📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰

📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு: உபாகமம் 16:21-22 உபாகமம் 17:1-7

கர்த்தர் வெறுக்கும் விக்கிரகாராதனை

இவரே மெய்யான தேவனும் நித்திய ஜீவனுமாயிருக்கிறார். …பிள்ளைகளே, நீங்கள் விக்கிரகங்களுக்கு விலகி, உங்களைக் காத்துக்கொள்ளுவீர்களாக. 1யோவா 5:20,21

நமது பெற்றோருடன் முரண்பட்டு, வேறு பெற்றோரை நாம் தேடிக்கொள்ள முடியுமா? நமது பெற்றோர் மட்டும்தான் நமது பெற்றோர்; அவர்களுக்கூடாகவே நாம் பூமியில் பிறந்தோம். இன்னும் சொன்னால், நம்மைப் பூமிக்குக் கொண்டுவருவதற்குக் கர்த்தரால் தெரிந்தெடுக்கப்பட்டவர்கள். அந்த இடத்தை வேறு யாராலும் நிரப்பவேமுடியாது.

இப்படியிருக்க, தன்னைப் படைத்தவரை மனிதன் எப்படி மாற்றக்கூடும்? தன்னை மீட்ட தேவனை விட்டு வேறு தெய்வங்களை எப்படி நாடக்கூடும்? அதிலும், தன்னைப் படைத்த வருடைய படைப்புகளையே தெய்வமாக்கி எப்படிச் சேவிக்கமுடியும்? “இஸ்ரவேல் என்னுடைய குமாரன்; என் சேஷ்டபுத்திரன்” என்ற கர்த்தர் (யாத்.4:22) தமது மகனை விட்டுக் கொடுப்பாரா? ஆகையால்தான், ‘…என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம். யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம். நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும்வேண்டாம்” என்று கர்த்தர் முதற் கட்டளையாகக் கொடுத்தார். இஸ்ரவேலின் வரலாற்றைப் பார்க்கும்போது, கர்த்தர், இஸ்ரவேலில் மிகவும் கோபம்கொண்ட முக்கியமான விடயம், விக்கிரக ஆராதனை தான் என்றால் மிகையாகாது. மாம்ச வேசித்தனமும், அந்நிய தேவர்களைச் சேவித்த விடயமும் கர்த்தரை மிகவும் வேதனைப்படுத்தியது.

இன்று கிறிஸ்துவை பின்பற்றும் நாம் உருவங்களை வணங்குவதில்லை. ஆக, இந்தக் கட்டளை நமக்குப் பொருந்தாது எனலாமா? இல்லை. தேவனுடைய இடத்தில் வேறு எதை நிறுத்தினாலும், அது விக்கிரகமே. ஆரம்பகால சபைகளுக்குள்ளிருந்த விக்கிரக ஆராதனையைக் குறித்து பவுல்: “விபசாரக்காரனாவது, அசுத்தனாவது, விக்கிரகாராதனைக்காரனாகிய பொருளாசைக்காரனாவது தேவனுடைய ராஜ்யமாகிய கிறிஸ்துவின் ராஜ்யத்திலே சுதந்தரமடைவதில்லையென்று அறிந்திருக்கிறீர்களே” (எபே.5:5) என்கிறார். பணஆசை, பொருளாசை நம்மை இலகுவாகவே தீமைக்குள் வீழ்த்திப்போடும். பணம், பொருள், உறவு யாவும் வாழ்வுக்கு அவசியம்; ஆனால் அவையே நம்மை ஆளுவதற்கு இடமளிப்போமானால், நமக்கு அவையே விக்கிரகங்களாகி விடுகிறது. மேலும், வார்த்தைக்குப் புறம்பாக அந்நியருடன் திருமணத்தில் இணைந்து, அவர்களின் விக்கிரகங்களுக்கு முன்னிடம் கொடுக்கிறவர்களும் இருக்கிறார்கள். இன்று இணையத்தளம், நவீனமான பல விடயங்கள் என்று பல விடயங்கள் பலருக்கு விக்கிரகங்களாகி விட்டன. கர்த்தர் இவற்றை அருவருக்கிறார். ஆண்டவரை நாம் வணங்கினாலும், கிறிஸ்தவர்கள் என்று இருந்தாலும், நாம் கிறிஸ்துவுக்கே மாத்திரமே உரியவர்கள் என்பதை மறக்கக்கூடாது. கர்த்தருக்குரிய நேரத்தை, அவருடனான உறவை வேறு எதற்காவது கொடுத்திருந்தால் இன்றே மனந்திரும்புவோம்.

💫 இன்றைய சிந்தனைக்கு:

பரிசுத்த ஆவியானவர் நம்மை ஆராய்ந்து பார்க்க இடமளிப்பேனாக. எங்கே நான் கர்த்தரைப் பின்தள்ளியிருக்கிறேனோ, இன்றே மனந்திரும்பி, இனி கர்த்தரையே சார்ந்துகொள்வேனாக.

📘 அனுதினமும் தேவனுடன்.

Comments (157)

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *