? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : 1 சாமுவேல் 17:32-40

தேவனுக்குள்ளான கண்ணோக்கு

…சிங்கத்தையும் …கரடியையும் …நான் கொன்றேன். விருத்தசேதனமில்லாத இந்தப் பெலிஸ்தனும் அவைகளில் ஒன்றைப்போல இருப்பான். 1சாமுவேல் 17:36

நமது உள்ளுணர்வு மாத்திரமல்ல, நமது கண்ணோக்கும் நமது ஜீவிய ஓட்டத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. கடற்கரையில் உட்கார்ந்திருந்த ஒருவர், என்ன அழகு என்றார்; மற்றவர், என்ன இருந்தாலும் உப்புத்தானே என்றார். அடுத்தவர், இதைப் பார்க்க எனக்கு சுனாமி எழும்புவதுபோலத் தெரிகிறது என்றார். கடல் ஒன்று, ஆனால், பார்ப்பவர்கள் கண்ணோக்குகள் எத்தனை வித்தியாசம்! முதலாமவர் மனதில் அமைதி இருக்கும். அடுத்தவர் மனதில் அலுப்பு இருக்கும். மூன்றாமவர் மனதில் பயம்தான் இருக்கும். ஒரு விடயத்தை எப்படி நாம் நோக்குகிறோமோ அதற்கு ஏற்பவே நமது பதில், செயல், கிரியையும் இருக்கும்.

ஏறத்தாழ ஒன்பது அடி உயரமுள்ள பலசாலியான தோற்றத்தைக்கொண்ட ஒருவன் முன்னே நிற்கிறான். அவன் அணிந்திருந்த அணிகலங்கள் ஒவ்வொன்றும் ஒரு தனி மனிதனால் சுமப்பதற்கு முடியாதளவு பாரம். ஒரு பக்கம் பெலிஸ்தரும், இராட்சத தோற்றம்கொண்ட அந்த மனிதனும்; எதிரே சவுலும் இஸ்ரவேலின் யுத்தபடையும். நடுவே பள்ளத்தாக்கு. யார் யுத்தத்தை ஆரம்பிப்பது? சவுலும் இஸ்ரவேலர் அனைவரும் அந்தப் பெலிஸ்தன் பேசியதைக் கேட்டே கலங்கி மிகவும் பயந்தார்கள்(1சாமு.17:11). தங்களை அழிக்க வந்தவனாகவே அவனைப் பார்த்தார்கள். ஆனால், வாலிபனாகிய தாவீது, அவனை வேறுவிதமாகப் பார்த்தான். இவன் பெலிஸ்தன், எதிராளி; இவன் விருத்தசேதனம் இல்லாதவன்; தேவனுடைய உடன்படிக்கையில் பங்கற்றவன். அதிலும் மேலாக, இவன் ஜீவனுள்ள தேவ சேனைகளை நிந்திக்கிறவன். தான் கொன்றுபோட்ட சிங்கத்தையும் கரடியையும் போலத்தான் இவனும். இதுதான் தாவீதின் கண்ணோக்கு. சவுலும் மற்றவர்களும் அவனைப் பயங்கரமானவனாகவே பார்த்தார்கள். அவர்களால் அவனைச் சற்றும் நெருங்க முடியவில்லை. தாவீதோ கோலியாத்தை, தேவனுக்குள்ளாகப் பார்த்தான்; எதிர்கொண்டுபோய் அவனை வீழ்த்தினான்.

எவ்வித கடின சூழ்நிலையானாலும், நம் தேவன் எல்லாவற்றுக்கும் மேலாக உயர்ந்த வராக இருக்கின்றார். எல்லா சூழ்நிலையின் கட்டுப்பாடும் அவருடைய கரத்திலேயே இருக்கிறது என்ற உறுதி நமக்கு இருக்குமானால், சூழ்நிலைகளை நாம் கண்ணோக்கும் விதமே மாறிவிடும். நாம் மனித கண்ணோக்கில் காரியங்களைப் பார்ப்பதனால் தான் பயந்து தோற்றுப்போகிறோம். நமது கண்ணோக்கு தேவனுக்குள்ளானதாக இருக்குமானால், தேவன் எப்படி நோக்குகிறாரோ, அப்படியே நாமும் பார்க்கமுடியும். பின்னர் எதற்கும் பயப்படவேண்டியதில்லை. நமக்கு ஜெயம் உறுதி. ஆனால், நாம் தேவ கண்ணோக்குடன் இசைந்திருக்கிறோமா? சிந்திப்போம்.

? இன்றைய சிந்தனைக்கு:

 எந்தவொரு விடயத்தையும் தேவன் காண்கிறபடி நானும் காணும்படிக்கு, என் மனநோக்கு எப்போதும் தேவனோடு இசைந்திக்க என்னைத் தருவேனா?

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin