📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰

📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு: உபாகமம் 32:1-44

உன்னை ஆட்கொண்டவர் அவரல்லவா!

பூர்வநாட்களை நினை. தலைமுறை தலைமுறையாய்ச் சென்ற வருஷங்களைக் கவனித்துப் பார்… உபாகமம் 32:7

கடந்த ஆண்டின் கசப்புகள், பயங்கள். எதிர்பார்ப்புகள் யாவும் கடந்து ஒரு புதிய ஆண்டுக்குள் கர்த்தருடைய கிருபையால் நுழைந்த நாம் இன்று அதில் ஒரு மாதத்தையும் கடந்து வந்துவிட்டோம். மாதத்தின் கடைசி நாளாகிய இன்று, மோசேயின் இந்தப் பாடல்வரிகள் இன்று நம்மை விழித்தெழப்பண்ணட்டும். “உன்னை ஆட்கொண்ட பிதா அவரல்லவா? உன்னை உண்டாக்கி உன்னை நிலைப்படுத்தினவர் அவரல்லவா?”

 “பின்னானவைகளை மறந்து” என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன? நாம் விட்டுவந்த பாவங்களை நிச்சயமாகவே நாம் திரும்பி நினைக்கவே கூடாது; நினைத்தால் அது நம்மைப் பழைய வாழ்வுக்குள் இழுத்துச்செல்ல வாய்ப்புண்டு. கர்த்தர் நம்மைக்கொண்டு செய்தவற்றைத் திரும்பிப் பார்த்தாலும் பெருமை கொள்வது ஆபத்து; கர்த்தர் நம்மைக் கண்டுபிடித்தபோது நாம் சேற்றில் கிடந்தோமே, நம்மை மீட்கக் கர்த்தர் செய்தவை, நடத்திவந்த பாதை, தேவைகளைச் சந்தித்தமையை மறந்து விடவும்கூடாது. அன்று கானானுக்குள் பிரவேசிக்க ஆயத்தமாயிருந்த இஸ்ரவேலிடம் மோசே அதைத்தான் நினைவுபடுத்தினார். “விவேகமில்லாத மதிகெட்ட ஜனங்களே, இப்படியா கர்த்தருக்குப் பதிலளிக்கிறீர்கள்” என்றும், “பாழான நிலத்திலும் ஊளையிடுதலுள்ள வெறுமையான அவாந்தரவெளியிலும் அவர் அவனைக் கண்டுபிடித்தார். அவனைத் தமது கண்மணியைப் போலக் காத்தருளினார். கழுகு தன் கூட்டைக் கலைத்து, தன் குஞ்சுகளின்மேல் அசைவாடி, தன் செட்டைகளை விரித்து, அவைகளை எடுத்து, அவைகளைத் தன் செட்டை களின்மேல் சுமந்துகொண்டு போகிறதுபோல, கர்த்தர் ஒருவரே அவனை வழிநடத்தினார்.” (உபாகமம் 32:10-12) என்றும் கூறுகிறார். என்ன அற்புதமான வார்த்தைகள்!

ஏராளமான கிறிஸ்தவ பாடல்கள் நம்மைச் சுற்றி ஒலித்துக்கொண்டே இருக்கின்றன. கவர்ச்சியான நவீன ராகம், பின்னணி இசை, பாடகரின் குரல் என்று பலவித கவர்ச்சிகளால் இழுவுண்டு சத்தியத்தைத் தவறவிட்டு விடக்கூடாது. நாம் தவறின இடங்கள், நம் வாழ்வின் அசுத்தங்கள், கர்த்தரை மறந்தவேளைகளுக்காக மன்னிப்புக் கேட்டு, நமது பரிசுத்த வாழ்வுக்கு உரமூட்டி, பரமகானானுக்குள் பிரவேசிக்க எச்சரித்து உணர்த்துகிற பாடல்களை, பரிசுத்தத்தையே நாம் வாஞ்சிக்க வேண்டும். நாம் என்ன செய்கிறோம்? “பரிசுத்தம் ஒன்றையே வாஞ்சிக்கிறேன், ஆனால் ஏனோ பலமுறை தவறுகிறேன். உம்மாலன்றி என்னால் இயலாதைய்யா. பரிசுத்தம் காத்திட பலன் தந்திடும்” பாடல் வரி என் நினைவுக்கு வருகின்றன. கர்த்தரைத் துக்கப்படுத்தின தருணங்கள், வார்த்தையைப் புறக்கணித்து இச்சைகளுக்கு இணங்கிய நேரங்களை, பின்னானவைகளைத் தள்ளி விடுவோம். தமது பிள்ளையாக நம்மை ஏற்றுக்கொண்ட கர்த்தரைச் சேவித்து, இரட்சகராகிய இயேசுவோடு நடந்து, பரிசுத்த ஆவியானவரைப் பிரியப்படுத்துவோமா!

💫 இன்றைய சிந்தனைக்கு:

நாளை அல்ல; இன்றே அமர்ந்திருந்து, கர்த்தர் நடத்திவந்த பூர்வநாட்களைச் சிந்தித்து, கர்த்தரைத் தாழவிழுந்து பணிந்து துதிப்போம்.

📘 அனுதினமும் தேவனுடன்.

243 thoughts on “31 ஜனவரி, 2022 திங்கள்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Solverwp- WordPress Theme and Plugin