? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு: உபாகமம் 1:29-40

கடந்துவந்த பாதைகளை மறவாதே!

ஒரு மனிதன் தன் பிள்ளையைச் சுமந்துகொண்டு போவது போல, …தேவனாகிய கர்த்தர் உங்களைச் சுமந்து கொண்டு வந்ததைக் கண்டீர்களே. உபாகமம் 1:31

கடந்த இரு ஆண்டுகளாக தனிமைப்படுத்தல் நிலையில் வீடுகளில் தரித்திருந்தபோது, அநேக குடும்பங்களில் பலவித பிரச்சனைகள் தோன்றின. ஆனால், ஒரு சிலர் கூறிய விடயம் ஆரோக்கியமானதாய் இருந்தது. அதாவது, இதுவரை கடந்துவந்த வாழ்வின் சகல சம்பவங்களையும் அவர்கள் மீட்டிப் பார்க்க, மகிழ்ச்சித் தருணங்களைச் சிந்திக்க, தேவனை மகிமைப்படுத்த, தமது தவறுகளைக்குறித்து தங்களைக்குறித்து தாங்களே வெட்கப்பட, ஆராய்ந்துபார்க்க, வீண்காரியங்களாகத் தெரிந்தவற்றை விட்டுவிடக்கூடியதாக இருந்ததாம். அதேசமயம், பல சந்தேகங்கள், கேள்விகள், மனச்சோர்வுகள் சிலருக்கு ஏற்படத்தான் செய்தது. இருந்தாலும் எல்லாவற்றிலும் கர்த்தர் கூடவே இருந்திருக்கிறார் என்பதை உணரும்போது, அவருக்குத் துதி ஸ்தோத்திரங்களை ஏறெடுக்காமல் இருக்கமுடியவில்லை என்றனர். உங்கள் மனநிலை எப்படியிருந்தது?

 மீதியானில் ஆடுகள் மேய்த்துக்கொண்டிருந்த மோசேயை அழைத்த கர்த்தர்; கூடவே இருந்து வழிநடத்தி, மோசேமூலம் அற்புதங்களை நடப்பித்தார். ஆனால், மோசேயினால் கானானுக்குள் பிரவேசிக்கமுடியாமல் போய்விட்டது துக்கத்துக்குரிய விடயமல்லவா! இஸ்ரவேலர் எத்தனை அதிசயங்களைக் கண்டனர்; சீனாய் மலையில் தேவ பிரசன்னத்தையும் அனுபவித்தனர். இரவில் அக்கினியிலும் பகலில் மேகத்திலுமிருந்து கர்த்தர் நடத்தியதைக் கண்டனர். சத்துருவின் கைக்கு விலக்கிக் காத்துவந்ததையும் கண்டனர். ஒரு தகப்பன் தன் பிள்ளையைச் சுமந்துகொண்டு போவதுபோல கர்த்தர் சுமந்துவந்தும், “நீங்கள் அவரை விசுவாசியாமற்போனீர்கள்” என்றார் மோசே.

தாயின் கருவில் உருவேற்பட்ட நாள்முதல் கர்த்தர் நம்மோடுகூடவே இருந்ததை நாமும் அடிக்கடி மறந்துவிடுதால்தான், நமது வாழ்விலும் பல தோல்விகளைச் சந்திக்க நேரிடுகிறது. சவால்களை எதிர்த்துநிற்கத் திராணியற்றவர்களாகிறோம். கடந்த காலத்தில் கர்த்தர் நம்மை நடத்திவந்த வழிகளைச் சிந்தித்தால், நிச்சயம் எல்லாமே மாறும். தேவ கிருபையால் பல ஆபத்துக்களைக் கடந்துவந்த நாம், சற்றுத் திரும்பி பார்த்து தேவனை மகிமைப்படுத்துவோம். அதேநேரத்தில், நமது பாவங்களை நாம் திரும்பிப் பார்க்கவே கூடாது. ஏனென்றால், ஆண்டவர் நமது பாவங்களைக் கழுவி, மன்னித்து, நம்மைத் தூய்மையாக்கிவிட்டார் என்பதே சத்தியம். எந்தச் சேற்றிலிருந்து தூக்கியெடுக்கப்பட்டோம், நமது இச்சைகள், முரட்டாட்டங்கள் எவ்வளவு? நம்மை மீட்பதற்காகக் கர்த்தர் எடுத்த பிரயத்தனங்கள் எத்தனை எத்தனை! இதை நாம் மறக்கவே கூடாது. இஸ்ரவேல் மறந்தபடியினால், புறப்பட்டவர்களில் இருவரைத் தவிர யாரும் கானானுக்குள் பிரவேசிக்கவேயில்லை. நம்மைச் சுமந்துவந்த தேவனுக்கு நன்றியுள்ள உள்ளத்துடன் தேவனுடனான நல்லுறவைப்பேணி, அவரோடு அவருக்காக அவருக்குள் வாழ்வோமா!

? இன்றைய சிந்தனைக்கு:

கர்த்தர் நம்மைத் தூக்கிச்சுமந்து வந்த பாதைகளை நினைவு படுத்தும்போது, அந்த நினைவுகள் உருவாக்குகின்ற நினைவலைகள் நமக்குள் என்ன உணர்வை ஏற்படுத்துகின்றன

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin