? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: தானி 6:1-10

குலைக்கப்பட்ட கையெழுத்து

…நமக்கு விரோதமாகவும் இருந்த கையெழுத்தைக் குலைத்து, அதை நடுவிலிராதபடிக்கு எடுத்து, சிலுவையின் மேல் ஆணியடித்து… கொலோசெயர் 2:14

“ஒரு சகோதரன், வங்கியில் கடன் பெறுவதற்காக பிணையாளியாக என் கையெழுத்தைக் கேட்டார். நானும் போட்டேன். சில காரணங்களினால் அவரால் கடனைக் கட்டமுடியாமல் போனது. நான் கையெழுத்திட்டதால் அந்தப் பொறுப்பு என் தலையில் விழுந்துவிட்டது” என்று ஒருவர் தன் கையெழுதைப்பற்றிப் புலம்பினார். வங்கியில் இட்ட கையெழுத்து போட்டது போட்டதுதான்.

தரியு ராஜா ஏற்படுத்திய மூன்று பிரதானிகளில் ஒருவன் தானியேல். மட்டுமின்றி, அவன் பிரதானிகளுக்கும் தேசாதிபதிகளுக்கும் மேற்பட்டவனாயிருந்தான், அவனை ராஜ்யம் முழுமைக்கும் அதிகாரியாக ஏற்படுத்த ராஜா நினைத்தான். இதனைக்கண்ட பிரதானி களும் தேசாதிபதிகளும் தானியேலைக் குற்றப்படுத்த ஒரு காரணத்தை தேடியும் ஒரு முகாந்தரத்தையும் குற்றத்தையும் கண்டுபிடிக்கமுடியாமல் போயிற்று. தேவனை பற்றிய விஷயத்திலே குற்றப்படுத்தும்படி வகைதேடி தானியேலின் ஜெபத்திற்குத் தடை ஏற்படும் படியாக ஒரு தந்திரம்செய்து, முப்பது நாள்வரையில் ராஜாவைத் தவிர, எந்தத் தேவனை யாகிலும் மனுஷனையாகிலும் யாதொரு விண்ணப்பம்பண்ணினால், சிங்கங்களின் கெபியிலே போடப்படுவார்கள் என்ற பத்திரத்திற்கு ராஜாவைக் கையெழுத்திட வைத்தார்கள். அதன்படி தினமும் மூன்றுவேளை ஜெபிக்கும் தானியேலுக்கு எதிராக அதைத் திருப்பி விட்டார்கள். ராஜாவாகிய தரியு அந்தக் கட்டளைப் பத்திரத்துக்குக் கையெழுத்து வைக்கப்பட்டதென்று தானியேல் அறிந்தபோதிலும், தான் முன்பு செய்துவந்தபடியே, தினம் மூன்றுவேளையும் தேவனுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணி, ஸ்தோத்திரம் செலுத்தினான் (தானி.6:10). அதன் பலனாக சிங்கத்தின் குகையில் போடப்பட்டான். ஆனாலும் கர்த்தர் அந்தக் கையெழுத்துக் குலைந்துபோகும்படிக்கு சிங்கத்தின் வாயைக் கட்டிப்போட்டார்.

அன்று ஏதேன் தோட்டத்தில், ஆதாம் ஏவாளைப் பாவத்தில் விழுத்தி, மனுக்குலமே தனக்கு அடிமை என்பதுபோல ஒரு கையெழுத்தைப் பதித்தான் சாத்தான். இதனால் நிலைகுலைந்துபோன மனுக்குலத்தைச் சீர்ப்படுத்துவதற்குக் கொடுக்கப்பட்ட நியாயப்பிரமாணமும் மனிதனை நியாயந்தீர்க்கும் கையெழுத்தையே கொண்டிருந்தது. ஆனால், நமது ஆண்டவரோ நமக்கு எதிரிடையாகவும், பிரமாணங்களால் நமக்கு விரோதமாயிருந்ததுமான கையெழுத்தைக் குலைத்து, அதை நடுவிலிராதபடிக்கு எடுத்து சிலுவையில் ஆணியடித்து வெற்றிசிறந்தார். அடித்த ஆணி அடித்ததுதான். அதை இனி எந்த அதிபதியும் பிடுங்கமுடியாது. நாமாகப் போய் சம்பாதிக்க முடியாத நித்திய கிருபையை அளித்த தேவன், இந்த உலக வாழ்வில் தமது பிள்ளைகளுக்கு எதிராக விழுந்த அதிகார கையெழுத்துக்களைச் சும்மாவிடுவாரா? உனக்கு விரோதமாய் உருவாக்கப் படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம் (ஏசாயா 54:17).

? இன்றைய சிந்தனைக்கு:

சிலுவையில் நமக்குக் கிடைத்த வெற்றியை அடிக்கடி ஞாபகப்படுத்தி, தேவனுக்கு நன்றி செலுத்துவோமா.

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin