? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: யோனா 2:1-10

கீழ்ப்படிவும் பகுத்தறிவும்

பொய்யான மாயையைப் பற்றிக்கொள்ளுகிறவர்கள் தங்களுக்கு வரும் கிருபையைப் போக்கடிக்கிறார்கள் யோனா 2:8

மூன்று நண்பர்கள் பெற்றோருக்குத் தெரியாமல் சுற்றுலா போகத் திட்டமிட்டு தமது நண்பனையும் அழைத்தனர். நண்பனோ படிப்பையும் பணத்தையும் வீட்டையும் எண்ணி வர மறுத்ததோடு அவர்களையும் தடுத்தான். அவர்களோ அவனைத் தட்டிவிட்டுப் புறப்பட்டுப் போய்விட்டார்கள். நாட்கள் கடந்தன. பணமும் கரைந்தது. பணம் சம்பாதிக்க, தேநீர் சாலை, உணவகம், திரையரங்கு போன்ற இடங்களில் வேலைசெய்தார்கள். வருமானம் போதாததால், அரை வயிற்றுக்கே உணவு. வீட்டில் சொகுசாக வாழ்ந்த அவர்கள் சொல்லொணாத் துயரடைந்தனர். பின்னர் உணர்வடைந்து, வீடுகளுக்குத் திரும்பினார்கள். சரி எது, தவறு எது, நல்லது எது, கெட்டது எது என்று பகுத்தறிவது ஒன்று; கீழ்ப்படிவு அதனிலும் மேல் என்பதை உணராவிட்டால் இப்படித்தான் பட்டறிவைப் பெறவேண்டியிருக்கும்.

கர்த்தர் யோனாவிடம் நினிவேக்குப் போகச்சொல்ல, மறுதிசையில் தர்ஷீசுக்கு ஓடிப் போகும்படி கப்பல் ஏறினான் யோனா. புயலினால் கடல்கொந்தளிப்பினால், தத்தளித்த படகில் சீட்டு யோனாவின்மீது விழுந்தது, உடனே, தான் யார் என்றும் தனக்கு என்ன செய்யவேண்டும் என்று யோனா கூறியபடி, அவனைக் கடலில் தூக்கி வீசினார்கள். ஆனால், கர்த்தர் அவனை விடவில்லை. அவர் ஆயத்தப்படுத்தியிருந்த ஒரு பெரிய மீன் அவனை விழுங்கியது. அந்த மீனின் வயிற்றிலிருந்தபோதுதான் யோனா உணர்வடைந்தான், கர்த்தருடைய கிருபையைத் தான் போக்கடித்ததாக அறிக்கைபண்ணி கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணினான். கர்த்தர் ஜெபத்தைக் கேட்டு அவனைப் பாதுகாத்தார். கர்த்தர் ஒரு காரியத்தைச் சொன்னால், முதலாவது அது நன்மைக்கே என்று விசுவாசிக்கவேண்டும். அடுத்தது, அவருக்குக் கீழ்ப்படியாமற்போகும் தெரிவின் விளைவை உணருவது அவசியம். முந்தியதன் நன்மை என்ன, பிந்தியதன் ஆபத்து என்ன என்பதைப் பகுத்துப் பார்க்கத் தெரிந்திருக்கவேண்டும். அங்கேதான் பகுத்தறிவு தேவையே தவிர, கீழ்ப்படிவதா இல்லையா என்பது நமது தெரிவு மாத்திரமே. தன் தெரிவைச் சரிசெய்து பகுத்து அறியாமற்போனதினால், யோனா பட்டுத்திருந்த மீனின் வயிற்றில் மூன்றுநாட்கள் சிறையிருப்பு! இது நமக்குத் தேவையா?

நன்மை தீமை அறிகின்ற அறிவை மனிதன்தான் ஏதேனிலே பிடுங்கியெடுத்தான். என்றாலும் தேவன் கைவிடவில்லை. பகுத்தறிகின்ற ஆவியின் வரத்தைப் பரிசுத்த ஆவியானவரால் நமக்கு வழங்கியிருக்கிறார். அவரோ, கர்த்தருக்கு நீ கீழ்ப்படிவதுதான்உனக்கு நல்லது என்பதை உணர்த்துவார். இல்லை என்று மறுத்தால், அதன் விளைவு, பரிதாபமே. ‘ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய்.” சங்கீதம் 50:15

? இன்றைய சிந்தனைக்கு:  

முழுமையாகக் கர்த்தருக்குக் கீழ்ப்படியும்போது, அவர் பகுத்தறிவின் கிருபைவரத்தை அருளுவார். இப்போது நான் என்ன செய்யத் தீர்மானிக்கப் போகிறேன்?

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin