📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰

📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு: யாக்கோபு 1:1-18

குறைவையும் நிறைவாக்குகிறவர்!

நீங்கள் ஒன்றிலும் குறைவுள்ளவர்களாயிராமல் பூரணராயும் நிறைவள்ளவர்களாயும் இருக்கும்படி… யாக்கோபு 1:4

“ஒன்றிலும் குறைவற்றவர்கள், பூரணர்” இவைதான் வேதம் நமக்குத் தருகின்ற உறுதி. நாம் இப்படியேதான் வாழவேண்டும் எனக் கர்த்தரும் விரும்புகிறார். ஆனால், அந்த நிறைவு நமக்குள் உண்டா? “நான் ஒன்றிலும் குறைவற்றவன்” என்றோ, அல்லது, “குறைவிலும் நிறைவுள்ளவன்” என்றோ நம்மில் யார் தைரியமாகக் கூறக்கூடும்?

 “கண்டுபிடிப்புகளின் மேதை” என்று பெயர்பெற்ற “எடிசன்” என்பவர் ஒரு செவிடராக இருந்தவராம். ஆங்கிலக் கவியான “மில்டன்” என்பவர் கண்பார்வையற்றவர் என்றும், மோட்ச பிரயாணம் என்ற பிரசித்திபெற்ற நூலை எழுதிய “ஜான் பனியன்” சிறையிலிருந்தே எழுதினார் என்றும் சொல்லப்படுகிறது. இவர்கள் ஒருபுறமிருக்க, “மைக்கல் ஏஞ்சலோ” என்ற புகழ்பெற்ற சிற்பி, ஒருமுறை, ரோமாபுரியில் சிலை செதுக்குவதற்காகச் சென்றிருந்தபோது அங்கிருந்த ஏனைய சிற்பிகள் சிறப்பான சகல சலவைக் கற்களையும் தமது பாவனைக்கு எடுத்துவிட்டனராம். வளைந்து கோணலாகக் காட்சி தந்த ஒரு கற்பாறை மாத்திரமே எஞ்சியிருந்தது. முகம்கோணாத அவர், அதனை நன்கு உற்றுப் பார்த்துக் குறைகளைக் கவனித்து, உடைவுகளைச் சரிசெய்து, “டேவிட் என்ற சிறுவன்” என்ற அழகிய புகழ்பெற்ற சிற்பத்தை உருவாக்கினாராம்.

குறைவுக்கு முகங்கொடுக்காதவர்கள் எவருமில்லை. இவ்வுலகில் சிறந்த உதாரண புருஷர்கள், சாதனைப் பெண்கள் எனச் சுட்டிக்காட்டக்கூடிய அனைவருமே நமது கணக் கின்படி ஏதோவொரு குறைவுள்ளவர்கள்தான், ஆனால் இவர்கள் தங்கள் குறைகளை நினைத்து ஒதுங்கியிருக்கவில்லை. இது எப்படி ஆகும்? இதன் பதில் தியான வசனத்தின் பின்பகுதியில் இருக்கிறது. அதாவது “…பொறுமையானது பூரண கிரியை செய்யக் கடவது” (யாக். 1:4). “மேலும், சகல துரைத்தனங்களுக்கும் அதிகாரத்துக்கும் தலை யாயிருக்கிற அவருக்குள் (தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் வாசமாயிருக்கிற கிறிஸ்துவுக்குள்) நீங்கள் பரிபூரணமுள்ளவர்களாயிருக்கிறீர்கள்” (கொலோ.2.10) என்று பவுல் எழுதுகின்றார்.

முதலில் நமது குறைகளையெல்லாம் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் நமக்கு வேண்டும். அப்புறம் அவற்றைப் பொறுமையோடே சந்தித்து, தேவ சந்நிதானத்தில் அமர்ந்திருப்போமானால், குறைவுகளின் மத்தியிலுள்ள நிறைவுகளை நம்மால் காண முடியும். கர்த்தர் நம்மைக் கிறிஸ்துவுக்குள் நிறைவுள்ளவர்களாகவே காண்கிறார். ஆகவே நிறைவானதைக் காணப் பழகுவோம். நமது குறைவுகளை நிறைவாக்கும் கர்த்தரிடம் இன்றே நமது வாழ்வை ஒப்புவிப்போமாக.

💫 இன்றைய சிந்தனைக்கு:

என்னிடத்திலுள்ள குறைவு என்ன? கானாவூர் திருமணத்தில் குறைவை நிறைவாக்கிய இயேசுவுக்கு முன்பாக, என்னிடத்திலுள்ள நிறைவைக் காண என் கண்களைத் திறக்கும்படி மன்றாடுவோமா.

📘 அனுதினமும் தேவனுடன்.

91 thoughts on “25 பெப்ரவரி, 2022 வெள்ளி”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Solverwp- WordPress Theme and Plugin