? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு: சங்கீதம் 125:1-5

நம்மை நிலைநிறுத்துகிறார்!

கர்த்தரை நம்புகிறவர்கள் என்றென்றைக்கும் அசையாமல் நிலைநிற்கும் சீயோன் பர்வதத்தைப்போல் இருப்பார்கள். சங்கீதம் 125:1

“என்றென்றைக்கும் அசையாத” என்ற வார்த்தையைச் சற்று சிந்தித்துப் பார்ப்போம். காற்று வீசும், புயல் அடிக்கும், அஸ்திபாரமே நிலைகுலையும்படிக்கு பூமியும் நடுங்கும், காட்டுத் தீ சுற்றிலும் பரவும், வானளாவ புகை எழும்பி யாவையும் மறைத்துவிடும். ஆனால் பர்வதமோ அசையாது. அதன் கெம்பீரம் மாறாது, அது நிமிர்ந்து நிற்கும் அழகே அழகு! இவ்விதமாகவே சூழ்நிலைகள் மாறினாலும், நிலைகுலைந்தாலும் கர்த்தரை நம்புகிறவனும் இருப்பான் என்பது தேவனுடைய வாக்கு. இந்த 125ம் சங்கீதம் ஆரோகண சங்கீதங்களில் ஒன்று. அதாவது மலை ஏறியபோது பாடிய சங்கீதங்களே. அந்த மலை ஏற்றத்தில் அசையாத பர்வதத்தைப் பார்க்கும்போது, கர்த்தரை நம்புகிறவர்களும் இப்படித்தான் இருப்பார்கள் என்ற நம்பிக்கை சங்கீதக்காரனை மகிழ்வித்ததல்லவா!

வீட்டுவேலைகளில் மூழ்கிவிட்ட மனைவி சந்தடிகேட்டு நிமிர்ந்து பார்த்தாள். குனிந்த தலையுடன் வீடுநோக்கி வந்து கொண்டிருந்தான் கணவன். மனைவியின் உள்ளத்தில் எழுந்த சந்தேகம் வார்த்தையாக வெளிவந்தது. “உங்களுக்கு வேலை போய்விட்டதா?” திடுக்கிட்ட கணவன்: “உனக்கு எப்படித் தெரியும்” என்றான். “என் உள்ளுணர்வு எனக்கு உணர்த்தியது. ஆனால் ஒன்றுக்கும் கவலைவேண்டாம். கர்த்தருக்கே நன்றி கூறி அவரையே நம்பியிருப்போம். நம்மைப் பயிற்றுவிக்க, அவரை அண்டிச்சேர இதுவே நல்ல தருணம்” என்று அன்பு மனைவி அடக்கமாக பதிலளித்து, கணவனை திடப்படுத்தினாள். நேரம் கடந்துசென்றது. தபால்காரன் வந்தான். கடிதத்தை பிரித்தபோது என்ன ஆச்சரியம், அநேக நாட்கள் தொடர்பற்று இருந்த ஒரு உறவினர் வெளிநாடு ஒன்றிலிருந்து கடிதம் எழுதியிருந்தார். அத்துடன் குறிப்பிட்ட பணத்தொகையும் கிடைத்தது. இருவரும் சேர்ந்து கண்ணீரோடே தேவனைத் துதித்தார்கள்.

இப்படியாக பல சம்பவங்கள் இன்னமும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. ஏனெனில், தேவன் என்றும் மாறாதவர். எடுத்ததற்கெல்லாம் முறுமுறுக்கின்ற மனைவிகள் மத்தியிலே, இவளோ, சூழ்நிலையை ஞானமாகக் கையாண்டாள். அதன் இரகசியம் அவள் தேவனை நம்பினாள். பணம் கிடைத்தது எதிர்பாராத நிகழ்வு, அவள் தன் தேவனை நம்பினதினால் சூழ்நிலைகள் அவளை அசைக்கவில்லை. தம்மை நம்பியிருக்கிற வளை அறிந்திருந்த கர்த்தர் ஏற்றவேளையில் பணம் கிடைப்பதற்கு ஆயத்தங்களைச் செய்திருந்தார் அல்லவா! ஆம், நம்முடைய வாழ்வு சூறாவளிபோல சுற்றிச் சுழன்றாலும், குழந்தையைப்போல தேவனையே நம்புவோம். அவர் எல்லாம் அறிந்தவர். நமக்காக அவர் சகலத்தையும் ஆயத்தம்செய்து வைத்திருக்கிறார், இதை நாம் நம்பவேண்டும். கர்த்தரை நம்புகிறவர்கள் அசைக்கப்படவே மாட்டார்கள்.

? இன்றைய சிந்தனைக்கு:

சூழ்நிலைகள் பாதகமாக அமைந்த வேளைகளில் நான் எப்படி அதற்கு இதுவரை முகங்கொடுத்திருக்கிறேன்? கர்த்தரை நம்பி அமர்ந்திருக்க முடிகின்றதா? என்னை முற்றிலும் அர்ப்பணிப்பேனா?

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin