? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: லூக்கா7:36-50

மனம்வருந்தினாள்!

…அழுதுகொண்டு, அவருடைய பாதங்களைத் தன் கண்ணீரினால் நனைத்து, தன் தலைமயிரினால் துடைத்து, …பரிமளதைலம் பூசினாள். லூக்கா 7:38

எத்தனை தவறுகள் செய்தாலும், எத்தவறுமே செய்யாதவர்கள்போலத் தங்களைக் காட்டிக்கொள்கிற சிலர் இருக்கிறார்கள். தவறை ஒத்துக்கொள்பவர்களுக்கு அவர்கள் திருந்துவதற்கு உதவிசெய்யலாம். தவறுசெய்துவிட்டு எதுவுமே செய்யாதவர்கள்போல் நடிப்பவர்களை எதுவும் செய்யமுடியாது. தவறைத் திருத்திக்கொள்ள முதற்படி மனம்வருந்துதல் மட்டுமே.

இங்கே இந்தப்பெண் ஒரு பாவியான ஸ்திரீ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அவள் என்ன பாவம் செய்தாள் என்பது குறிப்பிடப்படவில்லை. அவள் இயேசுவின் பாதத்தண்டை நின்று அழுதாள்; தன் கண்ணீரால் அவர் பாதங்களை நனைத்தாள்@ பாதங்களை முத்தஞ்செய்தாள்; பரிமளதைலம் பூசினாள். ஆம், இயேசு அவளது பாவங்களை மன்னித்திருந்தார். அவள் அனுபவித்த விடுதலையே இந்த நன்றிச்செயலை வெளிப்படுத்தியிருந்தது. இயேசுவை விருந்துக்கு அழைத்த பரிசேயன் இவளை முன்கூட்டியே அறிந்திருக்கிறான் போலும், ஏனெனில் அவன் முறுமுறுத்தான். அதற்கு இயேசு ஒரு உதாரணத்தின் மூலம், அவனுக்குக் காரியத்தை விளங்கவைக்கிறதைக் காண்கிறோம்.

இயேசு கேட்ட கேள்விக்கு, அதிகமாய் கடன்பட்டிருந்தவனே அதிக அன்பாயிருப்பான் என்று சீமோன் சொன்னபோது, ‘நீ செய்யாத எல்லாவற்றையும் இவள் செய்தாள்; ஆகவே இவளுக்கு அநேக பாவங்கள் மன்னிக்கப்பட்டது” என்று ஆண்டவர் உணர்த்து வதைக் காண்கிறோம். நாம் செய்த பாவங்களுக்காக மனம்வருந்தி மன்னிப்புக்கேட்பதே உண்மையான மனந்திரும்புதலுக்கு அடையாளம். மனந்திரும்பிப் பெற்றுக்கொண்ட மன்னிப்பு அருளுகின்ற சந்தோஷம் சொல்லிமுடியாதது. அந்த நன்றியைக் கிரியையில் வெளிப்படுத்தாமல் யாராலும் இருக்கவேமுடியாது. அதைவிடுத்து பாவஅறிக்கை செய்வோம் என்றுவெறும் வார்த்தைகளால் அறிக்கைசெய்வது உண்மையான மனந்திரும்புதல் ஆகாது. தகப்பனைப் பிரிந்து, தன் இஷ்டம்போல வாழ்ந்த இளையமகன், தனது பிழையை உணர்ந்ததும், செய்த முதற்காரியம். எழுந்து தன் தகப்பனைத் தேடிப்போய், ‘பரத்துக்கும் உமக்கும் விரோதமாகப் பாவம் செய்தேன். உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கும் நான் பாத்திரனல்ல” என்று மன்றாடினான். அவன் தகப்பனின் மன்னிப்புடன், அன்பையும் பெற்றுக்கொண்டான். மெய்யான மனந்திரும்புதலும், மன்னிப்பும் தருகின்ற சந்தோஷத்தை அனுபவித்தால்தான் தெரியும். ‘அறியாமையுள்ள காலங்களைத் தேவன் காணாதவர் போலிருந்தார், இப்பொழுதோ மனந்திரும்பவேண்டுமென்று எங்குமுள்ள மனுஷருக்குக் கட்டளையிடுகிறார்.” அப்போஸ்தலர் 17:30.

? இன்றைய சிந்தனைக்கு:

மனந்திரும்புதல் இல்லாமல் பாவமன்னிப்பில்லை, இதைக் குறித்துச் சிந்தித்து மனந்திரும்புவேனாக.

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin