். மகன் மரண அவஸ்தையாயிருந்தபடியால் அவன் சாகிறதுக்கு முன்னே இயேசு வரவேண்டும் என்கிறான். இயேசுவோ, “நீ போகலாம், உன் குமாரன் பிழைத்திருக்கிறான்” என்றார். அதாவது அவன் ஆபத்தைத் தாண்டிவிட்டான் என்று சொன்னபோது, அந்த ஒரு வார்த்தையை அவன் நம்பி, அந்தத் தகப்பன் போனான். அவனது நம்பிக்கையின்படியே, எந்த நேரத்தில் இயேசு அந்த வார்த்தையைச் சொன்னாரோ அதே நேரத்தில்தானே அவனது குமாரன் சுகமானான் என்பதை அவன் அறிந்துகொண்டான். இயேசுவின் வார்த்தையின் வல்லமையும், அவனது நம்பிக்கையுமே அவனது குமாரனைக் குணமாக்கியது. அவன் நம்பிப் போனதில் அவனுடைய விசுவாச கிரியை வெளிப்பட்டது.

இன்று நம்மில் பலர் இப்படிப்பட்ட நம்பிக்கையை இழந்தவர்களாகவே இருக்கிறோம். எதைச் சொன்னாலும் அதற்கென்று ஒரு கேள்வி எழுகிறது. கர்த்தருடைய வாக்கை நம்புவதற்குத் தயங்குகிறவர்களுக்கு எதையும் புரியவைப்பது மிகவும் கடினமே. கர்த்தருடைய வார்த்தை வல்லமையுள்ளது. அது இருபுறமும் கருக்கான எப்பட்டயத் தையும்விட கருக்கானது, ஆத்துமாவையும், ஆவியையும், கணுக்களையும், ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக்குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும், யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் உள்ளது என்று எபி.4:12ல் வாசிக்கிறோம். அந்த வார்த்தையை விசுவாசிக்கும்போதுதான் அது எமது வாழ்வில் வல்லமையாய் கிரியைசெய்ய ஏதுவாகும். கர்த்தரின் வேதத்தை விசுவாசிக்கிறவனுக்கு, அதன் வார்த்தைகள் கர்த்தர் பேசுவதுபோல இருக்கும். விசுவாசியாதவனுக்கோ அது ஒரு சரித்திர புத்தகம்போலவே தோன்றும். “தோமாவே, நீ என்னைக் கண்டதினாலே விசுவாசிக்கிறாய், காணாமலிருந்தும் விசுவாசிக்கிறவனே பாக்கியவான்” என்றார் இயேசு. நம்பிக்கையில் உறுதியாய் வளருவோம். விசுவாசத்தைக் கிரியையில் வெளிப்படுத்துவோம். “உன் நம்பிக்கை கர்த்தர்மேல் இருக்கும்படி, இன்றையதினம் அவைகளை உனக்குத் தெரியப்படுத்துகிறேன்.” நீதிமொழிகள் 22:19

💫 இன்றைய சிந்தனைக்கு:

கர்த்தருடைய வார்த்தை எந்தளவுக்கு எனக்குள் வேரூன்றி நம்பிக்கையை வளர்த்திருக்கிறது? அதைக் கிரியையில் வெளிப்படுத்த என்னால் முடிகின்றதா?

📘 அனுதினமும் தேவனுடன்.

1,204 thoughts on “6 டிசம்பர், 2021 திங்கள்