? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு: மத்தேயு 7:13-14, 1கொரி 1:18-24

விசாலமா? இடுக்கமா?

ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது. அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர். மத்தேயு 7:14

நவீன வசதிகள் மிகுந்த இந்தக் காலத்தில் இன்னமும் மாட்டு வண்டியில் பிரயாணம் பண்ணினால் பார்க்கிறவர்கள் என்ன சொல்லுவார்கள் என்பது நமக்குத் தெரியும். மாட்டுவண்டி சரிந்தால் என்ன நடக்கும், அதிவேக வண்டி விபத்துக்குள்ளானால் என்ன நடக்கும் என்பதுவும் நமக்குத் தெரியும். வாழ்க்கையை இலகுவாக்கத்தக்க பல விசால மான பாதைகளை உலகம் கண்டுபிடித்திருக்கிறது. அதைத் தவிர்த்து இன்னமும் பழைய இடுக்கமான வழிகளில் செல்லுகிறவர்களை நிச்சயம் உலகம் கேலி செய்யும், முட்டாள்கள் என்று எண்ணும். இயல்பாகவே மனிதன் கவர்ச்சிகளுக்கு இழுப்புண்டு மாயையான இன்பத்தை அனுபவிக்கவே விரும்புகிறான். விசாலமான வழியின் விளைவு களைச் சிந்திக்க அவன் விரும்புவதேயில்லை.

ஆண்டவர் இரண்டுவிதமான வாசல்களைக்குறித்தும் வழிகளைக்குறித்தும் கற்றுக் கொடுத்துள்ளார். ஒன்று கேட்டுக்குள் செல்கின்ற வாசல்; அதன் வழி விசாலமானது. அடுத்தது, ஜீவனுக்குள் போகிற வாசல்; அதன் வழியோ நெருக்கமும் இடுக்கமுமா னது. இன்று நாம் எந்த வழிக்குள் பிரவேசித்துச் சென்றுகொண்டிருக்கிறோம்? உலகம் நமக்குமுன் வைத்திருக்கின்ற இலகுவான விசாலமான வாசலும் வழியும் இன்பமாக வும், களியாட்டம் மிகுந்ததாகவும் இருக்கும். அநேகர் நம்முடன் பயணிப்பார்கள், விருப்ப மானவற்றை அனுபவிக்கலாம். ஆனால், ஆவிக்குரிய வாழ்வின் வாசலோ இடுக்கமா னது, வழியோ கடினமானது. இந்த வழியில் செல்கிறவனால் விசாலமான வழியில் அனுப விக்கக்கூடிய பாவச்சந்தோஷங்களை அனுபவிக்க முடியாது; உலகத்தோடு ஒத்துப் போகவும் முடியாது. இதனால் அநேக பாவச்சந்தோஷங்களை இழக்கவேண்டிவரும். உலகத்தோடு மோதவேண்டிய சூழ்நிலைகளும் உருவாகும். ஆனால் இந்தப் பாதை யையே தெரிந்துகொண்டு நடக்கும்படி ஆண்டவர் கற்றுக்கொடுத்தார். ஏனெனில் இது நம்மை ஜீவனுக்கு வழிநடத்திச் செல்லுகிறது.

இன்று நாம் எந்தப் பாதையைத் தெரிவுசெய்து நடந்துகொண்டிருக்கிறோம் என்பதை உண்மை இதயத்துடன் ஆராய்ந்து அறிக்கைசெய்வோமாக. கடந்த காலங்களில் நாம் எப்படி எப்படியோ வாழ்ந்திருக்கலாம். காலங்கள் ஏற்கனவே கடந்துசென்றுவிட்டன. இன்னமும் வாழ்வுடன் விளையாடிக்கொண்டிருக்க முடியாது. இந்த உலக இன்பமா? கர்த்தருடன் நீடித்து வாழுவதற்கான ஜீவனா? ஜீவனுக்குரிய வழி இப்போது கடினமாக இருந்தாலும், அது நித்திய மகிழ்ச்சிக்குரியது என்பதை உணர்ந்து இன்றே நமது வாழ்வைச் சரியான வழிக்குத் திருப்புவோமாக. உலகம் நம்மைக் கேலிபண்ணலாம். ஆனால், முடிவில் எல்லாம் விளங்கும்.

? இன்றைய சிந்தனைக்கு:  

உலகத்துக்குப் பயந்து அதனுடன் ஒத்து ஓடுகிறேனா? அல்லது, சிலுவை சுமக்க நேரிட்டாலும் ஜீவனுக்குப் போகும் பாதையில் சென்றுகொண்டிருக்கிறேனா? என்னை நானே ஆராய்வேனாக.

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin