? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: 2கொரி 5:14-16

நெருக்கி ஏவும் அன்பு

கிறிஸ்துவினுடைய அன்பு எங்களை நெருக்கி ஏவுகிறது 2கொரிந்தியர் 5:14

எங்கள் கணித ஆசிரியை, மிகவும் கண்டிப்புள்ளவரென்றாலும், நாங்கள் கணிதத்தில் நன்கு தேறவேண்டும் என்பதற்காக அவர் தன் நேரகாலத்தை அர்ப்பணித்து எடுத்த முயற்சிகளை இன்றும் மறக்கமுடியாது. சில நிரூபணங்களைச் சரியாக நிரூபித்து முடிப்பதற்காக படிப்படியாய் அவர் கற்றுக்கொடுத்த விதமே தனிதான். நமக்காக இல்லாவிட்டாலும் நமது ஆசிரியைக்காகவாவது, கணிதத்தில் மிகச் சிறந்த தேர்ச்சி பெறவேண்டும் என்ற வைராக்கியம் நமக்குள் எழுந்தது. அப்படியே நம்மில் எட்டுப்பேருக்கு கணிதத்தில் மிகச் சிறந்த சித்தியும் கிடைத்தது; நாம் அதிபரால் பாராட்டப்பட்டோம். ஆனால், நமக்கு அத்தனை ஏவுதலையும் உந்துதலையும் கொடுத்தது நமது ஆசிரியையின் விடாப்பிடியான முயற்சியும், நம்மைத் தனக்குள் கட்டிவைத்திருந்த அவரின் அன்பும்தான்.

தேவனுக்குப் பயந்தவர்களாக (5:11) வாழ்ந்த பவுலும், மற்றவர்களும் பைத்தியக்காரர் என மக்கள் சொன்னாலும் அதைக் கருத்திற்கொள்ளாமல், சந்தோஷமாக தைரியமாக சுவிசேஷத்தைச் சொன்னார்கள். புறப்பட்டு நாடு நாடாக, பட்டணம் பட்டணமாக தடைகளை தாண்டிச்சென்றார்கள். மரணத்திற்குக்கூட அவர்கள் பயப்படவில்லை. இது எப்படி? ‘கிறிஸ்துவினுடைய அன்பு அவர்களை நெருக்கி ஏவிக்கொண்டேயிருந்தது” இதுதான் உண்மை. ‘நெருக்கி ஏவுதல்” என்பது, ‘இறுகப் பற்றிக்கொண்டது” என்று அர்த்தம் பெறும். அதாவது, கிறிஸ்துவின் அன்பு அவர்களைச் சிறைப்பிடித்து, அவர் பணிசெய்ய முன்தள்ளியது. கிறிஸ்துவின் அன்பினால் பவுல் ஆட்கொள்ளப்பட்டது எப்படி? இயேசு, நம்மீது கொண்டிருந்த அன்பினிமித்தம் சகலத்தையும், ஜீவனையுமே நமக்காகக் கொடுத்தார். இதை தமது சுயபெருமைக்காகவோ, தமக்கிருந்த பரலோக மகிமையை மேன்மைப்படுத்துவதற்காகவோ இயேசு செய்யவில்லை. மாறாக, இயேசு தம்மைத்தாமே தாழ்த்தி, சுயமாக, எல்லோருக்காகவும் தமது ஜீவனைக்கொடுத்தார். அதனால்தான் கிறிஸ்துவின் அன்பைவிட்டு எதனாலும் பவுலைப் பிரிக்கமுடியவில்லை!

கிறிஸ்து நமக்காக மரித்ததால், நாமும் நமது பழைய வாழ்வுக்கு மரித்தவர்கள்; அவர் உயிர்த்தெழுந்ததால் நாமும் இனி நமக்கென வாழாமல், உயிரோடெழுந்தவருக்காக வாழவேண்டும். ஆகையால், இனி நமது பழைய வாழ்வை எப்படித் தொடரமுடியும்? ‘எனக்காகவா” ‘ஏன் எனக்காக” என்ற கேள்விகளைக் கேட்டு, கிறிஸ்து நம்மில் வைத்திருந்த, இன்றும் என்றும் வைத்திருக்கிற அன்பை உணருவோமாக. நமக்காக, எனக்காக கிறிஸ்து செய்துமுடித்த ஒப்பற்ற கிரியையை என்னால் உணரமுடியுமானால், இந்த உலகே எதிர்த்து நின்றாலும், என் அன்பரின் மகிமைக்காக நான் என்னதான் செய்ய முடியாது?

? இன்றைய சிந்தனைக்கு:

அகலம் நீளம் ஆழம் உயரம் அறியமுடியாத கிறிஸ்துவின் அன்பு என்று பாடல் பாடும் நான், அந்த அன்பினால் நெருக்கி ஏவப் படுமளவுக்கு, என்னை அந்த அன்புக்கு அர்ப்பணித்திருக்கிறேனா?

? அனுதினமும் தேவனுடன்.

Comments (113)

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *