? சத்தியவசனம் – இலங்கை.

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : ஏசாயா 28:23-29

செயலில் மகத்துவமானவர்

இதுவும் சேனைகளின் கர்த்தராலே உண்டாகிறது. அவர் ஆலோசனையில் ஆச்சரியமானவர், செயலில் மகத்துவமானவர். ஏசாயா 28:29

வயல் நிலங்களை உழுவது ஒரு காலம், பின்னர் விதை விதைத்து, ஒரு பருவத்தில் அதைப் பிடுங்கி, நாற்று நட்டு, தண்ணீர் பாய்ச்சவேண்டும். நாற்றுக்கள் வளர்ந்து பச்சைப் பசேல் என்று தோன்றும் காட்சி அற்புதம்! அதற்காக எப்பொழுதும் வயல் நிலத்தை உழுவதுமில்லை, எப்பொழுதும் நாற்று நடுவதுமில்லை. அதற்குரிய சரியான காலத்தில் அந்தந்தக் காரியங்கள் செய்யப்படவேண்டும். எதை விதைத்து, எதை அறுவடை செய்கிறோமோ, அதற்கு ஏற்றபடியான முறைமையிலேயே போரடிக்கப்படும். இந்த ஆலோசனைகளை மனிதரின் அறிவிலும் ஆற்றலிலும் வைத்தவர் யார்? கர்த்தரல்லவா! அப்படியானால் அவர் தமது பிள்ளைகளின் வாழ்வில் தவறுவிடுவாரா?

ஏசாயா தீர்க்கர் ஒரு அருமையான காரியத்தைச் சொல்வதற்காக, “செவிகொடுத்து என் சத்தத்தைக் கேளுங்கள்; நான் சொல்வதைக் கவனித்துக் கேளுங்கள்” என்கிறார். “உழுகிறவன் அதை எப்போதுமே உழுதுகொண்டு இருக்கமாட்டான். அதற்கென்று ஒரு காலமுண்டு, அதுவரைக்கும்தான் உழுவான். நிலத்தை சரிவர பண்படுத்திய பின்னர் அவன் விதைகளை விதைப்பான்” என்று ஒரு விவசாயியின் செயல்களையும், நிலத்துக்கு என்னவாகிறது என்பதையும் விளக்குகிறார். அதாவது உழுவதற்கென்று ஒரு காலம் பின்னர் விதையை விதைப்பதற்கென்று ஒரு காலம்.

போரடிப்பதிலும் வேறுபாடுகள் உண்டு. உளுந்தை தூலத்தாலோ அல்லது வண்டி சக்கரங்கள் அதன்மீது சுற்றி விடப்பட்டோ அடிக்கிறதில்லை. உளுந்தை கோலினாலும், சீரகத்தை மிலாற்றினாலும் அடிப்பார்கள். அப்பமாக்க வேண்டுமானால் அந்த தானியம்  இடிக்கப்படவேண்டும். தொடர்ந்து போரடித்துக் கொண்டோ அல்;லது வண்டிலின் உருளைகளை அதன் மீது ஓடவிட்டுக்கொண்டோ இருப்பதில்லை. ஒவ்வொன்றையும் எப்படியாக நேர்த்தியாக செய்வது என்பதற்கு நேரமும், முறைகளும் உண்டு. அதன்படி செய்யும்போதே அது அதிக பலனைக் கொடுக்கும்.

இப்படியே, நமது வாழ்விலும், நாம் நல்ல கனிகொடுக்கிறவர்களாய் திகழ சில பாதைகளுக்கூடாக கர்த்தர் நம்மை நடத்தியே ஆகவேண்டும். அதற்காக எந்நாளும் அப்படியே இருக்க முடியாது. நம்மைப் புடமிட்டு பொன்னாக விளங்கும்படி செய்யவே இந்தக்கால அளவுகள் தேவைப்படுகிறது. சிலவேளைகளில் நாம் நமக்குத்தான் துன்பம் சோதனைகள் என்று புலம்புவதுண்டு. ஆனால் தேவன் அனைத்தையும் நமது நன்மைக்கும் தமது மகிமைக்கென்றுமே செய்கிறார். அவர் செயலில் மகத்துவமானவர். நாம் ஏற்றக்காலத்தில் எழுந்து நிற்கத்தக்கதாக, அவருக்குகந்த பாத்திரங்களாக மாற்றப்படுவதற்காகவே நாம் உழப்பட்டு, பிடுங்கப்பட்டு, போரடிக்கப் படுகிறோம்.

? இன்றைய சிந்தனைக்கு:    

 “கர்த்தர் சொன்ன வார்த்தை நிறைவேறுமளவும் அவருடைய வசனம் அவனைப் புடமிட்டது” (சங்.105:19). இது யோசேப்பைக் குறித்தது; நமது காரியம் என்ன?

? அனுதினமும் தேவனுடன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *