📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰

📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: 2இராஜாக்கள் 5:20-37

பொருளாசை

…நாகமானின் குஷ்டரோகம் உன்னையும், உன் சந்ததியையும் என்றைக்கும் பிடித்திருக்கும் என்றான். உடனே அவன் …குஷ்டரோகியாகி, 2இராஜாக்கள் 5:37

தான் தொட்டதெல்லாம் பொன்னாக விளங்கவேண்டும் என்று ஆசைப்பட்டு வரங்கேட்டு பெற்றுக்கொண்ட அரசன், தனது உணவைத் தொட்டதும் அதுவும் பொன்னாகியதாம், தண்ணீரைத் தொட்டால் அதுவும் பொன்னாகியது. இறுதியில் உணவின்றியே அவன் செத்துமடிந்ததாக ஒரு கதை உண்டு. இதுதான் பொருளாசை. நாகமான், எலிசாவுக்கு வெகுமதி கொடுக்க மனதாயிருந்தும், அதை வாங்கிக்கொள் ளாத எலிசா, நாகமானைச் சமாதானத்தோடே அனுப்பிவிட்டான். அவனும் போய் விட்டான். ஆனால், எலிசாவின் வேலைக்காரனான கேயாசி, எலிசா வாங்காமல் விட்டபொருட்களில் சிலவற்றையாகிலும் பெற்றுக்கொள்ள விரும்பி நாகமானின் இரதத்தின் பின்னால் ஓடிச்சென்றான். அவன் ஓடி வருகிறதைக் கண்ட நாகமான் இரதத்தை நிறுத்தி, சுகசெய்தி விசாரித்தபோதும், கேயாசி தனக்கு வேண்டும் என்றுகூடக் கேட்டு வாங்காமல், வந்திருந்தவர்களுக்குக் கொடுப்பதற்காக தனது எஜமான் வாங்கிவரச்சொன்னதாக கூறிவிட்டான். நாகமானும் சந்தோஷத்தோடு கேட்டதிலும் அதிகமாகவே கொடுத்து அனுப்பினான். கேயாசி அவற்றைக் கொண்டுவந்து வைத்துவிட்டு, எலிசாவின் முன்பாக ஒன்றுமே தெரியாதவன்போல நிற்கிறான். எலிசா எங்கேயிருந்து வருகிறாய் என்ற போதும், தான் எங்கும் போகவில்லையென்று பொய்யுரைத்தான். இதனால் எலிசா நாகமானின் குஷ்டம் உன்னையும் உன் குடும்பத்தையும் பற்றிக்கொள்ளும் என்று சொல்ல, உடனே அவன் குஷ்டரோகியானான். கேயாசி, பொருளாசைக்கு அடிமை யானான். பொருளாசை அவனைப் பொய்சொல்ல வைத்தது. பின்னர் செய்ததையும் சொன்னதையும் மறைத்துவைக்கும்வரைக்கும் அவனை இட்டுச்சென்றுவிட்டது.

பொருளாசை, இது கொடிய பாவம். நமக்கு இருப்பதுபோதும் என்றால் பொருளாசைக்கு இடமேது? பொருளாசைக்குள் சிக்கிக்கொண்டவர்கள் திருப்தியடையவே மாட்டார்கள். கொரிந்தியருக்குப் பவுல் எழுதியபோதும், பொருளாசைக்காரன் பரலோக ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை என்றே குறிப்பிடுகிறார். லூக்கா 12:1 ல் இயேசு கூறும்போதும், பொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாய் இருங்கள் என்கிறார். ஒருவனுக்குத் திரளான ஆஸ்தியிருந்தாலும் அது அவனுக்கு ஜீவனல்ல என்கிறார். பொருளாசை நம்மை மாத்திரமல்ல, மற்றவனையும் தாக்கும்படி நம்மை நடத்திவிடும். ஆகவே, ஜாக்கிரதையாக மனந்திரும்புவோம். நமது தேவைகளைத் தேவன் சந்திப்பார்.

நிச்சயமாகவே, பொருளாசைக்கு விலகி நிற்க பழகிக்கொள்வோம். தேவன் ஒருபோதும் கைவிடவே மாட்டார். நிர்வாணியாய் என் தாயின் கர்ப்பத்தில் இருந்து வந்தேன், நிர்வாணியாய்த் திரும்புவேன். யோபு 1:21

💫 இன்றைய சிந்தனைக்கு:

தேவை என்பதற்கும் பொருளாசைக்கும் வேறுபாடு என்ன? இதைக்குறித்த என் மனநிலையை உண்மைத்துவத்துடன் சிந்திப்பேனாக.

📘 அனுதினமும் தேவனுடன்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *