? சத்தியவசனம் – இலங்கை. ?? 

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: 1இராஜாக்கள் 17:8-24

தடுமாறும் விசுவாசம்

…தேவனுடைய மனுஷனே, என் அக்கிரமத்தை நினைக்கப் பண்ணவும், என் குமாரனைச் சாகப்பண்ணவுமா என்னிடத்தில் வந்தீர்… 1இராஜாக்கள் 17:18

அவளோ ஒரு ஏழை விதவை. ஒரே மகனுடன் எளிமையாய் ஜீவித்து வந்தாள். தேசத்தில் மழையில்லாததால் தண்ணீர் அற்றுப்போய் பஞ்சம் உண்டாயிருந்தது. தன்னிடமிருந்த ஒரு பிடி மாவிலும் கொஞ்ச எண்ணெயிலும் அப்பம் சுடுவதற்காக விறகு பொறுக்கச் சென்ற அவளை, எலியா சந்தித்து, தண்ணீர் கேட்டான். அவளும் தண்ணீர் எடுத்துவரும்படிக்கு போகும்போது, திரும்பவும் அழைத்து, உண்ண உணவும்  கேட்டான். அவள் உள்ளம் உடைந்தது. ‘நானும் மகனும் கடைசியாகச் சாப்பிட்டு சாவதற்கே ஒரு பிடி மாவு வைத்திருக்கிறேன்; அதையே இப்போது ஆயத்தம்பண்ணப்  போகிறேன்” என்று கூறினாள். ~பயப்படாதே| என்று கூறிய எலியா, ‘அப்படியெல்லாம் செய்யாதே” என்று தடுக்கவில்லை. மாறாக, ‘நீ சொன்னபடி செய்ய ஆயத்தப்படு. ஆனால், அதற்கு முன்பு எனக்கு ஒரு சிறிய அடையைப்பண்ணித் தந்துவிட்டு, பின்னர்  உன் பிள்ளைக்கு உணவைச் செய்” என்றார் எலியா. மேலும், தேவன் அவளுக்கு வைத்திருக்கும் ஆசீர்வாதத்தை விளக்குகிறார். எலியா கூறியபடி அவள் செய்தாள்;  தேவமகிமையைக் கண்டாள். அவளது வீட்டின் பானையிலே மா செலவழியவில்லை, கலசத்தில் எண்ணெய் குறைவடையவில்லை.

இந்தப் பெரிய அதிசயத்தைக் கண்ட அவள், தன் மகன் மரணத்திற்கேதுவான வியாதிப் பட்டதைக் கண்டபோது தடுமாறியே விட்டாள். தானும் மகனும் சாப்பிட்டுச் செத்துப்போவதற்கு ஆயத்தம்பண்ணிய அவள், இப்போது, ‘என் மகனைச் சாகப்பண்ணவா வந்தீர்?”என்று கதறுகிறாள். வெறுமையாகாத தனது பானையையும், எண்ணெய் வற்றாத கலசத்தையும் அந்த விதவைப் பெண், ஒருகணம் திரும்பிப் பார்த்திருப்பாளேயானால், தன் மகன் வியாதிப்பட்டபோது தடுமாறியிருப்பாளா? அவள் கீழ்ப்படிவுள்ளவள்; தேவ மனுஷனுக்கு முதலிடம் கொடுத்தவள்@ தெய்வீக அற்புதத்தைக் கண்டவள்; குறைவின்  மத்தியிலும் தன் விசுவாசத்தை வளர்த்துக்கொண்டவள். இது எல்லாமே உண்மை. ஆனால், எதிர்பாராத பிரச்சினை தாக்கியபோது, அவளது விசுவாசம் தடுமாறத் தொடங்கியது. தேவனுடைய வல்லமையை அவள் மறந்துவிட்டாள்.

தேவபிள்ளையே, நிறைவின் மத்தியில் கர்த்தரை நம்புவது இலகுவான காரியம்; ஆனால், சோதனைகள் இழப்புகள் மத்தியிலும் தேவனை விடாமல் நம்புவதே மேலான விசுவாசமாகும். தடுமாறும் தருணங்கள் நேரிடும்போது, சற்றுத் திரும்பிப் பாருங்கள். கர்த்தர் அற்புதமாய் நம்மைச் சந்தித்த சம்பவங்களை நினையுங்கள். ‘இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய தேவனே” நம் தேவன். அவர் மாறாதவர். எல்லா நிலைகளிலும் நம்மை ஆதரிப்பார். ஆகவே, நாம் மனுஷர்தானே என்று சாட்டுச் சொல்லாமல், எந்த நிலைமையிலும் கர்த்தரில் நம்பிக்கையாயிருப்போம்.

? இன்றைய சிந்தனைக்கு:

பிரச்சனை நேரங்களில் விசுவாசத்தில் தழும்பிப்போன சந்தர்ப்பங்கள் உண்டா? ஏன் அப்படியாயிற்று என்பதைச் சிந்தித்து உணர்ந்து, எந்த நிலையிலும் தேவனைப் பற்றியிருப்பேனாக.

? எமது விலாசம்
Back to the Bible (Sathiyavasanam),
120 A, Dharmapala Mawatte, Colombo 7, Srilanka.
Email: sathiyavasanam@backtothebible.lk
website: Backtothebible.lk  |  www.Sathiyavasanam.lk
Facebook: www.fb.com/sathiyavasanam
Call: 011-4691500 | 011- 4691532

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin