? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு: உபாகமம் 20:1-18

நமது யுத்தம் யாருடன்?

…மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, …அந்தகார லோகாதிபதிகளோடும், …பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு. எபேசியர் 6:12

உலகம் இதுவரை பல யுத்தங்களைக் கண்டுவிட்டது. பழைய ஏற்பாட்டுக் காலங்களில் கர்த்தரே யுத்தங்களை நடத்தினார். ஏன் நாம் இன்று யுத்தம் பண்ணக்கூடாது என்று கேட்பவர்களும் உண்டு. அதனால்தான் சபைகளுக்குள்ளும் ஆயுதப் பாவனையற்ற யுத்தங்களும் பிரிவினைகளும் காணப்படுகின்றனவோ?

இஸ்ரவேல் எதிர்கொண்ட பல யுத்தங்கள் வேதாகமத்தில் பதியப்பட்டுள்ளன. “நீ உன் சத்துருக்களுக்கு எதிராக யுத்தஞ்செய்யப் புறப்பட்டுப் போகையில்…” என்று கர்த்தரே பல யுத்த ஆலோசனைகளைக் கொடுத்ததை இன்று வாசித்தோம். அதற்காக இன்று நாம் யுத்தங்களில் அந்தப் பிற இன மக்கள் தங்கள் அருவருப்புகளின்படி செய்ய இவர்களுக்கும் கற்றுக்கொடுத்து, அதனால், கர்த்தருக்கு விரோதமாக இஸ்ரவேலும் பாவம் செய்யாமலிருக்கும்படிக்கே கர்த்தர் அந்த வழியில் இஸ்ரவேலை நடத்தினார்.

 இன்று இரட்சிப்பு சகலருக்கும் உரியது. ஆகையால் நமக்கு சத்துரு என்று யாரும் இல்லை. பின்னர், சக மனிதனை எதிர்ப்பது எப்படி? ஆனாலும் இவ்வுலகில் நமக்கு நிச்சயம் யுத்தம் உண்டு; அது. மனிதனைத் தூண்டிவிடுகின்ற சாத்தானின் ஆவிகளுடனேதான் என்பதை நினைவில் கொள்வோம். நம்முடன் மோதுகிற மனிதர் வெறுமனே அவனது கருவிகள்தான். இந்த யுத்தத்தை நமது யுக்திகளினால் ஜெயிக்கமுடியாது. இயேசுவானவர் சிலுவையிலே நமக்கு வெற்றியீட்டித் தந்துவிட்டது சத்தியம்; ஆனால், நமக்கு அருளப்பட்ட சர்வாயுதத்தை நாம் அணியாமல், கர்த்தாவே ஜெயிக்கப் பெலன் தாரும் என்று ஜெபிப்பதில் பலன் இல்லை. அடுத்தது, பகை, விரோதம், கோபம், பொருளாசை என்ற விக்கிரக ஆராதனை, இச்சைகள், பாலியல் சோதனைகள், பெற்றோருக்கு அடங்காமை, தன்னிச்சைப்படி நடத்தல் என்று கர்த்தர் அருவருக்கின்ற எதிரிகளை நாம் சங்காரம் செய்யவே அழைக்கப்பட்டுள்ளோம். ஓன்றிரண்டை மீதியாக விட்டாலும்கூட, தேவனைவிட்டு நம்மைப் பிரித்து அழித்துப்போட அது போதும். ஆகவே, சர்வாயுதவர்க்கத்தைத் தரித்தவர்களாய் முன்சென்று, மனிதனை அல்ல. அவன் பின்னே நின்று நம்மை அழிக்க வகைபார்க்கின்ற சாத்தானின் ஆவிகளின் வஞ்சகங்களை, பரிசுத்த ஆவியானவரின் உறுதியான பலத்தோடு ஜெயம்பெற்று முன்செல்லுவோமாக.

? இன்றைய சிந்தனைக்கு:

இன்று எனது எதிரி யார்? அவனை இயக்குபவன் யார்? அவனை எப்படி ஜெயிக்கப் போகிறேன்?

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin