? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: 1கொரி 15:20-28

மரணத்தை ஜெயித்தெழுந்தார்!

மரணமே உன் கூர் எங்கே? பாதாளமே உன் ஜெயம் எங்கே? 1கொரிந்தியர் 15:55

கொரோனா தொற்றின் ஆரம்ப நாட்களில் அதைக் குறித்த கேலிப் பாட்டுக்களும், பகிடிகளும் வலையதளத்தில் ஏராளமாகக் குவிந்தன. இன்றோ உலகம் முழுவதையும் இந்த வைரஸ் ஆட்டிப்படைத்து, மனித சமுதாயத்தில் அச்சத்தையும், பீதியையும் கிளப்பிவிட்டிருக்கிறது. எந்த ஒரு காரியத்தையும் திட்டமிட்டுச் செய்யமுடியாமல், எந்த நேரத்தில் வெளியில் செல்லுவது, எப்போது அடைபட்டுக் கிடப்பது என்று அங்கலாய்த்துக் கிடக்கிறான் மனுஷன். இன்று ஒரு வருடத்துக்கும் மேலாக இந்த நிலமை தொடருகிறது. இந்த நிலையில் நமக்கு நம்பிக்கை தரக்கூடிய ஒன்றேயொன்று கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் மாத்திரமே!

வியாதியோ அல்லது விபத்தோ எதுவானாலும் அதிகூடிய பயத்தைக் கொண்டு வருவது மரண பயமேயாகும். ஆனால் இந்த மரணத்துக்கே சவாலாய் அமைந்து, இக் கொடிய மரணத்தையே வென்றது கிறிஸ்துவின் உயிர்ப்பு. அவரை உண்மையாய்விசுவாசித்து ஏற்றுக்கொண்டவர்களுக்கு இந்த செய்தி ஒரு நித்திய நம்பிக்கையைக் கொடுக்கிறது. இது மகிழ்ச்சி நிறைந்த மறுவாழ்வின் செய்தி. மனுஷனால் மரணம் உண்டானபடியால், மனுஷனால் மரித்தோரின் உயிர்த்தெழுதலும் உண்டானது என பவுல் கூறுகிறார். மேலும், ஆதாமுக்குள்ளே எல்லாரும் மரிக்கிறதுபோல கிறிஸ்துவுக் குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள். நாம் கிறிஸ்துவுக்குள் வாழ்ந்து, அவருக்குள்மரிக்கும்போது நாம் உண்மையிலேயே மரிப்பதில்லை; மாறாக, கிறிஸ்துவுக்குள் நித்திரையடைகிறோம். கடைசி எக்காளம் தொனிக்கும்போது மரித்தோர் அழிவில்லாத வர்களாய் எழுந்திருப்பார்கள்; உயிரோடிருக்கும் நாமும் ஒரு நொடிப்பொழுதில் மறுரூபமாக்கப்படுவோம். இதுவே இன்று எமக்குள் இருக்கும் நம்பிக்கை.

மரணம் என்பது கிறிஸ்துவுக்குள் வாழுபவனுக்கு ஒரு முடிவல்ல. நித்திய நித்தியமாய் கிறிஸ்துவோடு வாழ அழைக்கப்பட்ட அவனுக்கு இது ஒரு புதிய ஆரம்பம். ஆகையால் இன்றே எமது வாழ்வைச் சீர்தூக்கிப்பார்ப்போம். மரணத்தை ஜெயித்து வெற்றி வேந்தராய் நமது ஆண்டவரின் உயிர்த்தெழுந்த நாளை நினைவுகூரும் இந்த நாளில், நாமும் மரணத்தை வெற்றிகொள்ளக்கூடிய நிலையில் விசுவாசத்தில் உறுதி கொண்டிருக்கிறோமா? இந்த நாள் நாம் வெற்றியோடு சந்தோஷத்தோடு நினைவு கூரவேண்டிய ஒருநாள். நாம் எப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் இருந்தாலென்ன@ இந்த நாளை, நமது நம்பிக்கையின் நாளை சந்தோஷமாய் எதிர்கொள்ளுவோமாக. ‘நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்.” 1கொரிந்தியர் 15:57

? இன்றைய சிந்தனைக்கு:

உயிர்த்த கிறிஸ்துவின் உயிர்ப்பில் நான் மகிழ்ந்திருப்பது உண்மையானால் பிறனையும் அப்படியே மகிழ்ந்திருக்கச் செய்வேனாக.

? அனுதினமும் தேவனுடன்.

happy resurrection day

Solverwp- WordPress Theme and Plugin