? சத்தியவசனம் – இலங்கை. ?? 

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: 2இராஜாக்கள் 4:8-13

குறைவிலும் நிறைவு

அதற்கு அவள்: என் ஜனத்தின் நடுவே நான் சுகமாய்க் குடியிருக்கிறேன் என்றாள். 2இராஜாக்கள் 4:13

சூனேம் ஊரில் தன் கணவனுடன் வாழ்ந்திருந்த இவள் ஒரு பணக்காரப் பெண்மணி. நற்குணசாலி. ஜனங்கள் மத்தியிலே மதிப்புப்பெற்றவளும், கனம் பொருந்தியவளுமாயிருந்தாள். தேவமனுஷன் வந்திருக்கிறார் என்று அறிந்ததும், மெய்யாகவே அவரைக் கனப்படுத்தும் நோக்கத்துடன் போஜனத்திற்காக வருந்தி அழைக்கிறாள். அவள் தன் இஷ்டப்படி நடப்பவள் அல்ல. தன் கணவனின் ஆலோசனையுடனேயே எலிசாவிற்கு தன் வீட்டு மெத்தையிலே ஒரு அறையை ஒழுங்குபண்ணி, அடிப்படைத் தேவைகளை பூர்த்தியாக்கி, அதனை எலிசாவிற்கென்றே விட்டுவிட்டாள். இவற்றிலும் மேலாக, அவளுக்கு பதிலுபகாரம் செய்ய நினைத்த எலிசாவிற்கு அவள் கூறிய பதிலே மிகவும்  முக்கியமானது. ‘என் ஜனத்தின் நடுவே நான் சுகமாய்க் குடியிருக்கிறேன்” அதாவது, தனக்கு எந்தக் குறையுமில்லை என்பதுபோல் அவள் பதிலளித்தாள். ஆனால், இவளுக்கு பிள்ளையில்லை. புருஷனும் பெரிய வயதுள்ளவன். அப்படியிருந்தும் அவளுக்கு அது குறைவாகத் தெரியவில்லைப் போலும். தன் ஜனத்தின்மீது அவள் கொண்டிருந்த நேசம் அவளது குறைகளை அவளுக்கு மறைத்துப்போட்டது.

பிரியமானவர்களே, இப்பெண் தனக்குப் பிள்ளையில்லை என்று கவலைப்பட்டு தாழ்வு மனப்பான்மையால் கூனிக்குறுகிப் போகவில்லை. அதேசமயம் அங்கே வந்த தேவ மனுஷனுக்கு நன்மைசெய்தால் தனக்கு நன்மை கிட்டும் என்ற மனநோக்கமும் அவளுக்கு இருந்ததாக தெரியவில்லை. அத்துடன், தனக்கிருந்த நிறைவிலும் தேவமனுஷனுக்கு செய்யவேண்டியதை நல்மனதோடும் முழுமனதோடும் எதிர்ப்பார்ப்பு எதுவுமின்றிச் செய்தாள். அந்த மெத்தை அறையில் எந்தப் பங்கும் அவள் எடுக்கவில்லை. அதை எலிசாவுக்கென்றே பூட்டிவைத்தாள். அவள், குறைவுகள் மத்தியிலும் நிறைவைக் கண்டுகொள்ளும் ஒருத்தி என்பதை இந்த மனப்பான்மையே எடுத்துக்காட்டுகிறது.

யாராவது விருந்தாளிகள் நமது வீட்டில் தங்க வருகிறார்கள் என்றால், நாம் எத்தனை ஆயத்தம் செய்கிறோம். முழுமனதுடனோ அரை மனதுடனோ நமது நேரம் வேலை யாவையும் ஒதுக்கிவிடுகிறோம். அவர்களும் வந்துவிட்டுப் போய்விடுவார்கள். நம்முடனே என்று தங்கி நம்முடனே வாசம்பண்ணும் ஆண்டவருக்காக நமது வீடுகளில் ஒரு சிறு இடத்தையாகிலும் ஜெபத்திற்காக ஒதுக்கிவைத்திருக்கிறேனா? தினமும் 24 மணிநேரத்தில் தேவனுக்கென்று பிரித்துவிடப்பட்ட நேரம் உண்டா? கர்த்தருடைய காணிக்கை, தேவனுக்கென்று முதலிடமும், வேறுபிரித்த வாழ்க்கையும் நமக்கு இருக்குமாயின், குறைவுகளிலும் நிறைவு காணும் மனப்பக்குவம் வந்திருக்கும். பெயர் அறியப்படாத அந்தப் பெண்மணி தன் குறைவை எண்ணாமல், கர்த்தரை நேசித்தாள். தேவ ஊழியனைக் கனப்படுத்தினாள். ஜனத்தை நேசித்தாள். மனநிறைவைக் கண்டாள்.

? இன்றைய சிந்தனைக்கு:

கர்த்தர் அளித்த நிறைவுகளைக் காணமுடியாதபடி நமது கண்கள் மறைக்கப்பட்டிருக்கின்றனவா! ஒரு தாள் எடுத்து, நமக்குத் தேவன் அருளியுள்ள ஆசிகளைச் சற்றுப் பட்டியலிட்டுப் பார்ப்போமா!

? எமது விலாசம்
Back to the Bible (Sathiyavasanam),
120 A, Dharmapala Mawatte, Colombo 7, Srilanka.
Email: sathiyavasanam@backtothebible.lk
website: Backtothebible.lk  |  www.Sathiyavasanam.lk
Facebook: www.fb.com/sathiyavasanam
Call: 011-4691500 | 011- 4691532

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin