? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : சங்கீதம் 51

உடைந்த கண்ணாடித் துண்டுகள்

தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும். நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும். சங்கீதம் 51:10

அருமையானதொரு முகம்பார்க்கும் கண்ணாடி, விழுந்து, பல துண ;டுகளாக உடைந்து கிடந்தது. இதைப் பார்த்தவர்கள் சிலரது கருத்துக்கள் இதோ! “பாவத்தில் விழுகிற வன் வாழ்வும் இப்படித்தான் துண்டுதுண்டாகிறது” என்றார் ஒருவர். “இதனால் இனி உபயோகம் இல்லை” என்றார் இன்னொருவர். ஆனால், ஒரு வாலிபன் என்ன சொன்னான் தெரியுமா? “என் வாழ்வு துண்டு துண்டானதுபோலத் தெரிந்தாலும், இதோ, குனிந்து பாருங்கள். ஒவ்வொரு கண்ணாடித் துண்டிலும் நான் தெரிகிறேன். ஆம், இது உடைந்ததால் நான் இப்போது பெருகி, அதிக பெலவானாகிவிட்டேன்” என்றான்.

 தீர்க்கதரிசியின் மூலமாக தாவீதின் குற்றம் உணர்த்தப்பட்டபோது, அவர் உடைந்து நொருங்கியிருப்பார். அதனால்தான் அழுது புலம்பினார். அதற்காக, அவர் வாழ்வை முடித்துக்கொள்ளவில்லை. தவறு எங்கே என்பதை உணர்ந்தார். தேவனைப் பிரியப் படுத்துவதிலும் பார்க்க, நமது விருப்பங்களை நிறைவுசெய்வதே பாவத்தில் விழுந்த மனிதவியல்பு. அதை உணர்ந்தார் தாவீது. தான் துர்க்குணத்தோடு பிறந்ததை உணர்ந்து, தனது இருதயத்தைச் சுத்திகரிக்கும்படி மன்றாடினார். இருதயசுத்தியே தேவனோடு இணைந்து வாழும் ஒரே வழி. தன் வாழ்வு உடைந்துபோய் உதவாமற்போன கண்ணாடி போன்று காணப்பட்டாலும், தனது உள்ளத்திலே நிலைவரமான ஆவியைப் புதுப்பிக்கும் படி கேட்டு ஜெபித்தார். இதனால், உடைந்துபோன தன் வாழ்விலே அவர் அதிகமாகப் பெலப்படுத்தப்பட்டார்.

நம்மில் யாராவது, “என் வாழ்வு உடைந்த கண்ணாடித் துண்டுகள்போல ஆகிவிட்டது” என்று வேதனைப்படுகிறீர்களா? என்ன சூழ்நிலையாயினும் உடைந்த இருதயத்தைத் தேவ கரத்தில் ஒப்புக்கொடுங்கள். அவர் அதைக் கைகளில் எடுத்துவிட்ட விசுவாசத்துடன் இப்போது உங்கள் உடைந்த வாழ்வை நோக்கிப் பாருங்கள். அது உடைந்தது உண்மைதான். ஆனால், அந்த உடைவுகளுக்கூடாகவே நீங்கள் பலுகிப்பெருகி பெலன் அடைந்திருப்பது தெரியும். இப்போது முன்னிலும் அதிக பலத்துடன் சத்துருவை எதிர்கொண்டு ஜெயிக்கலாம். உடைந்த உனது வாழ்வை நீ எப்படிப் பார்க்கிறாய் என்பதிலேதான் எல்லாம் தங்கியிருக்கிறது. நீ உதவாமற்போனாய் என்று சாத்தான் பரிகாசம்பண்ணுவான். ஆனால் நமக்குள் வாழும் பரிசுத்த ஆவியானவரின் உதவி யோடு அவனை மேற்கொள்ள முடியும். அவரை எதிர்த்து அவனால் போராட முடியாது. ஆகவே உடைந்த துண்டுகளைப் பரிசுத்த ஆவியானவரிடம் ஒப்புவிப்போம். அவர் நம்மை நிச்சயம் பலப ;படுத்தி நமது கண்ணோக்கை மாற்றி, சத்துருவைத் தோற்கடிப்பார்.

? இன்றைய சிந்தனைக்கு:  

என் உடைவுகளை நான் பார்க்கின்ற என் பார்வையைத் தேவன் மாற்றிப்போடவும், அல்லது, இந் நிலையில் இருக்கிறவர்களுக்கு நான் சாட்சியாயிருக்கவும் என்னை ஒப்புவிப்பேனா?

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin