? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு :தானி 3:14-30

எது நம்பிக்கை?

நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன், எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார், விடுவிக்காமற்போனாலும், நாங்கள் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனை செய்வதுமில்லை. தானியேல் 3:17-18

நான் விரும்புவதை, கேட்பதையெல்லாம் தேவன் தருகிறார், ஆதலால் நான் அவரில் நம்பிக்கையாயிருக்கிறேன் என்று சொன்னால், அது நம்பிக்கை கிடையாது. வெறும் சுயநலம் மட்டுமே. உன்னதமான தேவனொருவர் இருக்கிறார், அவர் அனைத்தையும் பார்த்துக்கொள்வார், அவரை மீறி எதுவுமே என் வாழ்;வில் நடக்காது என்று நம்பி அவரிடத்தில் என்னைத் தருவதே உண்மையான நம்பிக்கை.

இங்கே சாத்ராக், மோஷாக், ஆபேத்நேகோ என்பவர்களின் நம்பிக்கை அப்படிப்பட்ட ஒன்றாகவே இருந்தது. நேபுகாத்நேச்சார் பொற்சிலையை உண்டாக்கி அதைப் பணிந்து கொள்ளவேண்டும், அப்படிச் செய்யாதவர்கள் எரிகிற அக்கினியில் போடப்படுவார்கள் என்று கட்டளை கொடுத்தபோதும், அந்த மூன்று வாலிபரும் சொன்னதாவது, நாங்கள் இந்தச் சிலையை பணிந்துகொள்ள மாட்டோம். அக்கினியில் இருந்து தேவன் எம்மை தப்புவிக்க வல்லவராயிருக்கிறார். அப்படி அவர் தப்புவியாமற்போனாலும் நாங்கள் நீர்உருவாக்கின இந்த சிலைக்கு அடிபணியமாட்டோம் என்பதே. அவர்கள், நிச்சயமாகவே தேவன் தப்புவிப்பார் என்று சொல்லவில்லை. அவர் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார். அவர் தப்புவிக்காமற்போனாலும் நாம் நமது தீர்மானத்திலிருந்து பின்வாங்கமாட்டோம் என்றே சொன்னார்கள். இதுதான் தேவன்மீது வைத்திருக்கின்ற அசைக்கமுடியாத நம்பிக்கை. எமது வாழ்வு, சூழ்நிலை, விருப்பம் எல்லாவற்றையும் கடந்து, தேவன் நன்மையானதையே செய்வார் என்றதான ஒரு உறுதிவேண்டும்; அது நமது வாழ்வாகலாம், சாவாகலாம். கர்த்தரை உண்மையாய் விசுவாசிக்கிறவனுக்கு உலகத்து மரணமானது ஒரு முடிவு கிடையாது. அவனது வாழ்வு மறுமையிலும் தொடருகிறது. அப்படியிருக்கும்போது, இந்த மரணத்தைப் பார்த்து நாம் ஏன் பயப்படவேண்டும்? எனவே நம்பிக்கையென்பது நமக்குள் உருவாகி, நம்மூலமாக பிறருக்குள் கடத்தப்பட வேண்டிய ஒன்றாகும்.

இன்றைய வாலிப சமுதாயம் நம்பிக்கையிழந்து காணப்படுவது துக்கத்துக்குரிய விடயமாகும். எமது பிள்ளைகளுக்கு சிறுவயதிலிருந்தே இந்த தேவநம்பிக்கையை நாம் விதைத்திடவேண்டும். இன்று தொலைபேசியும், கணனியும் எமது பிள்ளைகளின் வாழ்வில் முக்கியத்துவம் பெறுவது கவலைக்குரியது. அதிலும் அதிகமாய் கர்த்தரின் வேதமும் ஜெபமும் முக்கியமானவை என உணர்த்தி நல்வழிப்படுத்திட வேண்டும். இதை இப்போது செய்யத்தவறினால் இனி எப்போதுமே செய்திட சந்தர்ப்பம் கிடைக்காது. காலங்கள் போனால் திரும்பாது, கிருபையின் நாட்களைத் தள்ளாதே. கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள், அவர்மேல் நம்பிக்கையாய் இருக்கிற மனுஷன் பாக்கியவான். சங்கீதம் 34:8

? இன்றைய சிந்தனைக்கு:  

தேவநம்பிக்கை உனது வாழ்வின் முழுமையுமா? அல்லது அது ஒரு பகுதியா?

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin