? சத்தியவசனம் – இலங்கை. ?? 

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: 1சாமுவேல் 18:14-29 19:9-17   

மீகாள்

 சவுல் தாவீதின் மனைவியாகிய மீகாள் என்னும் தன் குமாரத்தியைக் காலீம் ஊரானாகிய லாயீசின் குமாரனான பல்த்திக்குக் கொடுத்திருந்தான். 1சாமுவேல் 25:44

மீகாள் சவுல் ராஜாவின் இளைய குமாரத்தி. இவள் தாவீதை நேசித்திருந்தாலும், தகப்பன்  சவுல் ராஜாவின் தந்திர புத்தியினாலேயே இவள் தாவீதுக்கு மனைவியானாள். தாவீதும் இவளை மெய்யாகவே நேசித்தான்@ தாவீதைக்கொண்டு பெலிஸ்தியரைக் கொல்ல சவுல் போட்ட தந்திர திட்டத்தை அறியாமல், சவுலின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக, இருநூறு பெலிஸ்தியரை வெட்டி, அவர்களது நுனித்தோலைக் கொண்டுவந்தவன் தாவீது. அப்படியே, மீகாளை தன் மனைவியாக்கிக்கொண்டான். பின்னர், தாவீதைக் கொன்றுபோட சவுல் திட்டமிட்டிருந்ததை அறிந்த மீகாள், தன் கணவனைத் தப்புவிக்கும் படிக்கு அவனை ஜன்னல்வழியே இறக்கிவிட்டுவிட்டாள். கோபம்கொண்ட தகப்பனுக்கும் சாட்டுப்போக்குச் சொல்லிவிட்டாள். அன்பில்லாமல் இப்படிச் செய்திருப்பாளா? ஆனால், இவ்வளவாய்த் தன் கணவனில் அன்புவைத்திருந்த மீகாள், தாவீது புறப்பட்டுப்போன போது, அவனைப் பின்தொடராமல் இருந்தது என்ன? இதன் விளைவு எத்தனை சிக்கல்களை விளைவித்தது? தாவீதைப் பழிவாங்கும்படிக்கு சவுல் ராஜா மீகாளை வேறொருவனுக்கு மனைவியாக்கிவிட்டான். என்ன பரிதாபம்! தாவீதும்கூட வேறு மனைவிகளை மணமுடித்துவிட்டான். அதுமாத்திரமல்ல, தாவீதின் கை ஓங்கியபோது, அவன் திரும்பவும்

மீகாளை தன்னிடமாகச் சேர்த்துக்கொள்ள, பிறகாலே அழுதுகொண்டு ஓடிவந்த அவளது கணவனாகிய பல்த்தியேல் துரத்திவிடப்பட (2சாமு.3:16), இப்படி எத்தனை அசம்பாவிதங்கள் நடந்துவிட்டன. கணவனோ மனைவியோ, ஒருவரைவிட்டு ஒருவர் பிரிந்திருக்கக்கூடாது என்பதே வேதாகம போதனை. மீகாள் தன் கணவனை நேசித்தாள்; நன்மையானவற்றைச் செய்தாள்; ஆனால், காடுமேடு எல்லாம் தாவீதை பின்தொடர்ந்த அபிகாயில், அகினோவா போல, அவனைப் பின்தொடராது நின்றுவிட்டாள்.

சிருஷ்டிப்பின் தேவன் முதல் குடும்பத்தைப் படைத்து, குடும்ப உறவுக்கான கட்டளையையும் கொடுத்துவிட்டார். அதன்படி கணவன் மனைவி உறவு என்பது பிரிக்கப்படமுடியாத ஒன்று. அந்த உறவை, கிறிஸ்துவுக்கும் அவருடைய சரீரமாகிய சபைக்கும் இருக்கவேண்டிய உறவுக்கு ஒப்பிடப்பட்டுள்ளது. சொந்தப் புருஷன்மீது நேசம்வைத்து, அவனுக்குக் கீழ்ப்படிந்திருப்பது என்பது, சபையானது கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிகிறதுபோன்றது (எபே.5:24) என்கிறார் பவுல். ஆம், மனைவியர் தங்கள் புருஷனில் வைத்திருக்கும் நேசம், திருச்சபை கிறிஸ்துவில் வைத்திருக்கும் நேசத்திற்குச் சமம். அப்படிப்பட்ட உறவில் நாம் தவறும்போது தேவனோடுள்ள உறவிலும் தவறுகிறோம். ஆண்டவரை நாம் நேசிக்கிறோம்; சேவையும் செய்கிறோம். ஆனால், அதெல்லாம் சொகுசாக வாழும்வரையிலா? கஷ்டம், இடுக்கண் வரும்போதும் அவரைப் பின்பற்ற மனதில்லாமல், வேறுவழிகளை நாடுகிறோமா? தேவனுடைய நாமத்தில் பல ஊழியத்தைச் செய்துவிட்டு,  நமது ஆத்துமாவை இழந்துவிடலாமா?

? இன்றைய சிந்தனைக்கு:

தேவனை நேசிக்கிறேன் என்று கூறுகிற நான், எந்த நிலைமையிலும், என்னதான் நேர்ந்தாலும் தேவனையே பின்தொடருவேனா?

? எமது விலாசம்
Back to the Bible (Sathiyavasanam),
120 A, Dharmapala Mawatte, Colombo 7, Srilanka.
Email: sathiyavasanam@backtothebible.lk
website: Backtothebible.lk  |  www.Sathiyavasanam.lk
Facebook: www.fb.com/sathiyavasanam
Call: 011-4691500 | 011- 4691532

Solverwp- WordPress Theme and Plugin