? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: யோவான் 6:64-71

பிசாசாயிருக்கிறான்!

இயேசு அவர்களை நோக்கி, பன்னிருவராகிய உங்களை நான் தெரிந்துகொள்ளவில்லையா? உங்களுக்குள்ளும் ஒருவன் பிசாசாயிருக்கிறான் என்றார். யோவான் 6:70

முற்றும் துறந்த முனிவர்கள் இருவர் ஒரு ஆற்றைக் கடக்க முற்பட்டபோது, அங்கே ஒரு பெண் உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பதைக் கண்டனர். அவளைக் காப்பாற்ற ஒருவர் எண்ணியபோது, மற்றவர் அப்படிச் செய்யாதே, நாம் பெண்ணைத் தொடக்கூடாது என்றான். ஆனால் முன்னவரோ ஆற்றில் இறங்கி அப்பெண்ணைக் காப்பாற்றி கரை சேர்த்துவிட்டு பின்னர் மீண்டுமாக இருவரும் பயணத்தைத் தொடர்ந்தனர். சில தூரம் சென்றபின்னர் அந்த இரண்டாமவர், பெண்ணைக் காப்பாற்றியவரிடம், ‘தீட்டு என்று தெரிந்தும் அந்தப் பெண்ணைத் தொட்டாயே, எப்படியிருந்தது” என்று கேட்டாராம். திகைத்துப்போன அந்த முன்னவர், ‘நான் அந்தப் பெண்ணைக் காப்பாற்றி அங்கேயே விட்டுவிட்டு வந்துவிட்டேன். ஆனால் நீயோ இன்னமும் அந்தப் பெண்ணைச் சுமந்து கொண்டிருக்கிறாயே” என்றாராம்.

இயேசுவே பன்னிருவரையும் சீஷராகத் தெரிந்தெடுத்தார். அவர்களுக்கு அநேக நற்காரியங்களைச் சொல்லிக் கொடுத்து தம்முடனேயே வைத்திருந்து, தமது ஊழியத்திலும் பங்கெடுக்கச் செய்தார். ஆனால் அவர்களில் ஒருவனான யூதாசின் எண்ணங்களோ வேறுபட்டவையாக இருந்தது. அவன் கிறிஸ்து வந்ததன் நோக்கத்தை அறிந்துகொள்ளவில்லை. அவரைக் குறித்து ஏதோ மேன்மையான நோக்கத்தைக் கொண்டிருந்த வன்போல அவரைக் காட்டிக்கொடுக்கத் துணிந்துவிட்டான். அவனுடைய பணஆசை பரிசேயர், வேதபாரகரின் சூழ்ச்சிக்குள் அவனை மாட்டிவிட்டது.

யூதாஸ் என்பவன் கிறிஸ்துவோடுதான் இருந்தான். ஆனால் ஆண்டவரோ அவனைப் பிசாசு என்றே அழைக்கிறார். காரணம், அவனது சிந்தனைகள், செயல்கள் எல்லாமே ஆண்டவருக்கு விரோதமாக பிசாசின் சிந்தைபோல இருந்தது. நாமும் ஆண்டவரோடு இருப்பது மாத்திரம் முக்கியம் கிடையாது. அவரோடு நாம் வாழவேண்டும். அவரது வார்த்தைகள் எம்மில் வாழவேண்டும். ஆண்டவர் பிதாவின் சித்தம் செய்யவென்றே இவ்வுலகிற்கு வந்தார். முடிவுபரியந்தமும் அவரது நோக்கம் அதுவாகவே இருந்தது. ஒருவேளை ஆண்டவரைக் காட்டிக்கொடுத்தாலும் அவர் தமது வல்லமையால் தப்பி பெரியதொரு ராஜ்யத்தைக் கட்டுவார், தானும் அதில் ஆளுகை செய்யலாம் என்று யூதாஸ் நினைத்திருப்பானோ என்னவோ! அவனது சிந்தனைகள் ஆண்டவரின் சிந்தனைக்கு ஒவ்வாததாகவே காணப்பட்டது. என்னை ஒருவன் காட்டிக்கொடுப்பான் என்று ஆண்டவர் சொல்லியும் அவன் தனது திட்டத்தைக் கைவிடவில்லை. இந்தப் பரிசுத்த வாரத்திலே நாமும் எமது சிந்தனைகளைப் பரிசுத்தமாய்க் காத்துக்கொள்வோம். தேவனுக்குப் பிரியமற்ற எதையும் எமது சிந்தைக்குள் எடுக்காதிருப்போம். கிறிஸ்து இயேசுவில் இருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது. பிலி.2:5

? இன்றைய சிந்தனைக்கு:

எனது சிந்தையில், செயலில் வாழ்வில் கிறிஸ்து இருக்கிறாரா? அவரை நான் பிரதிபலிக்கின்றேனா?

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin