? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: லூக்கா 22:39-48

முத்தத்தினாலேயா?

இயேசு அவனை நோக்கி, யூதாசே, முத்தத்தினாலேயா மனுஷகுமாரனைக் காட்டிக்கொடுக்கிறாய் என்றார். லூக்கா 22:48

முத்தம் செய்தல் என்பது ஒரு அன்பின் வெளிப்பாடு. தாய் தன் குழந்தையை அரவணைத்து முத்தமிடல் நல்லதொரு உதாரணம். வேதாகமத்தில் பல இடங்களில் நாம் இந்த முத்தமிடல் சம்பவத்தை வாசிக்கிறோம். நகோமி தன் மருமக்களை முத்தமிட்டுக் கிளம்புதல், ரூத் 1:9. தாவீது அப்சலோமை முத்தமிட்டான், 2சாமு 14:33. காணாமற்போன இளையமகன் திரும்பி வந்தபோது, தகப்பன் அவனை முத்தஞ் செய்தான் லூக்.15:20. இவைகள் எல்லாமே அன்பின் வெளிப்பாடாகவே அமைந்துள்ளன.

ஆனால் இங்கே யூதாசோ தனது குருவாகிய இயேசுவைக் காட்டிக்கொடுப்பதற்காக இந்த முத்தத்தைப் பயன்படுத்துகிறான். அதாவது, அன்பின் வெளிப்பாடாகிய முத்தத்தைக் கொடுத்து, அவரைப் பகைவரிடம் காட்டிக்கொடுத்தான் யூதாஸ். ஆண்டவர் அவனை நோக்கி: யூதாசே, முத்தத்தினாலேயா மனுஷகுமாரனைக் காட்டிக் கொடுக்கிறாய் என்று கேட்டார். இதை ஒரு வஞ்சகம் அல்லது சூழ்ச்சியென்றே சொல்லலாம்.வெளியில் செய்வதோ ஒன்று; ஆனால் உள்ளத்தில் இருப்பதோ வேறொன்று.

இன்று நாம் என்ன செய்கிறோம்? ‘நேசிக்கிறேன் உம்மைத்தான் ஐயா” என வாயால் பாடுவோம்; ஆனால் ஆண்டவரின் வார்த்தைக்குக் கீழ்ப்படிய மாட்டோம். ஆனால் ஆண்டவரோ, நீங்கள் என் கற்பனைகளைக் கைக்கொண்டிருந்தால் என்னுடைய அன்பிலே நிலைத்திருப்பீர்கள் என்று கூறியுள்ளார். ஆகையால் நாம் அன்பாய் இருக்கிறோம், அவரில் நம்பிக்கையாயிருக்கிறோம், என்று வாயின் வார்த்தைகளால் சொல்லுவதில் பலனில்லை. அதை நாம் எமது வாழ்க்கையில் காட்டவேண்டும். நாம் நாவினால் அன்புகூராமல் முழு இருதயத்தோடும் அன்புகூரவேண்டும்.

யூதாஸ், ‘குற்றமில்லாத இரத்தத்தைக் காட்டிக்கொடுத்து, நான் பாவம் செய்தேன்” என்றான். ஆனால் ஆண்டவரிடம் அவன் மன்னிப்புக் கேட்கவில்லை. கேட்டிருந்தால் ஆண்டவர் அவனையும் மன்னித்திருப்பார். ஆனால் அவனோ தனது முடிவைத் தானே தேடிக்கொண்டு, நான்றுகொண்டு செத்து தனது அழிவுக்குத் தானே காரணமானான். நாம் அப்படியிருக்க வேண்டாம். ஆண்டவரிடம் நாம் கொண்டிருக்கின்ற அன்பைப் பரிசீலித்துப் பார்ப்போமாக. தவறு இருந்தால் மனஸ்தாபப்பட்டு மனந்திரும்புவோம். யூதாசைக் குற்றம்சொல்லும் நாம் அவனைப்போல மாறிவிடவேண்டாம். விழிப்புடன் இருப்போம். நாமும் இயேசுவை முத்தத்தினால் காட்டிக்கொடுக்கின்றவர்களாக இராதபடி எச்சரிக்கையாயிருப்போம். ‘தேவன் அதை ஆராய்ந்து, விசாரியாதிருப்பாரோ? இருதயத்தின் அந்தரங்கங்களை அவர் அறிந்திருக்கிறாரே.” சங்கீதம் 44:21

? இன்றைய சிந்தனைக்கு:

இயேசுவைக் காட்டிக்கொடுத்தது யூதாஸ், அவரை மறுதலித்தது பேதுரு என்றால், இன்று நான் யார்?

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin