? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: ஆதியாகமம் 18:16-22

நெருங்கிய உறவு

நான் செய்யப்போகிறதை ஆபிரகாமுக்கு மறைப்பேனோ? ஆதியாகமம் 18:18

சமூக வெட்கக்கேடான விஷயமான போதைப்பொருளை உட்கொள்வதன்மூலம் கடவுளை அறியமுடியும் என்று சிலர் நினைப்பது பரிதாபத்திற்குரிய ஒன்றாகும். ஒருவன், சமய சம்பந்தமான செய்திகளை எழுதும் ஒரு எழுத்தாளரிடம், ‘போதைப் பொருட்களை எல்லோரும் பயன்படுத்த சட்டரீதியான அனுமதி வேண்டும். ஏனென்றால் நான் ஒரு தடவை போதைமயக்கத்தில் இருந்தபோது கடவுளுக்கு அருகில் இருப்பது போல் உணர்ந்தேன்” என்றான். போதைப்பொருட்கள் மக்களின் உடலுக்கும் உள்ளத்துக்கும் தீங்கானவை. இவை தேவனிடத்துக்கு வழிநடத்தும் மார்க்கமல்ல. ஒரு மனிதனின் போதை மயக்கத்திற்கும், தேவனுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.

ஆபிரகாமுக்குத் தேவனுடன் நெருங்கிய உறவு இருந்தது. இந்தத் தொடர்பைப் பெறுவதற்கு அவர் மனநிலையை மாற்றும் எந்த முயற்சியும் செய்யத் தேவைப்பட வில்லை. தேவன் தாம் செய்யும் எந்தக் காரியத்தையும் ஆபிரகாமுக்கு மறைக்காமல் அறிவிக்கத் தீர்மானம் செய்திருந்தார். தேவனுக்கும் ஆபிரகாமுக்கும் இடையே எந்த இரகசியமும் இருக்கவில்லை. இவர்களிடையே இருந்த உறவு, ஒருவர்மீது ஒருவர் கொண்டிருந்த நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது. ‘நான் அவனை அறிந்திருக்கிறபடியால்” என்று சொன்ன கர்த்தர், ஆபிரகாமைப்பற்றிய இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் சகலத்தையும் அறிந்திருந்தார். மாத்திரமல்ல, கர்த்தர் அவரை நேசிக்கவும் செய்தார்.

தேவனோடு இதே உறவை நாமும் அனுபவிக்கலாம். ஆபிரகாமைப்பற்றி நாம் அறியவேண்டிய எல்லா விடயங்களையும் தேவன் வேதாகமத்தில் வெளிப்படுத்தி யிருக்கிறார். அவர் தம்முடைய குமாரனை நமது இரட்சகராகத் தந்ததன் மூலம் பாவம் என்ற தடைக்கல்லை அகற்றிவிட்டார். தேவன் நம்மோடு அன்புறவு கொள்ள விரும்புவதைவிட வேறு ஒன்றையும் எதிர்ப்பார்க்கவில்லை. தேவன் நம்மோடு திறந்த மனதோடு இருப்பதுபோல நாமும் இருப்போம். தேவனைப்பற்றி இன்னும் அறியும்படிநேரம் ஒதுக்குவோம். தேவனைக் கண்டுகொள்ள வேதாகமத்தில் தேடுவோம். ஜெபத்தின் மூலம் அவருடன் பேசுவோம். நமது வாழ்வில் அவருடைய வழிநடத்து தலை நாடுவோம்.

எந்தப் போதைமருந்தும் ஒருபோதும் தரக்கூடாத நெருங்கிய உறவு தேவனோடு நமக்குக் கிடைக்கும். தேவனோடு நெருங்கிய உறவு என்பது குணநலனை அடிப்படையாகக் கொண்டது; அது போதைமயக்கம் தரும் இரசாயனப் பொருள் அல்ல.

? இன்றைய சிந்தனைக்கு:

சகமனிதரோடும் பிறரோடும் எமது உறவு எப்படிப்பட்டதாக இருக்கின்றது? சிந்திப்போம்.

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin