? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: 1சாமுவேல் 8:10-22

? பாதிக்கும் விளைவுகள்

நீங்கள் தெரிந்துகொண்ட உங்கள் ராஜாவினிமித்தம் அந்நாளிலே முறையிடுவீர்கள். 1சாமுவேல் 8:18

‘நாங்கள் ஆண்டவரின் பிள்ளைகள், கவனமாக உடுத்தவேண்டும்” என்ற அம்மாவின் ஆலோசனையைப் புறந்தள்ளி, தற்காலத்திற்கேற்ற பெஷன் என்று சொல்லி, கவர்ச்சியான ஒரு உடையை விடாப்பிடியாய்த் தெரிவு செய்தாள் ஒரு வாலிப மகள். ஆனால், ‘இதை ஏன் வாங்கினேன்’ என்று வெட்கப்படும்படி வேதனையான சம்பவம் ஒன்று அவளை நிலைகுலையச் செய்தது. அந்த உடையே அவளுக்கு எதிரியானது. எப்பொழுது நமது தெரிவுகளில் ஒரு ஒப்பீடு செய்கிறோமோ, அங்கேதான் தவறு  ஆரம்பிக்கிறது.

அன்று இஸ்ரவேலும் தங்கள் தேவனை விட்டு, மற்றவர்களைப்போல தங்களுக்கும் ஒரு ராஜா வேண்டுமென்று கேட்டபோது, சாமுவேல் திகைத்தார்; கர்த்தரோ, தாம் மீட்டு வந்த தமது ஜனம் தம்மைத் தள்ளிப்போட்டது என்று வேதனைப்பட்டார். கர்த்தர் சொன்னபடியே சாமுவேலும், அவர்கள் விரும்புகிற ராஜாவின் ஆட்சியில் என்ன நடக்கும்  என்பதையெல்லாம் திடசாட்சியாய் அறிவித்தான். அதைத்தான் இன்று வாசித்தோம். உங்கள் பிள்ளைகளை அவன் தன் வேலைக்கென்று எடுத்துக்கொள்வான், தோட்டங்களை அபகரிப்பான் என்று, கர்த்தரைவிட்டு இன்னொரு ராஜா வேணும் என்ற அவர்களுடைய தெரிவின் எதிர்மறையான காரியங்களைக் கவனமாகவே சொன்னார். ஆனால் அவர்களோ கேட்கவில்லை. ‘உங்கள் தெரிவின் விளைவாக முறையிடுவீர்கள்; கர்த்தர் கேளார்” என்றும் சொன்னார். அதற்கும் அவர்கள் செவிகொடுக்கவில்லை. அப்படியே ராஜாக்களின் ஆளுகையில் இஸ்ரவேல் எப்படித் தேவனைவிட்டு பின்வாங்கி தத்தளித்தது என்பதை நாம் அறிவோம்.

தேவன் நமக்களித்த தெரிவு சுதந்திரத்தில் அவர் குறுக்கிடமாட்டார். ஏனென்றால் அது சுதந்திரம். தெரிவு தவறல்ல; ஆனால் அதன் நோக்கம் பிழைத்துவிட்டால், வாழ்வு ஆட்டம் காணும். அநேகமாக தெரிவு என்று வரும்போது, அதன் எதிர்மறையான விளைவுகள் எப்படியிருக்கும் என்ற ஒரு கணக்கையும் நாம் போட்டுப்பார்ப்பது அவசியம்.

அநேகமாக நமது தெரிவுகள் பிறருடைய மதிப்பீட்டை நாடுகிறது. அதிலும், நமக்கென்று இருப்பதை விடுத்து, இன்னொன்றுக்கு மனது தாவுகிறது என்றால், அங்கே ஒரு ஒப்பீடு தலையிடுகிறது. ‘அவனைப்போல, அவர்களைப்போல” இதுதான் சத்துருவின் சோதனை. இங்கேதான் நமக்கு பரிசுத்த ஆவியானவருடைய ஒத்தாசை தேவை. முக்கியமாக நமக்கென்று இருப்பதில் மனரம்மியமாக இருக்கக் கற்றுக்கொண்டால் அதுவே வாழ்வின் பெரிய வெற்றியாகும். ‘உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள். நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே.” எபிரெயர் 13:5

? இன்றைய சிந்தனைக்கு :

இன்று நான் எதையாவது அடைய விரும்பியிருக்கிறேனா? சற்று அமர்ந்து அதன் நன்மை தீமைகளை தேவனுடைய கண்ணோட்டத்தில் நின்று நிதானித்து முடிவு எடுப்பேனாக.

? அனுதினமும் தேவனுடன்.

?♂️ எமது விலாசம்

Back to the Bible (Sathiyavasanam),
120 A, Dharmapala Mawatte, Colombo 7, Srilanka.
Email: sathiyavasanam@backtothebible.lk
website: Backtothebible.lk  |  www.Sathiyavasanam.lk
Facebook: www.fb.com/sathiyavasanam
Call: 011-4691500 | 011- 4691532

Solverwp- WordPress Theme and Plugin