? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு: யோவான் 1:42-51

என்னைக் காண்கிறவர்;!

…பிலிப்பு உன்னை அழைக்கிறதற்குமுன்னே, நீ அத்திமரத்தின் கீழிருக்கும்போது உன்னைக் கண்டேன்… யோவான் 1:48

இன்று நாம் போகிற இடங்களிலெல்லாம், சில வீடுகளில்கூட சிசிடிவி கமராக்களைப் பொருத்தி வைத்திருக்கிறார்கள். அதிலும் முக்கிய இடங்களில் வாசல்களில் “இங்கே சிசிடிவி கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது” என்று எழுதியும் வைத்திருக்கிறார்கள். இந்த ஒழுங்குகள் எல்லாம் மக்கள் தவறுசெய்யாமல் தவிர்ப்பதற்கே என்றால் அதை மறுக்கமுடியாது. யாரோ தன்னைக் கவனித்துக்கொண்டிருக்கிறார்கள் என்ற உணர்வு தவறு செய்வதில் இருந்து மனிதனைத் தள்ளியே வைக்கிறது. யாரும் காணாத இடத்தி லும், யாருக்கும் தெரியாமலும் மனிதன் தவறுசெய்யத் துணிந்துவிடுகிறான்.

நாத்தான்வேல் தம்மிடம் வரக்கண்ட இயேசு, “இதோ, கபடற்ற உத்தம இஸ்ரவேலன்” என்றார். நிச்சயம் நாத்தான்வேல் திகைத்திருப்பான். “நீர் என்னை எப்படி அறிவீர்” என்று கேட்கிறான். அதற்கு இயேசு: “பிலிப்பு உன்னை அழைக்க முன்னமே, நீ அத்திமரத்தின் கீழிருக்கும்போதே உன்னைக் கண்டேன்” என்கிறார். “நாசரேத்தி லிருந்து யாதொரு நன்மை உண்டாகக்கூடுமோ” என்று முதலில் ஒரு அவிசுவாச அறிக்கை செய்தவன் இப்போது இயேசு அவனைக் கண்டதாகக் கூறியதும், “ரபீ, நீர் தேவனுடைய குமாரன், நீர் இஸ்ரவேலின் ராஜா” என்று அறிக்கைசெய்தான். அதற்கு இயேசு, “அத்திமரத்தின் கீழே உன்னை கண்டேன் என்று நான் உனக்குச் சொன்னதினாலேயா விசுவாசிக்கிறாய்? இதிலும் பெரிதானவைகளைக் காண்பாய்” என்றார்.

அன்று ஆகார், என்னைக் காண்பவரை நான் இவ்விடத்தில் கண்டேன் என்று சொல்லி, தன்னோடே பேசின கர்த்தருக்கு “நீர் என்னைக் காண்கிற தேவன்” என்று பெயரிட் டாள் (ஆதி.16:13). ஆம், அவர் நம்மைக் காண்கிற தேவனாகவே இன்றைக்கும் இருக்கிறார். “உம்முடைய ஆவிக்கு மறைவாக எங்கே போவேன், உமது சமூகத்தை விட்டு எங்கே ஓடுவேன்? நான் வானத்துக்கு ஏறினாலும், நீர் அங்கே இருக்கிறீர்; நான் பாதாளத்தில் படுக்கை போட்டாலும், நீர் அங்கேயும் இருக்கிறீர்” என்று தாவீது அனுபவித்து பாடிவைத்துள்ளான் (சங்கீதம் 139:7,8). தேவன் உள்ளிந்திரியங்களையே ஆராய்ந்து பார்க்கிறவர்; அவருக்கு மறைவாக நம்மிடம் எதுவுமே இல்லை.

இந்த நினைவோடு ஒவ்வொரு நாளையும் நாம் ஆரம்பிப்போமானால், ஒருபோதும் தேவனைவிட்டு விலகமாட்டோம். அவருக்கு விரோதமாய் செயற்படவும் மாட்டோம். அவரது பார்வை நம்மேல் இருக்கிறது என்பதை நினைத்தாலே தைரியமாய் நாம் பாவத்தை எதிர்கொண்டு ஜெயம் பெறலாம். முயற்சிப்போமா. என் கண்கள் அவர்களுடைய எல்லா வழிகளின்மேலும் நோக்கமாயிருக்கிறது… எரேமியா 16:17

? இன்றைய சிந்தனைக்கு:

கர்த்தரின் பார்வையிலிருந்து எப்படியாவது தப்பி ஓடலாம் என்று நினைத்த சந்தர்ப்பங்கள் உண்டா? அப்போது நடந்தது என்ன?

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin