? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு: உபாகமம் 11:19-21 சங்கீதம் 23

இருதயத்தை வார்த்தையால் நிரப்பு!

நீங்கள் என் வார்த்தைகளை உங்கள் இருதயத்திலும், உங்கள் ஆத்துமாவிலும் பதித்து …கையின்மேல் அடையாளமாகக் கட்டிக் கொள்ளுங்கள். உபா.11:19

கஷ்டமும் காரிருளும் சூழ்ந்த இந்நாட்களில் கிறிஸ்தவர்களுக்கு நல்ல ஆலோசனை அளிக்க அதிக உதவியாய் அமையும் புத்தகங்களில் சங்கீதப் புத்தகமும் ஒன்று. அதிலும் சிறியோர் முதல் பெரியோர் வரை விரும்பி வாசித்து மனனம் செய்வது 23ம் சங்கீதம் என்றால் மிகையாகாது. இந்தச் சங்கீதம் நமக்கு மனநிறைவையும் மன மகிழ்ச்சியையும் பற்றிய பூரணமான படமொன்றை முன்வைக்கிறது. ஒவ்வொரு மனிதனும் சமாதானம், மனநிறைவு, நீடித்த திருப்தி போன்றவற்றிற்காக ஆழ்ந்த அவா கொண்டிருக்கின்றான். முன்பு தேவன் செய்ததைப்பற்றிய ஒரு வரலாற்று விபரத்தையோ, அடுத்த தலைமுறையினருக்கு செய்யப்போகும் காரியத்தைப் பற்றியோ இந்த சங்கீதம் கூறாமல், கர்த்தரில் விசுவாசம் வைக்கின்ற ஒருவனுக்கு அவர் உடனடியாகச் செய்ய இருப்பவற்றை சுட்டிக்காட்டும் சங்கீதமாக இருக்கின்றது. இதனாலேயே அநேகர் இதனை விரும்பி மனனம் செய்துகொள்கின்றனர்.

அண்மைக்கால யுத்தமென்றில் கிறிஸ்தவப் போர்வீரர் ஒருவர் எதிரியினால் சிறைப் பிடிக்கப்பட்டு பயங்கர சிறைச்சாலையொன்றிலே அடைத்து வைக்கப்பட்டார். அங்கே அவருக்கு மூளைச்சலவை சித்திரவதை செய்யப்பட்டது. அவருக்குள் புதிய கருத்துக ளைப் புகுத்த, திரும்பத்திரும்ப சொல்லிக்கொடுத்தபோதிலும், அது பயனளிக்கவில்லை. ஆழ்ந்த மனசோர்வோடு விரக்தியுற்றிருந்த அந்நிலையிலும் சிறுபிராயத்தில் இவரது தாயார் கற்றுக்கொடுத்திருந்த 23ம் சங்கீதத்தை அவர் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தார். இந்த சங்கீதத்தால் நிறைந்திருந்த மூளையை அவர்களால் சலவை செய்யமுடியவில்லை. வேதவசனங்களால் நிறைந்த மனதுடைய ஒருவனை எவ்விதத்தி லும் மூளைச்சலவை செய்யமுடியாது.

 இன்று நமது இருதயமும் சிந்தனையும் எதினால் நிறைந்திருக்கிறது? வாயிலிருந்து நம்மையும் மீறி என்னென்ன வெளிவருகின்றன? அதுவே நமது இருதயத்திலும் மூளை யிலும் நிறைத்திருக்கும். இன்று அநேகமாக பலரது சிந்தனைகளிலே கொரோனா தொற்றின் செய்திகளே நிறைந்துள்ளது என்பதை மறுக்கமுடியாது. ஆனாலும் நமது ஆண்டவர் அதனிலும் உயர்ந்தவர். ஆகவே, இந்த சூழ்நிலைக்கும் மேலானவருடைய, இன்றும் எல்லாக் கட்டுப்பாட்டையும் தம்மகத்தே வைத்திருக்கிறவரின் ஜெயம் தரும் வார்த்தைகளால் நம் இருதயத்தையும் சிந்தனைகளையும் நிரப்புவோமாக. உபாகமம் புத்தகத்தில் கூறப்பட்டதுபோல தேவனுடைய வார்த்தையை எங்கள் இருதயத்திலும், எங்கள் ஆத்துமாவிலும் பதித்து வைப்போமாக. என்றென்றும் எங்கள் கண்களுக்கு முன்பாக அவருடைய வசனமே ஞாபகக்குறியாக இருக்கட்டும். அப்போது என்னதான் மாற்றம் வந்தாலும், பயமுறுத்தினாலும் நாம் அசைக்கப்பட மாட்டோம்.

? இன்றைய சிந்தனைக்கு:  

ஒவ்வொரு சூழ்நிலைகளையும் ஜெயிக்கத்தக்க வார்த்தை களைக் கர்த்தர் தந்திருக்கிறார். அவற்றைத் தேடி வாசித்து மனனம் செய்து எனது இருதயத்தை வார்த்தைகளால் நிரப்புவேனா?

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin