? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : சங்கீதம் 1:1-6

தியான வாழ்வு

கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். சங்கீதம் 1:2

பலவித வாகனச் சத்தங்கள் வெளியே கேட்டபடி இருந்தது. நமது குடும்பத்தைச் சேர்ந்த வாகனத்தின் சத்தத்தைக் கேட்டதும், எழுந்து வெளியே வந்தேன். “நான்தான் வருகிறேன் என்று எப்படித் தெரியும்” என்று ஓட்டுனர் கேட்டார். “அதுதான் பழக்கப்பட்ட சத்தமாயிற்றே” என்றேன் நான். நாம் அடிக்கடி கேட்டுப் பழகிய சத்தத்தை, எந்தச் சந்தடியிலும் நம்மால் கண்டுபிடிக்கமுடியும். அதுபோலவேதான் தேவனுடனான உறவும். தேவ வார்த்தையைத் தொடர்ந்து தியானித்து, மனதை அவற்றால் நிரப்புவதில்தான், தேவ சித்தத்தை அறிவதும், பாவத்தை மேற்கொள்வதும், மனது சுத்தமாய் காக்கப்படுவதும் தங்கியுள்ளது. நம் தியான வாழ்வே நமது மனதுக்கு சுகம் தரும் ஒளஷதம்.

மனதில் எதைக்குறித்து அடிக்கடி சிந்திக்கிறோமோ, எதற்கு அதிகமான இடமளிக்கி றோமோ அது, நமது வாழ்வை ஆட்கொள்ள ஆரம்பித்துவிடுகிறது. தினமும் வேதத் திலே தியானமாயிருந்து, தேவனுடைய வார்த்தைகளால் நமது மனது நிரம்பியிருக்கு மானால் நமது வாழ்வைத் தேவனுடைய வார்த்தைதான் ஆளுகை செய்யும். “கர்த்தரையும், தேவனுடைய வார்த்தைகளையும், கர்த்தருக்கே உரியவைகளையும் நோக்கி நமது சிந்தைனைகளைத் திசைதிருப்பும் மனதின் ஆற்றலே கிறிஸ்தவ தியானம்” என்று ஒருவர் எழுதுகிறார். மாறாக, மனதை வெறுமையாக்குவதோ, உள்ளேயிருக்கும் கடவுளை வெளிக்கொணருவதோ கிறிஸ்தவ தியானமாகாது. ஒரு கிறிஸ்தவ தியானமானது, நமது உள்ளத்தை உண்மையினாலும், ஒழுக்கத்தினாலும், நீதியினா லும், கற்பினாலும், அன்பினாலும், நற் கீர்த்தியினாலும், புண்ணியத்தினாலும், புகழினாலும், தேவ வார்த்தைகளாலும் நிரப்புகிறது (பிலி.4:8). அது நம்மைத் தேவசமுகத்தில் மகிழ்ந்திருக்கச் செய்கிறது.

 நாம் இன்று அதிக அறிவு பெற்றிருக்கிறோம். சுத்த மனது, தேவனுக்குப் பிரியமான சிந்தனை, தீங்கு எண்ணாத இருதயம் இப்படியாக எது நல்லது என்பது நமக்குத் தெரியும். ஆனால், அதற்கேற்ப வாழ முடியாதிருப்பது ஏன்? நமக்குள் நமது ஆவியும் பாவ மாம்சமும் போராடுவதும், பாவத்திற்கு நாம் எதிர்த்து நிற்கவேண்டும் என்ற அறிவும் நமக்குண்டு. அப்படியிருந்தும், அடிக்கடி பாவத்தின் பக்கமே நாம் சாய்வது ஏன்? நாம் மனுஷர் என்றாலும், கிறிஸ்துவைத் தரித்துக்கொள்ளவும், அவரை வெளிப்படுத்தவுமே அழைக்கப்பட்டிருக்கிறோம்! அதற்காக, அது தன்பாட்டில் நிகழாது. நாளாந்தம் தேவ னோடு கொண்டிருக்கும் உறவில், அவருக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தில், தேவ வார்த்தையைச் சிந்தித்துத் தியானித்து அதற்குக் கீழ்ப்படிவதில் என்று இவற்றிலெல்லாம் அது தங்கியிருக்கிறது. இன்றே நமது தியான வாழ்வை ஆராய்ந்து, தேவனோடு உள்ள உறவைப் புதுப்பிப்போமாக.

? இன்றைய சிந்தனைக்கு:  

நான் அடிக்கடி எதைக் குறித்துச் சிந்திக்கிறேன்? அல்லது, எவ்விதமான நினைவுகள் என்னை ஆக்கிரமித்திருக்கின்றன? ஆராய்ந்து பார்த்து மனந்திரும்புவேனாக!

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin