­­ 📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰

📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : எபிரெயர் 6:1-9

முன்செல்லுவோமாக!

…பூரணராகும்படி கடந்து போவோமாக. எபிரெயர் 6:2

ஒரு ஜாடியிலே மண், பசளை போட்டு சில கொத்தமல்லி விதைகளைக் கலந்து விட்டேன். ஒரு சில நாட்களுக்குள் விதைகள் முளைத்தெழ ஆரம்பித்தன. ஆனால் நாட்கள் செல்ல அவை மேற்கொண்டு வளரவுமில்லை; பட்டுப்போகவும் தொடங்கியது. அப்போதுதான் என் நண்பி என் தவறை உணர்த்தினார். விதை முளைத்தெழும்பியதும் திரும்பத் திரும்ப நீர் விட்டுக் கொண்டிராமல் அவற்றை பிரித்து, தனித்தனியே எப்படி நாட்டவேண்டும் என்று சொன்னார். அதன்படி செய்தபோது, அவற்றின் பலனை சிறப்பாக அனுபவிக்க முடிந்தது. நமது இரட்சிப்பின் வாழ்வும் இப்படியே மேற்கொண்டு வளர்ச்சியடையவேண்டிய ஒன்றாயுள்ளது. ஒவ்வொரு படிக்கற்களாக நாம் கடந்துசெல்ல வேண்டியுள்ளது.

சிலுவையில் இயேசு சம்பாதித்துக் கொடுத்த இரட்சிப்பைப் புரிந்துகொள்ள சில அடிப்படைக் காரியங்கள் தெரிந்திருப்பது அவசியமே. விசுவாசம், மனந்திரும்புதல், ஞானஸ்நானம், உயிர்த்தெழுதல், நித்திய வாழ்வு இவை பற்றிய அறிவு அவசியம். ஆனால் இத்துடன் நிற்கமுடியாது. கிறிஸ்தவ வாழ்வு ஏணிபோன்றது; அதாவது வளர்ந்துகொண்டே போகவேண்டியது. நாம் பூரணராகும்வரைக்கும் வளரவேண்டியவர்கள். இப்படியிருக்க, அன்று சபைக்குள் விக்கிரக வழிபாடு கலக்க ஆரம்பித்தபோது, அதனால் கவரப்பட்டுச் சென்ற பலர் திரும்பி வந்தாலும், அவர்களுடைய கிறிஸ்துவுடனான வாழ்வுநிலை சரிவரவில்லை. ஒருதரம் ருசிபார்த்தும், இரட்சிப்பின் சந்தோ ஷத்தைப் பெற்றிருந்தும், அதை மறுதலித்துப்போவது, ஆண்டவரை மறுபடியும் சிலுவையில் அறைவதற்குச் சமம் என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார்.

இன்று எத்தனைபேர் பெயரளவில் கிறிஸ்தவர்களாக இருந்து, மேலோட்ட கிறிஸ்தவ வாழ்வு வாழ்ந்து கிறிஸ்துவைச் சிலுவையில் அறைகிறோம். சிலர் இரட்சிப்பைச் சமீபித்தும், அதைவிட்டுப் போய்விடுகிறார்கள். இது எவ்வளவு ஆபத்தானது. ஒரு விடயத்தை நாம் சிந்தித்துப்பார்க்கவேண்டும். பழைய ஏற்பாட்டிலே ஒருவன் பாவம் செய்தால், அவனுக்காக இரத்தம் சிந்த ஒரு மிருகம் அடிக்கப்பட்டது. ஆனால், அந்த விடுதலை நிரந்தரமானது அல்ல. பின்னர், தேவகுமாரன் நமது பாவங்களைச் சுமந்து, தமது இரத்தத்தைச் சிந்தி நம்மை மீட்டுக்கொண்டார். ஆனால், இனி நாம் பின்வாங்கிப்போனால், இன்னொருதரம் நமக்காக இரத்தம் சிந்துவதற்கு யாரும் வரப்போவதில்லை. நேராகவே நியாயத்தீர்ப்புத்தான். ஆகவே, நம்மை நாமே நிதானித்து சோதித்து, நமது நிலையை உணர்ந்துகொள்வோம். கிறிஸ்துவின் பிள்ளையாக, பூரணராகும்படிக்கு முன்செல்வோமாக

💫 இன்றைய சிந்தனைக்கு:

என் நான் வெறும் கிறிஸ்தவனா? கிறிஸ்தவளா? அல்லது, கர்த்தருடைய அன்பை ருசிபார்த்து, அதில் வளர்ச்சியடைகின்ற தேவபிள்ளையா?

📘 அனுதினமும் தேவனுடன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Solverwp- WordPress Theme and Plugin