? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: சங்கீதம் 147:1-20

எல்லையில் சமாதானம்

அவர் உன் எல்லைகளைச் சமாதானமுள்ளவைகளாக்கி, உசிதமான கோதுமையினால் உன்னைத் திருப்தியாக்குகிறார். சங்கீதம் 147:14

எகிப்து, யோர்தான், சிரியா, லெபனான், பாலஸ்தீன நாடுகளை எல்லையாகக்கொண்ட எருசலேம் நகரம் காலாகாலமாக எல்லைப்போரில் சிக்குண்டது. இதனால் அந்நாட்டின் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டது. இதனால் யூத ஜனத்தின் தனிப்பட்ட வாழ்வியல் பாதிக்கப்பட்டு, சமாதானம் இழந்து வாழ்ந்த காலத்தைக் குறித்தே சங்கீதம் 147 கூறுகிறது. இதை யார் எழுதியது என்பதைத் திட்டவட்டமாக கூறமுடியாவிட்டாலும், பாபிலோனின் சிறையிருப்பிலிருந்து திரும்பியவர்களால் எருசலேம் திரும்பவுமாகக் கட்டப்படும் காலத்தில் எழுதப்பட்டது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

யூத ஜனங்கள் தாம் இழந்துபோன அனைத்தையும் திரும்பவும் ஒன்றன்பின் ஒன்றாகப் பெற்றுக்கொள்ளும் கால நாட்களில், அவர்கள் தேவனைத் துதிப்பதை மட்டுமல்ல, தாம் இழந்துபோன அனைத்தையும் திரும்பவும் தேவன் மீளத் தருவார் என்ற அவர்களது எதிர்பார்ப்பைக் காண்பிக்கின்றது. ‘அவர் உன் எல்லைகளைச் சமாதானமுள்ளவைகளாக்கி உசிதமான கோதுமையினால் உன்னைத் திருப்தியாக்குகிறார்”, இது அவர்களுடைய நாட்டின் எல்லையில் மட்டும் அல்ல, அவர்களுடைய வாழ்க்கையின் பொருளா தார தேவைகள் அனைத்திலும் தேவனின் சமாதானமும் ஆசீர்வாதமும் தொடர்ந்தும் உண்டு என்பதை எடுத்துக் காட்டுகின்றது.

நாடுகளுக்கான யுத்தங்களும், தொற்றுநோய்களும் அதைத் தொடர்ந்து ஏற்படுகிற பொருளாதார வீழ்சியினால் நாடுகள் மாத்திரமல்ல, மனிதனின் தனிப்பட்ட வாழ்வும் பாதிக்கப்படுவதுண்டு. கடந்த நாட்களில் உலகமே எதிர்பார்த்திராத ‘கொறோனா’ வைரஸினால் ஏற்பட்ட கொள்ளைநோயினால் உலக பொருளாதாரமே சீர்கெட்டுப்போனது. இலட்சக்கணக்கானோர் வேலை இழந்து, வருமானம் இன்றிக் குடும்பங்களை நடாத்தத் தவிக்கின்றன. மாத்திரமல்ல, இந்த நோய்த் தாக்கத்தால் மரணித்தவர்களின் குடும்பங்கள், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள்கூட பல நெருக்கங்களுக்கூடாகக் கடந்துசென்றார்கள். அன்றைய யூத இன மக்கள் அனுபவித்த துன்பம்போலவே, இன்றும் நாம் சில காரியங்களைச் சந்தித்திருக்கலாம். பாதிக்கப்பட்டவர்களில் ஒருவராக இன்று நம்மில் யாராவது இருக்கலாம். ஆனாலும் சோர்ந்துபோகவேண்டாம்! மனிதனின் அனைத்து எல்லைகளையும் ஆளுகைசெய்து, சமாதானத்தை அருளும் தேவன் நமக்கிருக்கிறார். பாதிப்புக்களிலிருந்து மீள அவரே உங்களுக்கு உதவிகளைச் செய்ய வல்லவராயிருக்கிறார். ‘..எல்லாவற்றையுங் குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடேகூடிய ஜெபத்தினாலும், விண்ணப்பத்தினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்” (பிலி.4:6). அவர் பார்த்துக்கொள்வார்.

? இன்றைய சிந்தனைக்கு:

 பாதிப்புகளைச் சந்தித்து, அதிலிருந்து மீண்ட அனுபவங்கள் இருந்தால், அந்த மீட்பில் நடந்தவை என்னவென்பதைச் சற்று மீட்டிப் பார்த்து, எதிர்காலத்தையும் தேவ கரத்தில் விட்டுவிடுவோமாக!

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin