இனிய கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்!



? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: யோவான் 1:1-14

மேலான கிறிஸ்மஸ் பரிசு

அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்.  யோவான் 1:12

இனிய கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்! கிறிஸ்மஸ் வாழ்த்துமடல் அனுப்புவது குறைந்து, இப்போது நவீன தொடர்பாடல்களில் வாழ்த்துக்கள் வண்ணம் வண்ணமாக நொடிப்பொழு தில் பறக்கின்றன. என்றாலும், சில பாரம்பரியங்களை நாம் விட்டுவிடமாட்டோம். கரோல் நிகழ்ச்சி, வீடு வீடாகச் சென்று பாடுதல், கிறிஸ்மஸ் மரம், சோடனைகள், தின்பண்டங்கள், நம்மவருக்குப் பரிசுகள். அதற்காகவே வேடம் தரித்த கிறிஸ்மஸ் தாத்தாக்கள். இவை இல்லாமல் கிறிஸ்மஸ் இல்லை, இல்லையா! ஏழைகளுக்குப் பரிசு கொடுப்பதற்கு காத்திருக்கிறவர்கள்தான் எத்தனைபேர்! நல்லது. ஆனால், கிறிஸ்மஸ் நமக்களிக்கும் உன்னத பரிசைப் பெற்றிருக்கிறோமா?

தேவன் மனிதனாகி, நமக்காவே உலகிற்கு வந்தார் (1தீமோ.3:16). அதாவது, பிதாவாகிய தேவன், தமது ஒரேபேறான குமாரனை நமக்குப் பரிசாகத் தந்தார். சற்று சிந்தியுங்கள். சர்வலோகத்தை படைத்து அரசாளும் ஒப்புயர்வற்ற தேவாதி தேவன், தன்னை ஒடுக்கி, ஒரு கன்னியின் கர்ப்பத்தில் ஒரு ‘கலம்”ஆக வந்து அமர்ந்தது எப்படி? பின்பு முளையமாகி, கரு குழந்தையாக வளர்ந்து, உலகில் வந்து பிறந்தார்.

பிறந்தவரின் கண்களைக் கவனியுங்கள்; கண்களை வடிவமைத்தவருக்கு உலகைக் காண கண் கூசவில்லையா! பிரபஞ்சத்தையே படைத்தவருக்கு உணவூட்ட முடியவில்லையோ! வார்த்தையாய் வந்தவர், பேசக் கற்கவேண்டியிருந்ததோ! முதல் அடி எடுத்துவைக்கபழகவேண்டியிருந்ததோ! ஆம், இப்படியாக அவர் நம்மைப்போல ஒருவரானாரே, இது ஆச்சரியமல்லவா! அவரது சரீரத்திலும் பருவமாற்றங்கள் வந்தன; தச்சுவேலையைக் கற்கவேண்டியிருந்தது. வாலிப உணர்வுகளை தாண்ட வேண்டியிருந்தது. இத்தனைக்கும் தாம் ஒரு தனித்துவமானவர் என்று நினைத்தா அவர் வந்து பிறந்தார், ஆனால் பரிசுத்த ஆவியானவரின் துணையோடு, பின்னர் அவர் தம்மை அறிந்துகொண்டார். மாத்திரமல்ல, பாடுகளினூடாகவே பிதாவுக்குக் கீழ்ப்படிவதைக் கற்றுக்கொண்டார் (எபி.5:8). சிலுவைபரியந்தம் தம்மைத்தாமே தாழ்த்தினார்.

இத்தனையும் எதற்காக? நமக்கு தருவதற்காக அவரிடம் ஒரு கிறிஸ்மஸ் பரிசு இருந்தது. அவர் நம்மை அறிந்தவர்@ நாம் இயேசுவை ஏற்றுக்கொள்ளும்போது, தேவனுடைய பிள்ளைகள் என்ற அதிகாரம் பரிசாக வாக்களிக்கப்படுகிறது. அந்த வாக்குறுதிக்கு நாம் பாத்திரர் ஆவதற்காகத்தானே இயேசு வந்து பிறந்தார். தேவனைவிட்டுத் தூர இருந்த நாம் தேவனுடைய பிள்ளைகளாகும்படிக்கே, இயேசு நம்மில் ஒருவராக உலகில் பிறந்தார். இந்த வாக்கைப் பரிசாகப் பெற்றிருக்கிறோமென்றால், நமது எல்லாக் காரியங்களிலும் அந்த சுகந்தம் வீசவேண்டாமா? தேவனுடைய பிள்ளை என்ற இந்த சிலாக்கியத்தை, மற்றவர்களும் பெறும்படிக்கு இந்தக் கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தை மாற்றி அமைப்போமா!

? இன்றைய சிந்தனைக்கு:

நான் இப்போது தேவனுடைய பிள்ளை. அப்போது எப்படி நான் நடக்கவேண்டும்? தேவனுடைய பிள்ளையாகும் பரிசைப் பிறரும் பெற்றுக்கொள்ளும்படி நான் என்னதான் செய்யவேண்டும்?

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin