2023 மார்ச் 7 செவ்வாய்

📖 சத்தியவசனம் – இலங்கை.

📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : 2தீமோ 4:1-8

ஓட்டத்தை முடித்தேன்

நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன். 2தீமோத்தேயு 4:7

ஓட்டப் போட்டிகள் ஆரம்பிக்கும்போது, அந்த ஆரம்பக் கோட்டிலே ஓட்டத்தில் பங்கு பெறுவோர் யாவரும் ஓட்டத்தை ஆரம்பிக்கக் காத்திருப்பர். ஆனால் ஓட்டத்தை ஆரம்பித்த பின்னர், சிலர் பாதியிலேயே விழுந்துவிடுவதுண்டு; சிலர் களைத்துப்போய் மெதுவாக ஓடுவர்; இன்னும் சிலர் தமக்கான ஓட்டப்பாதையைவிட்டு விலகி ஓடுவர். ஆனால் யார் இறுதிக்கோட்டை முதலாவதாக தனக்கான ஓட்டப்பாதையில் சரியாகச் சென்றடைகிறாரோ அவரே ஓட்டத்தை முடித்தவராக, வெற்றியாளராக மகுடம்சூடுவார். ஆக, ஓட ஆயத்தமாவதோ, ஓடுவதோ அல்ல; சரியாக ஓடிமுடிப்பதே காரியம்.ஆனால், நமது ஆவிக்குரிய ஓட்டத்தில், முதலாவது என்பது அல்ல; இறுதி இலக்கு வரை சரியாக ஓடுக்கின்ற ஒவ்வொருவருக்கும் மகுடம் உண்டு. ஆண்டவராகிய இயேசு  தமது பிதாவின் சித்தத்தை நிறைவேற்றும்படிக்கு இந்த உலகிற்கு வந்தார். அதுவே அவரது ஒரே நோக்கமாக இருந்தது. இந்த ஓட்டப் பாதையிலே அவருக்குப் பல இன்னல்கள், சோதனைகள், பாடுகள் எல்லாமே வந்தன. ஆனாலும் அவர் அவற்றையெல்லாம் வென்றவராய் ஓட்டத்;தை ஓடி முடித்து, இன்று வெற்றிவேந்தனாக பிதாவின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார். கிறிஸ்தவர்களை துன்பப்படுத்தி, அவர்களைக் கொலைசெய்யும்படிக்கு அனுமதிபெற்றவனாய், தமஸ்குவுக்குப் புறப்பட்டுப் போகும் வழியில், கிறிஸ்துவால் சந்திக்கப்பட்டு, மனந்திரும்பி, இரட்சிப்படைந்தவர்தான் பவுல். அதன் பின்னர் அவரது வாழ்வின் ஓட்டப்பாதையே மாறியது; இப்போதுதான் அவர் தனக்கான சரியான பாதைக்கு வந்திருந்தார். அந்தப் பாதையில் அவருக்கு மரணதண்டனை காத்திருந்தபோதும், அப் பாதையைவிட்டு கடைசிவரைக்கும் அவர் விலகவில்லை. 

“நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்;தை முடித்தேன், விசுவாசத்;தைக் காத்துக்கொண்டேன். இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது” இது பவுலின் முழக்கம். இன்று அநேகருடைய கல்லறையிலே இந்த வசனம் எழுதப்பட்டிருப்பதைக் காண்கிறோம். ஆனால் அவர்கள் உண்மையிலேயே நல்ல ஓட்டத்தை ஓடி முடித்தார்களா, விசுவாசத்தைக் காத்துக்கொண்டார்களா என்பதை நாம் அறியோம். நாளை எமது கல்லறையிலும் எமக்கு அன்பானவர்கள் இதே வாசகத்தை எழுதலாம்;அதற்கு நாம் தகுதியானவர்களா என்பதை சிந்தித்துப் பார்ப்போம்.

நாம் ஒவ்வொருவரும் தனித்துவமானவர்கள்; நமது ஓட்டப்பாதைகளும் வேறுபட்டவை. நமக்குரிய பாதையில் செவ்வையாக நேர்த்தியாக ஓடி, நமது இலக்கை அடைய வேண்டும் என்பதே நமது நோக்காக இருக்கட்டும். தடைகளும், தோல்விகளும் நம்மை பின்தள்ளிப்போட இடமளிக்கக்கூடாது. அன்று பவுலுக்கு நேரிட்ட சோதனை வேதனை நமக்கு நேரிடாது; ஆனால் நம் ஒவ்வொருவருக்கும் தடைகள் வரத்தான் செய்யும். ஆனால் தேவ ஆவியானவர் நம்முடன் இருப்பதால் தைரியமாக ஓடுவோம்.

💫 இன்றைய சிந்தனைக்கு:   

 என் ஓட்டத்தைப் பொறுமையோடு ஓடுகிறேனா?

📘 அனுதினமும் தேவனுடன்.

7 thoughts on “2023 மார்ச் 7 செவ்வாய்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Solverwp- WordPress Theme and Plugin