? சத்தியவசனம் – இலங்கை. ?? 

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: யோவான் 4:4-42

சுவிசேஷகியாகிய சமாரியப் பெண்

?   …சாட்சி சொன்ன அந்த ஸ்திரீயினுடைய வார்த்தையினி மித்தம் அந்த ஊரிலுள்ள சமாரியரில் அநேகர் அவர்மேல்; (இயேசு) விசுவாசமுள்ளவர்களானார்கள். யோவா 4:39

இந்த ஸ்திரீ யார்? சமாரியா தேசத்தில் சீகார் ஊரைச் சேர்ந்தவள் இவள். புறஜாதிப் பெண்ணாகிய இவளது வாழ்க்கை சமூகத்தினால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பது, சாதாரணமாக யாரும் தண்ணீர் எடுப்பதற்கு வராத நடுப்பகலில் இவள் மாத்திரம் தனியே  தண்ணீர் மொண்டுகொள்ள வந்ததிலிருந்து விளங்குகிறது. யாக்கோபின் கிணறு அங்கேயிருந்தது. தினமும் பயந்து பயந்து இந்தக் கிணற்றுக்கு வருவதிலும் பார்க்க, மறுபடியும் தாகம் உண்டாகாத தண்ணீர் கிடைத்தால் அது அவளுக்கு வசதிபோல தோன்றியது. ஆனால் நடந்தது என்ன? தன் பாவ ஜீவியத்தின் அந்தரங்க இருளைக் கண்டு, அவளை அவளுக்கு உணர்த்திய மேசியாவை அவள் அந்தக் கிணற்றண்டையிலே கண்டுவிட்டாள். அவளது இருண்ட வாழ்வில் ஒரு மாற்றம் உண்டானது. பெரிய ஒரு விடுதலையை உணர்ந்தாள். அவளால் அதனை அடக்கிவைக்கமுடியவில்லை. தான் வந்த நோக்கத்தையும் மறந்தாள். குடத்தையும் விட்டுவிட்டு ஊருக்குள்ளே ஓடி மற்றவர்களுக்கும் அறிவித்தாள். அவளும் ஊராரும் இயேசுவைக் கண்டார்கள்.

சமாரியப்பெண் பகிரங்கமாகவே பாவியென்று கணிக்கப்பட்டவள். ஆனாலும் அவளுக்கு நியாயப்பிரமாணம், யாக்கோபின் வரலாறு, மேசியாவின் வருகை இவற்றைப்பற்றிய அறிவும் இருந்தது. இல்லையானால் இயேசுவிடமே கேள்வி கேட்டிருப்பாளா? ஆனால்,

அவளது அந்த அறிவு அவளுக்கு விடுதலை அளிக்கவில்லை. அவளிடமே இயேசு குடிப்பதற்குத் தண்ணீர் கேட்டார். ஆண்டவரின் புண்படுத்தாத ஞானமுள்ள வார்த்தை அவளது வாழ்க்கையையே மாற்றிவிட்டது. அவளுக்கு அவளை உணர்த்தினார் ஆண்டவர். அதன்பின் அவளால் சும்மா இருக்கமுடியவில்லை. தனது நிலைமையை மறந்தாள். வெட்கத்தை மறந்தாள். மற்றவர்கள் தான் சொன்னதை ஏற்றுக்கொள்வார் களோ என்றுகூட அவள் தயங்கவில்லை. தான் பெற்ற விடுதலையை மற்றவர்களுக்கு அறிவிக்க ஓடினாள். கூறினாள்@ மக்கள் வந்தார்கள்@ விசுவாசிகளானார்கள்.

பிரியமானவர்களே, சமாரிய பெண்ணால், மீட்பின் செய்தியை பிறருக்கு கூறமுடிந்தது. அவள் பெற்றுக்கொண்ட மீட்பு ஒரு வற்றாத ஊற்றை உள்ளத்தில் ஊற்றெடுக்க வைத்தது. மீட்பைப் பெற்ற அவள், தன்னை மறந்தாள்@ தன் நிலையை மறந்தாள். கிராமத்து மக்கள் தன்னை ஏற்றுக்கொள்வார்களோ என்று சந்தேகம்கூட வரவில்லை. ஓடோடிச் சென்று தனது சாட்சியைச் சொன்னாள். அந்தச் சாட்சி அநேகரின் மீட்புக்கு வழிவகுத்தது. ஆம், சுவிசேஷத்தை ஒருவன் ருசித்திருப்பானேயாகில் அவனே நல்ல செய்தியை, தனக்கு நேரிட்ட அற்புத சாட்சியை அறிவிக்கத் தகுதி பெற்றவன். விடுதலை பெற்றவனுக்குத்தானே சிறைவாசத்தின் வேதனை புரியும். ஆகவே, மீட்கப்பட்டிருக்கிற எவரும் அந்த நல்ல செய்தியைப் பிறருக்கு எடுத்துக்கூறத் தாமதிக்கமாட்டார்கள்.

? இன்றைய சிந்தனைக்கு:

சிந்தனைக்கு: என் வாழ்விலே ஜீவஊற்று ஊற்றெடுக்க ஆரம்பித்த நாட்களை நினைவுகூருவோம். கிறிஸ்துவைப் பற்றி நான் கூறுவேனா?

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin