📖 சத்தியவசனம் – இலங்கை.

📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : யோவான் 15:9-17

ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்

நான் உங்களில் அன்பாயிருக்கிறதுபோல, நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருக்க வேண்டுமென்பதே என்னுடைய கற்பனையாயிருக்கிறது.
யோவான் 15:12

“அன்பு” முழு உலகமுமே இவ்வன்பினை மையமாகக் கொண்டே சுழலுகிறது. தேவன் மனிதனை அன்பாகப் படைத்ததுமன்றி, மனித உறவையும் அன்பிலேயே அத்திபாரமிட்டார். ஆனால் எப்போது பாவம் மனிதனுக்குள் நுளைந்ததோ, தேவனுக்கும் மனிதனுக்குமான அன்பின் உறவை மாத்திரமல்லாமல், மனிதனுக்கும் மனிதனுக்குமான உறவையும் அது கறைப்படுத்திவிட்டது. இந்தக் கறையைப் போக்கி, மனிதன் இழந்துபோன தேவன் – மனிதன், மனிதன் – மனிதன், இந்த இரண்டு உறவுகளையும் ஒப்புர வாக்குவதற்கே தேவன் மனிதனாக உலகிற்கு வந்தார். மேலும், இந்த இரண்டு உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்த்தி, போதித்ததுமன்றி, செய்தும் காட்டினார். அவரது அடிச்சுவட்டை நாம் பின்பற்றுகிறோமா?

இரண்டு விடயங்களை இயேசு வலியுறுத்துகிறார். ஒன்று, “பிதா என்னில் அன்பாயிருக்கிறது போல நானும் உங்களில் அன்பாயிருக்கிறேன்” என்பதாகும். பிதாவின் அன்புக்கு பாத்திரமாக தாம் எப்படி வாழ்ந்தார் என்றும் அவரே கூறுகிறார்; “நான்  என் பிதாவின் கற்பனைகளைக் கைக்கொண்டு அவருடைய அன்பிலே நிலைத்திருக்கிறதுபோல” பின்னர், நாம் எப்படித் தமது அன்புக்குப் பாத்திரராய் வாழமுடியும் என்பதையும் கற்பிக்கிறார்; “நீங்களும் என் கற்பனைகளைக் கைக்கொண்டிருந்தால், என்னுடைய அன்பிலே நிலைத்திருப்பீர்கள்.” ஆக, நாம் ஆண்டவரை நேசிக்கிறோம் என்றால், அவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து வாழுவதே அந்த அன்புக்குச் சாட்சி.

அடுத்தது, “நான் உங்களில் அன்பாயிருக்கிறதுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டுமென்பதே என்னுடைய கற்பனையாக இருக்கிறது.” ஒன்று, நாம் நினைத்தபடியல்ல, இயேசு நம்மை நேசிப்பதுபோலவே நாம் ஒருவரையொருவர் நேசிக்கவேண்டும். அடுத்தது, இது கர்த்தரின் கற்பனை; தெரிவு அல்ல, கட்டளை. “ஒருவரிலொருவர்” இதை இயேசு தமது சீஷர்களிடமே கூறுகிறார். ஆக, முதலாவது நாம் ஆண்டவரின் அன்பில் நிலைத்திருக்கவேண்டும்; அடுத்தது நமது விசுவாச சகோதரரிடத்தில் அன்பாயிருக்கவேண்டும். இயேசு பிதாவின் சித்தத்தை நிறைவேற்றும் படி தமது பிள்ளைகளுக்காகத் தமது ஜீவனையே கொடுத்தார். நாம் ஜீவனைக் கொடுக்காவிட்டாலும், நமது சகோதரர்களுக்காக எதை இழக்க நேரிட்டாலும் தயங்காது அதைச் செய்யவேண்டுமே! ஒருபுறம் ஆண்டவரில் அன்புகூராதவனால் தன் சகோதரனிடத்தில் அன்புகூருவது கடினம்; மறுபுறத்தில், சகோதரனிடத்தில் அன்புகூராமல், நான்  ஆண்டவரை நேசிக்கிறேன் என்று சொல்வது எப்படி? “தான் கண்ட சகோதரனிடத்தில் அன்புகூராமலிருக்கிறவன், தான் காணாத தேவனிடத்தில் எப்படி அன்புகூருவான்?” (1யோவா.4:20) நமது பதில் என்ன?

💫 இன்றைய சிந்தனைக்கு:    

 நாம் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டும் என்ற தேவகட்டளைக்குக் கீழ்ப்படிவதற்கு எனக்குள்ள தடைகள் என்ன?

📘 அனுதினமும் தேவனுடன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Solverwp- WordPress Theme and Plugin