? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: ஆதியாகமம் 17:1-3

தேவனுடைய வல்லமையின் பரிபூரணம்

கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசனமாகி: நான் சர்வவல்லமையுள்ள தேவன். நீ எனக்கு முன்பாக நடந்து கொண்டு உத்தமனாயிரு… ஆதியாகமம் 17:1

வயலில் வேலை செய்துகொண்டிருந்த அப்பா, உழுவதற்கு இடையூறாக இருக்காத படிக்கு வயலில் காணப்படும் பெரிய கற்களை எடுத்து அருகில் உள்ள குழியில் போடும்படி கூடவிருந்த மகனிடம் கூறினார். நீண்ட நேரம் வேலைசெய்த பின்பு, அப்பாவிடம் வந்த மகன், ‘அப்பா, இங்கே இந்தப் பெரிய கல், எவ்வளவு முயற்சித்தும் அதை அசைக்கமுடியவில்லை” என்றான். அதற்கு அப்பா, ‘என்னிடம் இதுபற்றிக் கூறும் வரை நீ கடினமாக உழைக்கவில்லை. இப்பொழுது உன் உதவிக்கு நான் வருகிறேன்” என்று சொல்லி, அவனுடன் சேர்ந்து இருவருமாக அந்தக் கல்லை மிகச் சுலபமாகப் புரட்டித்தள்ளி விட்டார்கள்.

தனியாக எவ்வளவு முயற்சித்தாலும் செய்யமுடியாத ஒரு வேலையைத் தேவன் ஆபிராமுக்குக் கொடுத்தார். ‘நீ எனக்கு முன்பாக நடந்துகொண்டு உத்தமனாயிரு” தேவன் ஆபிராமுக்குக் கொடுத்த கட்டளை இது. ‘உத்தமனாயிரு” என்ற சொல்லின் எபிரெய மொழி சொல்லுக்கு, குற்றமற்றது, பூரணமானது என்று அர்த்தப்படுத்தலாம். இதை மனிதரிடையே காண்பது அரிது. இந்த உத்தமத்தன்மை ஆபிராமுக்கு முடியாத காரியமாய் இருந்திருக்கலாம். ஆனால் அது தேவனால் கூடும். ஆபிராமை அழைத்தவர், அந்தளவு முதிர்ச்சியையும் அடையச் செய்வார்.

அநேக கிறிஸ்தவர்கள் தமது சுயபெலத்தினால் உத்தமமாயிருக்க முயற்சிப்பதுண்டு. உண்மையில், தேவ உதவியில்லாவிட்டால் அது மிகக் கடினமே. கிறிஸ்தவ வாழ்வை சுயபெலத்தில் வாழ முயற்சித்தால், அது கடினமே. பாவம் நிறைந்த இவ்வுலகில் குற்றமற்ற, உத்தம நிலையை அடைவது முடியாத காரியம் என்று சிலர் நம்புகின்றனர். ஆனால், சர்வ வல்லமையுள்ள தேவனால் அதைச் செய்யமுடியும். ‘இதோ, நான் மாம்சமான யாவருக்கும் தேவனாகிய கர்த்தர்; என்னாலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுண்டோ?” (எரேமியா 32:27) என்று கர்த்தர் கேட்கிறார். ‘என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய எனக்குப் பெலன் உண்டு” (பிலிப்பியர் 4:13) என்கிறார் பவுல். ஆம், நம்மைக் குற்றமற்றவர்களாகக் காக்கவல்ல தேவனுடைய மகத்துவமான வல்லமையைச் சார்ந்திருப்போம். தமது சிங்காசனத்தின் முன் நம்மைப் பரிசுத்தவான்களாக நிறுத்த அவராலேயே முடியும். கர்த்தருடைய வல்லமையைப் பெற்றுக்கொண்டோமானால், அதிலே பூரணமடையத் தக்கதாக, அவருடைய சத்துவத்திலே பெலப்படுவோம். இந்த வல்லமையில் நமது வாழ்வு பரிபூரணமானதாகவும், நடத்தை குற்றமற்றதாகவும், வாழ்க்கை உத்தம மாகவும் இருக்கும்.

? இன்றைய சிந்தனைக்கு:

தேவனுடைய வல்லமை நமக்குப் பின்னால் இருந்து தாங்குமானால், எதுவும் நம் முன் நிற்கமுடியாது என்பதை நம்மால் விசுவாசிக்க முடியுமா?

?  எமது விலாசம்
Back to the Bible (Sathiyavasanam),
120 A, Dharmapala Mawatte, Colombo 7, Srilanka.
Email: sathiyavasanam@backtothebible.lk
website: Backtothebible.lk  |  www.Sathiyavasanam.lk
Facebook: www.fb.com/sathiyavasanam
Call: 011-4691500 | 011- 4691532

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin