? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: 1தீமோத்தேயு  1:12-18, 4:12-16

உண்மைத்துவமும் உற்சாகப்படுத்துதலும்

…இயேசுகிறிஸ்து என்னை உண்மையுள்ளவனென் றெண்ணி, இந்த ஊழியத்திற்கு ஏற்படுத்தினபடியால், அவரை ஸ்தோத்திரிக்கிறேன். 1தீமோத்தேயு 1:12

இன்று யார் யாரோ அறிவுரைசொல்ல எழும்பிவிட்டார்கள். அறிவுரை சொல்லவும் ஒரு தகுதி வேண்டுமல்லா! தன் வாழ்வில் மனந்திரும்புதல் இல்லாதவன் எப்படி மற்றவன் மனந்திரும்பும்படி அறிவுரை சொல்லலாம்? அதேசமயம், தனது மனந்திரும்பிய வாழ்வின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும்போது, தனது முன்னிலைமை எப்படி யாக இருந்தது என்பதையும் கர்த்தருக்கு மகிமையாக எடுத்துக்கூறுவது அவசியம். அது, அறிவுரையைக் கேட்கிறவர்களும் அதன்படியே தங்களைத் திடப்படுத்தி தீர்மானம் பண்ணிக்கொள்ள உதவியாயிருக்கும். தினமும் ஜெபிக்கின்ற பெற்றோரால்தான் வேதம் வாசித்து ஜெபிக்கும்படி தங்கள் பிள்ளைகளுக்குக் கூறமுடியும்.

இன்றைய வேதவாசிப்புப் பகுதியிலே, தன்னைப் பெலப்படுத்துகிற கர்த்தராகிய இயேசு தன்னை உண்மையுள்ளவனென்று எண்ணி இந்த ஊழியத்தில் தன்னை ஏற்படுத்தினார் என்று பவுல் வெளிப்படையாக தீமோத்தேயுவுக்கு எழுதுகிறார். “உண்மையுள்ளவனென்று எண்ணி..” என்னையும் அவர் ஏற்படுத்தினாரே என்ற தொனி இங்கே தொனிக்கிறது. அதாவது தனது முன்னான நிலையை எடுத்துரைக்க அவர் வெட்கப்படவில்லை. அவிசுவாசத்தினாலே அப்படிச் செய்தபடியினால் இரக்கம் பெற்றதாக விளக்குகிறார் (1தீமோ.1:13). இப்போது தன்னில் கர்த்தரின் கிருபை பெருகியிருப்பதை அறிக்கையிடுகிறார் (1தீமோ.1:14). பவுலின் இந்த வார்த்தைகள் தீமோத்தேயுவின் விசுவாசத்தைப் பெலப்படுத்தித் திடப்படுத்தியதுடன். கர்த்தரில் கொண்டிருந்த அன்பையும் பெருகச் செய்தது. விசுவாசமும் நல்மனச்சாட்சியும் என்றும் அவசியம், மாதிரியாயிரு, ஜாக்கிர தையாயிரு, அசதியாயிராதே, நிலைத்திரு என்றெல்லாம் பவுல் தீமோத்தேயுவுக்கு ஆலோசனை சொல்ல முற்றிலும் தகுதிபெற்றிருந்தார் என்பதை நாம் காண்கிறோம். இதன் பலனாக உபதேசத்தைக் கேட்பவர்களையும் இரட்சித்துக்கொள்ளமுடியுமென்று பவுல் தொடர்ந்தும் ஆலோசனை கூறுகிறார்.

நாம் பவுல் அல்ல, ஆனாலும், அவரைப்போல நமது வாழ்வு மாற்றமடைந்து சாட்சி யாக, பிறருக்கு மாதிரியாய் மாறவேண்டுமல்லவா? முன்னர் நாம் எப்படியோ வாழ்ந்திருக்கலாம். ஆனால் அந்தச் சேற்றினின்று கர்த்தர் நம்மைத் தூக்கியெடுத்ததைநம்மால் சாட்சியாகக் கூறமுடியுமானால் அதுதான் சாட்சி. தூக்கியெடுக்கப்பட்டவனுக்குத்தான் சேற்றின் கொடுமை தெரியும். அவனால்தான் அடுத்தவனுக்கு ஆலோசனை கூறமுடியும். நாம் உண்மைத்துவமுள்ளவர்களாக இருந்தால் அடுத்தவன் உற்சாகமடைவான். அடுத்தவனுக்கு ஆலோசனை சொல்லுமுன்னர் நம்மை நாமே ஆராய்ந்து பார்ப்போம். நான் வருமளவும் வாசிக்கிறதிலும் புத்திசொல்லுகிறதிலும் உபதேசிக்கிறதிலும் ஜாக்கிரதையாயிரு. (1தீமோ.4:13)

? இன்றைய சிந்தனைக்கு:

பிறரையும் திடப்படுத்துமளவுக்கு என் வாழ்வு கர்த்தருக்குள் திடமாயிருக்கிறதா?

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin