? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : எபிரெயர் 4:9-16

தைரியமாகவே சேருவோம்!

ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யும் கிருபையை அடையவும், தைரியமாக கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம். எபி.4:16

நம்முடைய இக்கட்டுகளில் நமக்கு யார்வேண்டுமானாலும் ஆறுதல் கூறலாம். ஆனால் நாம் கடந்துபோகின்ற கடின பாதையில் ஏற்கனவே சென்ற ஒருவரால்தான் நமது உண்மையான வலியைப் புரிந்துகொள்ளமுடியும். அவரிடமே நமக்கு மெய்யான ஆறுதல் கிடைக்கும்.

வழிநடத்துதல் கிடைக்கும். கர்த்தராகிய இயேவானவரும் நம்மைப்போன்ற ஒருவராக, ஒரு முழு மனிதனாக, ஒரு மனிதனுடைய வாழ்வையே பூமியிலே வாழ்ந்தார். அவர் பிறந்தபோதே சோதனை அவரைச் சந்தித்தது. குழந்தையாக இருந்தபோதே எகிப்துக்குப் போக நேர்ந்தது. ஞானஸ்நானம் பெற்று வெளியேறியபோதே, சோதிக்கப்படும்படிக்கு ஆவியானவர் தாமே அவரை வனாந்தரத்திற்கு எடுத்துச் சென்றிருந்தார். இயேசுவைப் பிதாவிடமிருந்தும் பிதாவின் சித்தத்திலிருந்தும் பிரித்துப்போட அன்றே சாத்தான் தன் சோதனை களை ஆரம்பித்தான். சிலுவையில்கூட கர்த்தரைச் சோதனை சோதித்தது. “நீர் தேவனுடைய குமாரனேயானால் சிலுவையிலிருந்து இறங்கிவா” என்று பரிகசிக்கப் பட்டபோது இயேசு எவ்வளவாய் பாடுபட்டிருப்பார். ஆம், சோதிக்கப்படுகின்ற நம்மோடு அவர் தம்மை அடையாளப்படுத்தினார். ஆனால், எந்த சோதனையும் அவரைப் பாவத்தில் தள்ளிவிட அவர் இடமளிக்கவில்லை. இது நமக்கு உற்சாகமளிக்கும் விடயமாகும். நமக்கு சோதனை வந்தாலும் நாம் பாவத்தில் விழவேண்டிய அவசிய மில்லை என்பதை ஆண்டவர் நமக்கு வாழ்ந்து காட்டியுள்ளார்.

 நம்மையும், நமது பலம் பலவீனங்களையும் முற்றிலும் அறிந்தவரும், சோதனை யின் வேதனையை அனுபவித்தவரும், மொத்தத்தில் இன்று நாம் எதிர்கொள்கின்ற வாழ்வின் சகலவற்றிற்கும் முகங்கொடுத்தவரும், சகலத்திலும் வெற்றிகொண்டவருமாகிய ஆண்டவர் நமக்கிருக்கும்போது, நாம் ஏன் நமது ஜெபங்களில் தயங்க வேண்டும்? ஏன் ஜெபிக்கப் பயப்படவேண்டும்?

“கிருபாசனம்” எத்தனை மேன்மையான இடம் அது. அது தேவனுடைய பிரசன்னம், அதில் தைரியத்தோடு சேருகின்ற சலாக்கியத்தை நாம் பெற்றிருப்பதால் பயத்தையும் குற்றமனசாட்சியையும் களைந்துவிட்டு, நமது அப்பா பிதாவிடம் தைரியமாகவே செல்லுவோமாக. இன்று எருசலேம் தேவாலயத்தில் அல்ல; நமது இருதயத்திலே அவருடைய கிருபாசனம் இருக்கிறது. உயிர்த்தெழுந்த ஆண்டவர் தாமே நம்மைப் பலப்படுத்துவாராக. அவருடைய சகாயஞ்செய்யும் கிருபையை நாம் அடைவோ மாக. தைரியமாய் கிருபாசனத்தண்டையில் சேருவோமாக.

? இன்றைய சிந்தனைக்கு:

ஆண்டவர் என் ராஜாவாக இருப்பதால், அவருக்குரிய கனத்துடனும், அவரே என் அப்பா என்பதால் தைரியத்துடனும் என் ஜெப வாழ்வை ஊன்றிக்கட்டுவேனாக.

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin