? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: வெளி 1:10-18 

தரிசனக் கண்கள்

 நான் அவரைக் கண்டபோது செத்தவனைப்போல அவருடைய பாதத்தில் விழுந்தேன். வெளி.1:17

ஏறத்தாள நாற்பது ஆண்டுகளின் பின்னர் என் பாடசாலை நண்பியைச் சந்திக்கும் வாய்ப்பு எட்டியது. மிக்க மகிழ்ச்சியுடன் அவளுடைய காரியாலத்திற்குச் சென்றேன். அவளைக் கண்டதும் ஓடிச்சென்று கட்டி அணைக்க நினைத்தபோதே, ஒரு பணியாளர்  வந்து, தலைவணங்கி, அவள் உத்தரவுக்காகக் காத்துநிற்பதைக் கண்டேன். என் கால்கள் ஒருபடி பின்னே நகர்ந்தன. ஆம், அவள் இப்போது என் பழைய பாடசாலை நண்பி அல்ல@ அவள் ஒரு உயரதிகாரி. ஆனால், என்னைக் கவனித்த அவள், ஓடிவந்து, கட்டி அணைத்து, தன் தனிப்பட்ட அறைக்குள் அழைத்துசென்றாள். எல்லாரும் பார்த் தார்கள். சற்றுக் கூச்சமாக இருந்தாலும், கொஞ்சம் பெருமையாகவும் இருந்தது.

இயேசுவும் யோவானும் ஒன்றுவிட்ட சகோதரர்கள். சிறுவயதில் ஒன்றாய் ஓடி விளையாடி ஒன்றாய் வளர்ந்திருப்பார்கள். இந்த யோவான் இயேசுவின் சீஷனாக வந்திருந்தாலும், இயேசுவோடு, அவனுக்குச் சற்று நெருக்கமான உரிமை இருந்தது. இயேசுவின் உள்வட்ட மூன்று சீஷரில் யோவானும் ஒருவன். மாத்திரமல்ல, கடைசி இராப்போஜன விருந்தில் இயேசுவின் மார்பிலே உரிமையோடு சாய்ந்திருந்தான். இயேசுவுக்கு அன்பான ஒருவன். இயேசு அவனிடம்தான் தன் தாயாரைக் கவனிக்கும் பொறுப்பு கையளித்தார். ‘நான் வருமளவும் இவனிருக்க எனக்குச் சித்தமானால் உனக்கென்ன” என்று பேதுருவிடம் இயேசு யோவானைப் பற்றியே கூறினார். இயேசு மரித்து, உயிர்த்து, பரத்துக்கு ஏறியதற்கு இந்த யோவானும் சாட்சி. ஏறத்தாள 33வருடம் பழகியவரை, இப்போது ஏறத்தாள 50 வருடங்களின் பின்னர் காண்கிறார் யோவான். ஆனால், இப்போது ஓடிச்சென்று கட்டியணைக்க வேண்டும்போல இருந்திருந்தாலும், யோவானால் அது முடியவில்ல.  மகிமையின் ராஜாவாகிய இயேசுவை பத்மூ தீவில், கர்த்தருடைய நாளில் ஆவிக்குள்ளான நிலையில் கண்டபோது, யோவான், செய்தது ஒன்றுதான்@ செத்தவனைப்போல இயேசுவின் பாதத்தில் விழுந்தான்.

மோசே, எரிகின்ற முட்செடியில் கண்ட தேவதரிசனத்தின் முன்பாகத் தன் முகத்தை மூடிக்கொண்டான் (யாத்.3:6). சேராபீன்களோ, தங்கள் செட்டைகளினால் தங்கள் முகத்தையும் தங்கள் கால்களையும் மூடி நின்றதைக் கண்ட ஏசாயா தீர்க்கன், ‘ஐயோ அதமானேன்” என்று கதறினான் (ஏசா.6:5). கர்த்தருடைய மகிமையின் தரிசனத்தைக் கண்ட எசேக்கியேல் முகங்குப்புற விழுந்தான் (எசே.1:28). பேதுரு, நான் பாவி என்றான், பவுல், நான் நிர்ப்பந்தமான பாவி என்றான். இன்று நாம் இயேசுவின் முன் தலைவணங்கி முகங்குப்புற விழுந்து வணங்குகிறோமா? அல்லது அவரை யாராய் காண்கிறோம்? இன்னும் அவர் ஒரு குழந்தையா? அவருக்குச் செலுத்தவேண்டிய பயபக்தி எங்கே? அவருடைய மகிமையை உணருவோமானால். நமது சிந்தனை செயல் எல்லாம்  நிச்சயம் மாறும்.

? இன்றைய சிந்தனைக்கு:

சிந்தனைக்கு: ‘இயேசுவே, உமது மகிமையைக் காண என் கண்களைத் திறந்தருளும்” என்று ஜெபிப்போமா!

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin