? சத்தியவசனம் – இலங்கை. ?? 

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: 2இராஜாக்கள் 4:14-37

மனஉறுதி

…அவனைத் தேவனுடைய மனுஷனின் கட்டிலின்மேல் வைத்து, அவன் வைக்கப்பட்ட அறையின் கதவைப் பூட்டிக்கொண்டுபோய்… 2இராஜாக்கள் 4:21

தனக்குவேண்டும் என்று கேட்காத ஒரு ஆசீர்வாதம் சூனேமியப் பெண்ணுக்குக் கிடைத்தது; ஆனால் கிடைத்த அந்தக் குழந்தை செத்துப்போனது. நாமென்றால், கடவுளை எவ்வளவாகக் குற்றப்படுத்திப் பேசிப் புலம்பியிருப்போம். சூனேமியப் பெண்ணோ ஒரு காரியம் செய்தாள். எலிசாவுக்கென்று விடப்பட்ட அறைக்குள் சென்று, மரித்துப்போன தன் குழந்தையைக் கட்டிலில் கிடத்திவிட்டு, வேறு யாரும் புகுந்துவிடாத படி அறையின் கதவைப் பூட்டிவிட்டு, எலிசாவிடம் போகப் புறப்பட்டாள். அவளது உள்ளத்தில் நம்பிக்கையிருந்தது. இல்லையானால் எதிர்கொண்டு வந்த கேயாசியிடம், ‘பிள்ளை சுகந்தான்” என்று கூறியிருப்பாளா? கர்த்தரும் அவளுக்கு நேர்ந்த கதியை தீர்க்கதரிசிக்கு மறைத்துவிட்டார். அவள் என்ன செய்வாள் என்று கர்த்தரும் காண  விரும்பினாரோ என்னவோ? எலிசா எடுத்துக்கொண்ட மாற்றுவழிகளையும் அவள் ஏற்றுக்கொள்ளாமல், தேவமனுஷனாலே மாத்திரமே இது ஆகும் என்று மனஉறுதி கொண்டவளாக எலிசாவின் கால்களில் விழுந்து அவரையே வரும்படி அழைத்தாள். இறுதியில், பிள்ளையை உயிருள்ளவனாகப் பெற்றுக்கொண்டாள் இந்தப் பெண்.

அன்று 75 வயதுள்ள ஆபிராமை தேவன்தாமே அழைத்து, சந்ததியை வாக்குப்பண்ணி, தமக்குச் சித்தமான வேளையில் பிள்ளையைக் கொடுத்தும் விட்டார். கொடுத்தவர் சும்மா விட்டாரா? அந்தப் பிள்ளையையே பலியாகக் கேட்டார். கர்த்தர் சொன்னபடியே மகனைப் பலியிடுவதற்கு மோரியா மலைக்குச் சென்றபோது, ஆபிரகாம் தன் வேலைக்  காரரைப் பார்த்து, ‘நீங்கள் இங்கேயே இருங்கள், நானும் பிள்ளையும் அவ்விடம்போய் தொழுதுகொண்டு, உங்களிடத்திற்குத் திரும்பிவருவோம்” என்றார். குழந்தையைப் பலியிடப்போகிறவர், ~திரும்பிவருவோம்| என்று எப்படிக் கூறினார்? அன்று ஆபிரகாமிடம்  காணப்பட்ட அதே மனஉறுதியே இந்த சூனேமியாளிடமும் காணப்பட்டது.

நாம் எதிர்பார்த்திராத ஆசீர்வாதங்கள் நம்மைத் தேடி வரும். நாமும் பெருமகிழ்ச்சி அடைவோம். நான் கேட்காததையே தந்து கர்த்தர் என்னை ஆசீர்வதித்தார் என்று எண்ணியிருக்க, அதே ஆசீர்வாதத்திற்குப் பயங்கரமான சோதனையும் வருமானால் நமது மனநிலை எவ்வளவாகப் பாதிப்படையும்? அச்சமயங்களில் புலம்பிக் கொண்டிராமல், சூனேமியாள் செய்ததையே நாமும் ஏன் செய்யக்கூடாது? கர்த்தர் கொடுத்ததைக் கர்த்தரிடமே கொடுத்து, வேறு மனுஷர் தலையிடாதபடி கதவை அடைத்துவிடுவோம். விசுவாசத்தில் உறுதியாயிருப்போம். தேவகரத்தில் ஒப்புவிக்கிறதை அவர் உயிருள்ளதாக திரும்பவும் தருவார் என்ற மனஉறுதி நமக்குத் தேவை. ஆக, நாமும் சுகம் விசாரிக்கப்படும்போது, ‘சுகந்தான்” என்று நாம் எவ்வேளைகளிலும் கூறலாமே. கர்த்தர் நமக்காக யாவற்றையும் செய்துமுடிப்பார்.

? இன்றைய சிந்தனைக்கு:

 உறுதியான விசுவாசம் என்பதைக் குறித்து என் மனதின் எண்ணம் என்ன? அதைச் செயற்படுத்தவேண்டிய சமயங்களில் என்னால் உறுதியாக நிற்க முடியுமா?

? எமது விலாசம்
Back to the Bible (Sathiyavasanam),
120 A, Dharmapala Mawatte, Colombo 7, Srilanka.
Email: sathiyavasanam@backtothebible.lk
website: Backtothebible.lk  |  www.Sathiyavasanam.lk
Facebook: www.fb.com/sathiyavasanam
Call: 011-4691500 | 011- 4691532

? அனுதினமும் தேவனுடன்.

2 Responses

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *