? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: மாற்கு 11:19-26

அழகான மன்னிப்பு!

ஒருவர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள். கொலோ.3:13

வெளிப்படையான பல பிரச்சனைகளுக்கும் துயரங்களுக்கும், வெளியே தெரியப்படாத சில உட்காரணிகள் இருக்கக்கூடும். இந்தத் தெரியப்படாத உட்காரணிகளில் மிக முக்கியமானதொன்று, நமக்கு விரோதமாக துரோகமாக நடந்துகொள்கின்ற ஒருவரை மன்னிக்கமுடியாமல் இருப்பதே. ‘நான் மன்னித்துவிட்டேன், ஆனால் அவரோடு எனக்கு ஒன்றும்வேண்டாம்” என்று சொல்லுகிறவர்களும் உண்டு. அதுவும் மன்னிக்க முடியாமையின் ஒரு தோற்றம்தான். தீவினை செய்கிறவன், சிலசமயம் தன் தவறை உணர்ந்து நம்மிடம் வரக்கூடும்@ சிலசமயம் அவன் அடுத்தவனுக்குத் தீவினை செய்யக் கடந்து போய்விடக்கூடும். ஆனால், அவனை மன்னிப்பதற்குத் தடுமாறும் நமக்கோ அது நிச்சயம் அழுத்தத்தைக் கொடுக்கும்.

ஆபிரிக்கக் காடுகளுக்குள் ஒரு மரபினரிடம், காலநிலை சிறப்பாக இருக்கின்றபோது, ஒரு வறண்ட பகுதியில் ‘மன்னிப்பு வாரம்” என்று சொல்லி, கொண்டாடுவார்களாம். யாருக்காவது மனவருத்தமோ கசப்போ உண்டாக்கக்கூடிய விதத்தில் யாராவது நடந்து கொண்டிருந்தால், கசப்பை உண்டாக்கினவர், அந்தக் குற்றங்களுக்காக, சம்மந்தப்பட்டவரிடத்தில் மனதார மன்னிப்புக் கேட்க அந்த வாரத்தில் உறுதி எடுத்து, அதைச் செய்வார்களாம். இந்தப் பழக்கம் இன்று, தனிப்பட்டவர்களிடத்தில், குடும்பத்தில், சபைகளில், இனங்களுக்கிடையில், நாடுகளுக்கிடையில் சம்பவிக்குமானால், இந்த உலகமேஎவ்வளவு மகிழ்ச்சியாயிருக்கும். இன்றைய வேதப்பகுதியில் இயேசு, விசுவாசம், ஜெபம், மன்னிப்பு இந்த மூன்று விடயங்களையும் ஒன்றுடனொன்று தொடர்புபடுத்திப் போதிக்கிறார். கசப்பை மனதில்கொண்டிருந்து ஜெபிக்கும்போது, நாமும் அந்த அத்திமரத்தைப் போல செழிப்புள்ள, ஆனால் கனியற்றவர்களாகத்தான் இருப்போம். உண்மையான விசுவாசம் இருதயத்தை மாற்றும். உண்மையான ஜெபம் கசப்பை வெறுப்பை களைந்து, அந்த இடைவெளிகளை அன்பினால் நிரப்பும். உண்மையான விசுவாசம் சமாதானத்தையே தேடும், நாடும். நமது ஜெபங்கள் வல்லமைபெற்றதாய் இருக்கவேண்டுமென் றால், சமாதானமும், மன்னிப்பும் சாட்சியாய் இருக்கவேண்டும்.

ஒருவர் மெய்யாகவே நம்மை வேதனைப்படுத்தியிருந்தால், அவர்தான் செய்தார் என நாம் நினைத்தாலும் அவரை மன்னிப்பது அவசியம். ஒரு கணம் சிலுவையை நோக்கிப் பார்ப்போம். அந்தக் கொடும் வேதனையிலும், தம்மை வேதனைப்படுத்தியவர்களின்

மன்னிப்புக்காக மன்றாடிய ஆண்டவரை பாருங்கள். அவர் நமக்கு மன்னித்த நமது பாவங்களுடன் ஒப்பிட்டால், பிறர் செய்த காரியங்கள் அற்பமாகவே தோன்றும். சகல கசப்புணர்வு, மன்னிக்கமுடியாமை, யாவையும் தூக்கிக் குப்பையில் எறிந்துவிட்டு, யாவரோடும் சமாதானமாக ஒரு புதிய ஆண்டுக்குள் கடந்துசெல்லுவோமாக.

? இன்றைய சிந்தனைக்கு:

நாம் மன்னிக்கும்போது, சம்மந்தப்பட்டவரையும் அது குணப்படுத்தும், அவருக்கும் விடுதலை கொடுக்கும்.

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin