? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: ஆதியாகமம் 7:1-10

நோவாவின் பணி

இந்தச் சந்ததியில் உன்னை எனக்கு முன்பாக நீதிமானாகக் கண்டேன். ஆதியாகமம் 7:1

கீழ்ப்படிவைக்குறித்து ஒருமுறை ஒரு ஊழியர் கூறியபோது, “கர்த்தர் ஒரு காரியத்தை உணர்த்தினால், அல்லது வார்த்தையினூடாகப் பேசினால் நாம் அதற்குக் கீழ்ப்படிந்தால் மட்டும்தான், அவர் மறுகாரியத்தைக் காட்டுவார். எப்போது நாம் கீழ்ப்படியாது நிற்கிறோமோ, அத்தோடு அவரது வழிநடத்துதலும் நின்றுபோய்விடும்” என்றார்.

ஆம், கர்த்தருக்குக் கீழ்ப்படிவது என்பது, தேவனோடுள்ள நமது உறவில் எவ்வளவு முக்கிய பங்கை வகிக்கின்றது என்பது தெரியுமா? பேழையைக் கட்டும்படி, கர்த்தர் நோவாவுக்கு ஒரு கட்டளை கொடுத்ததோடு, அதை எப்படியெல்லாம் கட்டவேண்டும் என்ற ஒழுங்கு முறையையும் தந்தார். நோவாவும் சற்றும் பிசகாமல் முழுமையாக அதைச் செய்துமுடித்தார். செய்துமுடித்ததும், மீண்டும், தேவன் நோவாவிற்கு தனது குடும்பத்தையும், மிருகஜீவன்களையும் அழிவினின்று மீட்கும்பணியைக் கொடுக்கிறார். அதையும் எப்படிச் செய்யவேண்டும் என்ற ஒழுங்கு முறையையும் சொன்னார். கட்டளையிட்டபடியே நோவா அதற்கும் கீழ்ப்படிந்தார். இன்று நம்மில் எத்தனைபேர் தேவன் தந்த பணியை, பொறுப்பினை செய்துமுடிக்க

ஆயத்தமாய் இருக்கிறோம்? கீழ்ப்படிகின்றோம்? சிலவேளைகளில் நாமே எமக்குப் பிரியமான பதவியை, பொறுப்பினை எடுத்து வைத்துக்கொண்டு, தேவனுக்கு ஊழியம் செய்வதாகப் பிதற்றித்திரிகிறோம். ஆனால், தேவனே மனிதருக்குப் பணிகளையும் பொறுப்புகளையும் பதவிகளையும்கூட கொடுக்கிறார் என்பதே வேத சத்தியம்.அதை அவர்கள் பொறுப்புடன் செய்யவேண்டும் என தேவன் எதிர்பார்க்கிறார். செய்யாதவிடத்து அவர்களை அந்த ஸ்தானத்திலிருந்து தள்ளியும் போடுகிறார். செய்துமுடிக்கும் போது அடுத்த பணியைத் தர ஆயத்தமாயிருக்கிறார். நீதிமானாயிருந்த நோவா, தேவ கட்டளைக்கு கீழ்ப்படியும் சிலாக்கியத்தைப் பெற்றார்.

இன்று தேவன் எனக்கென தந்திருக்கின்ற பொறுப்புகளை நான் அடையாளம் கண்டிருக்கிறேனா? அல்லது நானே பதவிகளைத் தெரிந்தெடுத்துக்கொண்டு தேவசித்தத்துக்கு முரண்படுகிறேனா? ஊழியம் என்று சொல்லும்போது அது ஊழியக்காரரை மட்டும் குறிப்பிடுவதில்லை. நம் ஒவ்வொருவருக்கும் ஊழியம் உண்டு. அது நமது குடும்பமாக, சபையாக, சமுதாயமாக இருக்கலாம். அதில் கர்த்தர் தருகின்ற பணியை கர்த்தருக்காக கீழ்ப்படிந்து நிறைவேற்றுவோமா! தேவனுக்கு மாத்திரமே கீழ்ப்படிய நம்மை இன்று தருவோம். விசுவாசத்தினாலே நோவா தற்காலத்திலே காணாதவை களைக்குறித்துத் தேவ எச்சரிப்புப்பெற்று, பயபக்தியுள்ளவனாகி, தன் குடும்பத்தை இரட்சிப்பதற்குப் பேழையை உண்டுபண்ணினான். எபி.11:7

? இன்றைய சிந்தனைக்கு:

நமது கீழ்ப்படிவைக்குறித்த நேர்மையான உள்ளுணர்வு நமக்குண்டா?

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin