? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: 2இராஜாக்கள் 5:1-9

சிறுபெண் சொன்ன நற்செய்தி

என் ஆண்டவன் சமாரியாவிலிருக்கிற தீர்க்கதரிசியினிடத்தில் போவாரானால் நலமாயிருக்கும். அவர் இவருடைய குஷ்டரோகத்தை நீக்கிவிடுவார்… 2இராஜாக்கள் 5:3

தற்கொலை செய்ய நினைத்த ஒரு பெண், மருந்துக்கடையில் தூக்கமாத்திரைகளை வாங்கினாள். கடைக்காரரும் அந்த மாத்திரைகளை ஒரு கடதாசியில் சுற்றிக் கொடுத்துவிட்டார். மாத்திரைகளை விழுங்குவதற்காக அவள் அந்தப் பொதியைத் திறந்தாள்.

அந்தக் கடதாசியில் எழுதப்பட்டிருந்த ஒரு வேதவசனம் அவள் இருதயத்தை உடைத்தது. அவள் தனது முடிவை மாற்றிக்கொண்டு, மனந்திரும்பினாள். அன்று அந்தக்கடதாசியில் இருந்த வசனம் அவளுக்கு ஒரு நற்செய்தியாக இருந்தது. நாகமான் ஒரு படைத்தலைவன், அவனைக்கொண்டு கர்த்தர் சீரியாவுக்கு இரட்சிப்பைக் கட்டளையிட்டார். அவன் மிகுந்த பராக்கிரமசாலி. ஆனால் அவன் ஒரு குஷ்டரோகியாக இருந்தான். குஷ்டரோகம் என்பது அக்காலத்தில் மிகவும் பயங்கரமான கொடிய வியாதியாகவே இருந்தது. அதனால் நாகமான் ஒருவேளை மனஉளைச்சலுக்கும் ஆளாகி

இருப்பான். இந்த நேரத்தில், இஸ்ரவேலில் இருந்து சிறைப்பிடிக்கப்பட்டு, நாகமானின் மனைவிக்கு பணிவிடை செய்துகொண்டிருந்த ஒரு சிறுபெண், நாகமானின் குஷ்டம் நீங்க ஒரு வழியைக் காட்டுகிறாள். அதை நாகமான் அறிந்துகொண்டபோது, அவள் ஒரு சிறு பெண் என்று அலட்சியம்பண்ணாமல் அவன் புறப்படுகிறான். பராக்கிரமசாலியான நாகமான், அச்சிறுபெண்ணின் பேச்சைக் கேட்டுப் புறப்பட்டான் என்றால், அந்த வியாதி அவனுக்கு எவ்வளவு பெரிய தொல்லையாக இருந்திருக்கும்?

அந்தச் சிறுபெண் சொன்ன காரியத்தை நம்பிப்போன நாகமான், தீர்க்கதரிசிக்கும் கீழ்ப்படிந்ததால் சுகத்தைப் பெற்றுக்கொண்டான். அப்பெண் சொன்ன காரியம் நாகமானுக்கு ஒரு நற்செய்தியாகவே இருந்தது. அவள் சொல்லியிராவிட்டால், அவன் குணமடைந்திருக்க முடியுமா? அச்சிறுபெண் சொன்னதை அவன் கேட்டுச் செயற்பட்டி ருக்காவிட்டால் குணமடைந்திருக்க முடியுமா? ஆக, ஒருவரின் விடுதலைக்கு நற்செய்தி கூறப்படவும், அதைக் கேட்கவும் வேண்டும், அதற்குக் கீழ்ப்படியவும் வேண்டும்.

ஒரு குஷ்டம்போலவே இன்று பாவமும் மனிதரைப் பீடித்துள்ளது. பாவத்தால், பிடிபட்ட அநேகர் நம் கண்முன்பே மடிந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு விடுதலையின் நற்செய்தியை நாம் அறிவிக்கவேண்டாமா? நாம் சொன்னால்தான் அவர்கள் கேட்பார் கள், கேட்டால்தான் நம்புவார்கள், நம்பினால்தான் செயற்படுவார்கள். ஆகையால் முதற்படியை நாம்தான் எடுத்துவைத்து, நற்செய்தியை அறிவிக்கவேண்டும். அந்த நற்செய்தியின் சாட்சிகளாக நாம் இருப்போமானால், அடுத்தவன் அவதிப்படுவதைப் பார்த்திருக்கமாட்டோம். “…அவர் தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்து நற்செய்தியைக் கூறிப் பிரசங்கித்து வந்தார்.” லூக்கா 8:1

? இன்றைய சிந்தனைக்கு:

நற்செய்தியைக் கூறி அறிவித்த அனுபவம் உண்டா? அதனாலுண்டான விடுதலையின் சந்தோஷத்தை அனுபவித்திருக்கிறேனா?

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin