? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு: லேவியராகமம் 20:1-27

பரிசுத்தமாக்குகின்ற கர்த்தர்!

…நான் உங்களைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தர். லேவியராகமம் 20:8

இவ்வுலக வாழ்வின் தேவைகளுக்கெல்லாம் தேவனுடைய வாக்குத்தத்தங்களைத் தேடி நாடி நிற்கிற நாம், நித்தியத்திற்கு அடுத்த வாக்குத்தத்தங்களைத் தேடி அவற்றைச் சுதந்திரித்துக் கொள்கிறோமா? “என் கட்டளைகளைக் கைக்கொண்டு நடவுங்கள், நான் உங்களைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தர்” என்று கர்த்தர் வாக்களித்திருக்கிறார். இங்கேயும் ஒரு நிபந்தனை உண்டு. கர்த்தருடைய கட்டளைகளைக் கைக்கொண்டு அதன்படி நாம் நடக்கவேண்டும். ஆனால் வாக்களிக்கப்பட்ட ஆசீர்வாதமோ நிலையானது, பரலோக வாழ்வுக்கு மாத்திரமன்றி, இவ்வுலக வாழ்வுக்கும் மிக அவசியமானது. “உன்னை மாசற்றவனாகக் காத்துக்கொள்” என்று பவுலும் தீமோத்தேயுவுக்கு எழுதியுள்ளார். “உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறதுபோல நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள்” என்று பேதுருவும் எழுதியுள்ளார். இந்தப் பரிசுத்த வாழ்வைக்குறித்த நமது மனநிலை என்ன?

“எர்மின் சால்வை” என்றதொரு அலங்கார போர்வையைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஆசியக் காடுகளில் வசிக்கின்ற, அழகான வெண்மை நிறத்தோலைக்கொண்ட இவ் விலங்கு தனது வெண்மையான தோலிலே ஒரு சிறு அழுக்கேனும் பட்டுவிட்டால் அதனை தாங்கிக்கொள்ளாதாம். இதனை வேட்டைக்காரர் தமக்குச் சாதகமாக்கிக் கொள்வார்கள். இதன் இருப்பிடமாகிய மரப்பொந்தையோ, பாறைப்பொந்தையோ கண்டு பிடித்தால், அவ்விடத்தில், அசுத்தத்தைப் பூசிவிடுவார்களாம். பின்னர் வேட்டை நாய்களை ஏவிவிடும்போது, விலங்குகளோ பாதுகாப்பிற்காகத் தங்கள் இருப்பிடத்தை நோக்கி ஓடும். அசுத்தத்தைக் கண்டதும், அல்லது உணர்ந்ததும், அழுக்குப்படுத்திக்கொள்ள விரும்பாத அந்த மிருகங்கள், கூட்டிற்குள் செல்ல மனதில்லாமல் நாய்களை எதிர்க்குமாம். அதன்போது, வேட்டைக்காரன் வேலை சுலபமாக்கிவிடுமாம். தனது வெண்மையான உடல் அசுத்தப்படுவதைக் காட்டிலும், இரத்தத்தால் கறைப்படுவது நல்லதென்ற பகுத்தறிவற்ற ஒரு காட்டுவிலங்கின் குணநலன் இருக்கையில், தேவ சாயலில் சிருஷ்டிக்கப்பட்டு, பரிசுத்த இரத்தத்தால் உருவாக்கப்பட்ட நமது பரிசுத்த வாழ்வைக் குறித்து நாம் கரிசனையற்று இருப்பது எப்படி? பரிசுத்தம் என்பது தேவனுக் குரிய பதம். அப்போ, தேவன் நம்மிடம் எதிர்ப்பார்க்கின்ற பரிசுத்தம் எத்தகையது?

உலகத்தால் கறைப்படாத வேறுபட்ட வாழ்வு, கர்த்தரை மாத்திரமே பிரதிபலிக்கின்ற வாழ்வு, இயேசுவைப்போல வாழுகின்ற வாழ்வு. நமது பெலத்தால் சித்தத்தால் இப் பரிசுத்தம் வராது. “உன்னைப் பரிசுத்தப்படுத்துவேன்” என்று வாக்களித்தவர் உலகத்திலிருந்து நம்மைப் பிரித்தெடுத்து, வழுவாதபடி நம்மைக்காக்க வல்லவராயிருக்கிறார். அவரது வாக்கைப் பிடித்துக்கொள்வோம். அவரே நம்மைப் பரிசுத்தப்படுத்துவார்.

? இன்றைய சிந்தனைக்கு:

என் உள் அலங்கோலங்கள் எதுவுமே தேவனுக்கு மறைவானவை அல்ல. அவற்றை அறிக்கைபண்ணி, பரிசுத்தம் வாஞ்சித்து ஜெபித்து தேவனின் கிருபையை நாடி நிற்பேனாக!

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin