? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: ஆதியாகமம் 2:10-25

பரிசுத்த உறவு

தேவனாகிய கர்த்தர் தாம் மனுஷனில் எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி, அவளை மனுஷனிடத்தில் கொண்டுவந்தார். ஆதியாகமம் 2:22

தேவனுடைய படைப்புகளிலே மனிதன் விசேஷமானவன் என்பது நாம் அறிந்ததே. அப்படி என்னத்தான் விசேஷம்! தேவன்  தமது சாயலிலும், தமது ரூபத்திலும் படைத்தது மனிதனைத்தான். ஆனால் இன்னுமொரு காரியமும் உண்டு. எல்லா உயிரினங்களையும் பலுகிப் பெருகி பூமியை நிரப்பும்படி இருபாலாகவே படைத்தார். முதலில் ஆணைப் படைத்து, அவனை ஏதேன் தோட்டத்திற்கு அழைத்து வந்து, தோட்டத்தைப் பண்படுத்தவும் காக்கவும் வைத்தார் என்று வாசிக்கிறோம்.

பின்னர் மனுஷன் தனிமையாய் இருப்பது நல்லதல்ல என்று தேவன் கண்டார். கண்டவர் மனிதனைப் படைத்ததுபோலவே ஒரு பிடி மண்ணை எடுத்து மனுஷியைப் படைத்திருக்கலாமே. ஆனால் தேவன் அப்படிச் செய்யவில்லை. ‘ஏற்ற துணையை உண்டாக்குவேன்” என்ற கர்த்தருடைய சிந்தனையிலிருந்து உருவானவள் மனுஷி. மனுஷியை உருவாக்குமளவும் தேவனுடைய படைப்பு முடிவடையவில்லை. மனுஷியை யும் உருவாக்கிய பின்னர்தான் தேவன் அது மிக நன்றாயிருக்கிறது என்று கண்டார். மாத்திரமல்ல, மனுஷனும் மனுஷியும் ஒரே மாம்சமாயிருப்பது தேவதிட்டம். ஆகவே, மனுஷனுடைய எலும்பிலும் தசையிலுமிருந்தே தேவன் மனுஷியை உருவாக்கினார்.

மிருகங்களையும் பறவைகளையும் படைத்து, பலுகிப் பெருகுங்கள் என்று சொன்னது போல தேவன் மனிதனை விட்டுவிடவில்லை. அவனை ஒரு பரிசுத்த உறவுக்குள் கொண்டுவந்தார் தேவன். ஏனைய உயிரினங்கள்போல மனுஷன் உறவுகொள்ளமுடியாது. ஏனெனில் அவன் விசேஷமாகப் படைக்கப்பட்டவன். தேவனுடைய தன்மை களை வாழ்விலும் உணர்விலும் வெளிப்படுத்த வேண்டியவன். இன்னும், மனுஷியைப் படைத்தவர் அவளைத் தாமே அழைத்துவந்து, மனுஷனிடம் ஒப்புவித்த தேவனுடைய செயலை நாம் நன்றாக சிந்தித்துப் பார்க்கவேண்டும். ஆகவே, திருமண பந்தம் என்பது தேவனுடைய பார்வையிலே மிகவும் பெறுமதி வாய்ந்தது.

கர்த்தருக்குள் அருமையானவனே, உங்கள் குடும்ப உறவு பரிசுத்தமாகக் காக்கப்பட வேண்டிய ஒன்று என்பதை மறக்கவேகூடாது. அன்று ஆதாமும் ஏவாளும் தங்கள் திருமண பந்தத்தை அசுத்தப்படுத்திவிடவில்லை என்று நாம் ஒருவேளை நினைக்கலாம். உண்மைதான். ஆனால் கீழ்ப்படியாமையால் பரிசுத்த தன்மையை இழந்துவிட்டதினால், எல்லாமே அந்தப் பரிசுத்தத்தை இழந்துவிட்டது. ஆனால், இயேசு கிறிஸ்து வின்மூலம் இழந்துபோன மகிமை நமக்கு மீண்டும் கிடைத்திருக்கிறதே! ஆகையால், உணர்வுள்ளவர்களாக நமது குடும்ப உறவுகளைக் கட்டிக்காப்போமாக. அங்கே தான் தேவன் மகிமைப்படுவார்.

சிந்தனைக்கு:

எனது குடும்பத்தை நான் எவ்வளவுக்கு நேசிக்கிறேன்? அல்லது பிணக்குகளுடன் போராடுகிறேனா? பிணக்குகளை அகற்றிப் போட்டு, கர்த்தர் தந்த குடும்பத்துக்காக நன்றி சொல்வேனாக.

?️ எமது விலாசம்
Back to the Bible (Sathiyavasanam),
120 A, Dharmapala Mawatte, Colombo 7, Srilanka.
Email: sathiyavasanam@backtothebible.lk
website: Backtothebible.lk  |  www.Sathiyavasanam.lk
Facebook: www.fb.com/sathiyavasanam
Call: 011-4691500 | 011- 4691532

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin