? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி : உபாகமம் 6:4-12

ஆண்டவரை மறவாதே!

நீ அடிமைப்பட்டிருந்த வீடாகிய எகிப்துதேசத்திலிருந்து உன்னைப் புறப்படப் பண்ணின கர்த்தரை மறவாதபடிக்கு எச்சரிக்கையாயிரு. உபாகமம் 6:12

தனது குழந்தைகள் கடவுள் நம்பிக்கையுள்ளவர்களாக, கடவுள் செய்த நன்மை களை மறவாதவர்களாக, தங்களுக்குக் கிடைக்கும் பொருட்களைக் கவனமாகப் பாவிக்கக் கற்றுக்கொள்ளவேண்டும் என்று எண்ணிய ஒரு தாயார், தனது வீட்டிலிருக்கும் பொருட்களில்; பிறர்மூலம் பரிசாகக் கிடைத்த பொருட்களின் மீது ஒரு சிகப்பு ரிபனைக் கட்டிவைத்தார். அதைப் பார்த்த குழந்தைகள், இது என்ன என்று கேட்ட போது, இவைகள் தேவனால் நமக்கு இன்னார் மூலமாக கொடுக்கப்பட்டது என்பதை நினைவுபடுத்தி, நாம் அவற்றை கவனமாகப் பாவிக்கவேண்டும், அதற்காக தேவனுக்கு நன்றிசொல்லவும் வேண்டும் என்று அன்பாகச் சொல்லிக்கொடுத்தார்.

உபாகமத்திலும் அதைத்தான் தேவன் தமது ஜனங்களுக்கு கற்றுக்கொடுக்கிறார். ‘என்னை நீ மறவாதபடிக்கு எச்சரிக்கையாயிரு. எனது கட்டளைகளைக் கருத்தாய் உன் பிள்ளைகளுக்குப் போதித்து அவைகளை ஞாபகக்குறியாக உன் கண்களுக்கு நடுவே வைத்து, உன் வீட்டு நிலைகளிலே எழுதி, அடையாளமாக கைகளிலே கட்டி, அதையே சிந்தித்து, தியானித்து அதை மறவாதபடிக்கு வாழுவாயாக” என்கிறார். மேலும், ‘நீ உனக்கு வசதியான வீடுகளைக் கட்டி, திராட்சத் தோட்டங்களையும், ஒலிவத் தோப்புகளையும் உண்டுபண்ணி நீ சாப்பிட்டுத் திருப்தியாகும்போது, நீ அடிமைப்பட்டிருந்த எகிப்தில் இருந்து உன்னை வரப்பண்ணின தேவனை மறவாத படிக்கு எச்சரிக்கையாயிரு” என்கிறார்.

ஆனால், இஸ்ரவேலரோ நிறைவுகள் இந்தபோது தேவனை மறந்துபோவதும், துன்பம் நேரிடும் போது, தேவைகள் வரும்போது தேவனைத் தேடுவதும், நினைத்த காரியம் நடக்கவில்லையென்றால், தேவனை நோக்கி முறுமுறுத்து முறையிடுவதுமாகவே தமது காலத்தைக் கடத்தினார்கள். அவர்களுக்கு நாம் ஒன்றும் சளைத்தவர்கள் அல்ல. நாமும் அவர்களைப் போலத்தான் இருக்கிறோம். அவர்களுக்கோ உடனுக்குடன் தண்டனைகள் கிடைத்ததால், அவர்கள் உடனுக்குடன் மனந்திரும்பினார்கள்.  நாமோ, கிருபையின் காலத்தில் வாழுகிறோம் என்று சொல்லிக்கொண்டு, எல்லாவற்றையும் உதாசீனம் பண்ணுகிறவர்களாய், தேவனையும் அவர் வழிநடத்துதலையும் மறந்தவர்களாகவே வாழுகிறோம்.

தேவன்; நம்மை மீட்கும்பொருட்டுச் செய்த காரியம்முதல், நம் வாழ்வில் நாம் அவரிடமிருந்து பெற்ற ஆசீர்வாதங்களும் ஈவுகளும் ஏராளமானவை. அவை மறக்கக்கூடியவை அல்ல. எப்போதும் நினைத்துப்பார்க்க வேண்டியவை. ‘என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்திரி, அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே.” சங்.103:2

? இன்றைய சிந்தனைக்கு:

தேவனுக்கு அவ்வப்போது நன்றி சொல்கிறேனா? அல்லது நன்றியுணர்வோடே அல்லும் பகலும் வாழுகிறேனா?

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin