? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : சங்கீதம் 71:1-23

வயது ஒரு பொருட்டே அல்ல!

…முதிர்வயதும் நரைமயிருமுள்ளவனாகும் வரைக்கும் என்னைக் கைவிடீராக. சங்கீதம் 71:18

வெளியே அல்ல, உள்ளான மனுஷனில் யாராய் இருக்கிறோமோ அதுவே நமது உண்மை நிலை. முதிர்வயதாகி, சமகால நினைவுகள் மறக்கப்பட்டு, பழைய நினைவுகள் துளிர்விடும் நிலைக்குத் தள்ளப்படும்போது (டிமென்ஷியா), முதியவர்களும் எதையும் மறைக்கத் தெரியாத சிறுபிள்ளைபோல ஆகிவிடுகிறார்கள். சில முதியவர்களின் நடப்புகள் ஆச்சரியத்தைத் தரும். கடினமானவர்களாகத் தெரிந்தவர்கள் சிலர் அமைதி யாக மாறியிருப்பர்; சாந்தமாகக் காட்சியளித்த பலர் தலைகீழாக நடந்துகொள்வர். அவரா இவர் என்று திகைக்குமளவுக்கு பேச்சும் நடத்தையும் மாறியிருக்கும். ஆதலால், உணர்வும், நினைவும் நன்றாயிருக்கும்போதே குணாதிசயங்களைச் சரிசெய்துவிடுவது அவசியம். தவறும்பட்சத்தில் நாம் கேலிக்குரியவர்களாக மாறக்கூடும்.

71ம் சங்கீதத்தை எழுதியவர் வயது முதிர்ந்தவரும், சிறுவயது முதற்கொண்டு கர்த்தர் தனக்குச் செய்த யாவுமே பிறருக்குச் சாட்சியாக விளங்குகிறது என்று எழுதியவருமாவார். முதிர்வயதானாலும், அதுவரையிலும் கர்த்தர் அளித்த ஆசிகளை நினைத்துப் பார்த்து, தன் வாழ்வு முழுவதும் கர்த்தருடைய கிருபை தொடர்ச்சியாக நிறைவாக இருந்தது என்று பாடுகிறார். முதிர்வயதும் நரைமயிருமுள்ளவனாகும் வரைக்கும் தன்னைக் கைவிடவேண்டாம் என்று ஜெபிப்பது, தான் சுகமாக வாழவேண்டும் என்பதற்காக அல்ல; இந்தச் சந்ததிக்குக் கர்த்தருடைய வல்லமையையும், வரப்போகிற யாவருக்கும் கர்த்தருடைய பராக்கிரமத்தையும் அறிவிக்குமளவும் தன்னைக் கைவிடவேண்டாம் என்றே ஜெபிக்கிறார். தேவனது இரட்சிப்பை அறிவிக்க வயது அவருக்குத் தடையாக இருக்கவில்லை. அநேக இக்கட்டுகளையும் ஆபத்துக்களையும் அவரும் சந்தித்திருக்கிறார் (வச.20). ஆனாலும், இறுதிவரை கர்த்தருடைய மகிமையைப் பாடித் துதிக்கும்படிக்கு தன்னை மறுபடியும் புதுப்பிக்கும்படி, வயதுமுதிர்ந்த நிலையிலும் கேட்கிறார் என்றால், அவருடைய இருதயம் எதனால் நிறைந்திருந்திருக்கிறது என்பதை சிந்திப்போம்.

கர்த்தருக்கு நமது வயது ஒரு பொருட்டல்ல; கர்த்தருடைய மகிமையை எடுத்துரைக்க நமது வயது நமக்கும் ஒரு பொருட்டல்ல. இன்று, முதியோர் ஒரு கேள்விக்குறியாகவே வாழுகிறார்கள். மனஅழுத்தத்துக்கு ஆளாகி, கவனிப்பாரற்றவர்களாக, மனசந்தோஷம் அற்றவர்களாக, வியாதியோடு சஞ்சலப்படுவது துக்கத்துக்குரியது. ஆனால், கர்த்தருக்குள் எவரும் எந்த வயதிலும் சங்கடப்படவேண்டியதில்லை. “அவர்கள் முதிர்வயதிலும் கனிதந்து புஷ்டியாயிருப்பார்கள்” என்பது தேவவாக்கு. ஆகவே, முதிர்வயதோ, இள வயதோ, தேவ வார்த்தையாலும், துதியினாலும் நமது இருதயத்தை நிரப்புவோமாக. அப்போது எதுவும் நம்மை கர்த்தருக்குள்ளான சந்தோஷத்திலிருந்து பிரிக்கமுடியாது.

? இன்றைய சிந்தனைக்கு:

என் இருதயம் எதனால் நிரம்பியிருக்கிறது? கர்த்தருடைய அன்பை அறிவிக்கப் பெலன்கேட்டு ஜெபிப்பேனாக.

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin