? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: யோவான் 11:1-26

வாழ்வு தரும் வார்த்தை

இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறறேன். என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான். யோவான் 11:25,26

என் தகப்பனார் தன் கடைசிக் காலத்தில், அடிக்கடி கண்களை மூடி தான் இறந்துவிட்டது மாதிரி நடிப்பார். பின்னர் கண்களை விழித்து, “நான்தானே செத்தாலும் வாழுவேன்” என்பார். எப்படி என்று கேட்டால், “இயேசுதானே சொல்லியிருக்கிறாரே” என்பார். நிகழ் கால சம்பவங்களை மறந்து, பழையவற்றை மாத்திரம் நினைவில் கொண்டிருந்தமுதுமை நாட்களிலும், அவருக்குள் தேவ வசனம் மனப்பாடமாயிருந்தது. உண்மையாகவே அந்த உறுதியான விசுவாசம் நமக்குள் உண்டா? நாம் சரீரத்தில் மரித்தாலும் நாம் நித்தியமாய் வாழுவோம்.

லாசரு இயேசுவுக்கு அன்பானவன், அந்தக் குடும்பத்தையே இயேசு நேசித்தார். அவன் வியாதிப்பட்ட தகவலை இயேசு அறிந்திருந்தும் அவர் தாமதித்தே வந்தார், அதனால், இயேசுவே உயிர்த்தெழுதல் என்ற சத்தியம் நமக்கு வெளிப்பட்டது. இயேசு உலகில் வாழ்ந்தபோது செய்த ஒவ்வொரு அற்புதங்களும், அவரது வல்லமையைப் பிரஸ்தாபப்படுத்தின. லாசருவின் சம்பவமும்கூட, இயேசு யார் என்பதை உலகிற்கு வெளிக்காட்டியது. அவரே மனித வாழ்வினதும் சாவினதும் அதிகாரத்தைக் கொண்டிருக்கிறவர்.  மாத்திரமல்ல, அவரே பாவங்களை மன்னிக்கவும் அதிகாரம் கொண்டவர். ஏனெனில் அவரே படைப்பாளி. அவரே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறவர். அவர் நமது பாவங்களை மன்னிக்காவிட்டால் பிதாவை நாம் கிட்ட நெருங்கவே முடியாது. ஜீவனாக இருக்கிற அவரேயல்லாமல் நமது வாழ்வை யாராலும் காப்பாற்றமுடியாது. இயேசு, “நீ விசுவாசிக்கிறாயா” என்று மார்த்தாளிடம் கேட்டார். இந்தக் கேள்விதான் இன்று நம்மிடமும் வருகிறது. வாழ்வு தருகின்ற அவரது வார்த்தையின் வல்லமையை, அவரது தெய்வீகத்தை நாம் விசுவாசிக்கிறோமா? விசுவாசிக்கிறவனுக்கு அவர் அருளுகின்ற ஆவிக்குரிய வாழ்வை, மரணம் கைப்பற்றவோ, மழுங்கடிக்கவோ முடியாது. இவ்வுலகில் ஜீவனற்றவர்கள்போல வாழுகின்ற ஏராளமானவர்களைக்குறித்து நமது மனநிலை என்ன? அவர்களுக்கு மறுமையிலும் என்ன நம்பிக்கை இருக்கிறது? வாழ்வளிக்கும் வார்த்தையை அவர்களுக்கு அறிவிப்பது யார்?

தேவனுடைய அதிகாரமிக்க வார்த்தையை விசுவாசித்தால், வாழ்வென்ன சாவென்ன எதுவும் நம்மை அவரது அன்பைவிட்டுப் பிரிக்கமுடியாது. இப்படிச் சொல்லுகின்ற நாம் அவருடைய வல்லமைமிக்க தெய்வீக வார்த்தைக்கு ஏற்றபடி வாழவேண்டுமே! அதுவே அந்த வார்த்தையை நாம் விசுவாசிக்கிறோம் என்பதற்கான ஒரே நிரூபணம். ஆனால் நம்மில் அநேகர், இயேசு நமக்கிருந்தும், ஜீவனற்றவர்கள்போல வாழுவது ஏன்? இந்த உலகில் எது வந்தாலும், மரணமே வந்தாலும் நம்மைக் கலங்கடிக்க முடியாது. பிறர் முன்னிலையிலும் சாட்சிகளாக தலைநிமிர்ந்து நிற்போமா!

? இன்றைய சிந்தனைக்கு:

உயிரோடிருந்து கிறிஸ்துவை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான். இதுவே வாழ்வின் உண்மை.

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin