📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰
📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : லூக்கா 22:31-32 எபிரெயர் 5:7-10
நீ குணப்பட்டபின்பு…
…நீ குணப்பட்ட பின்பு உன் சகோதரரை ஸ்திரப்படுத்து என்றார் லூக்கா 22:32
நாம் அனுபவிக்காத, அல்லது ருசிபார்க்காத எதையும் பிறரில் திணிப்பது நல்லதல்ல. கர்த்தருடைய வார்த்தையைப் பகிரும்போதும், முதலில் அதை நம்மில் அனுபவித்து, பின்னரே பிறருக்குப் பகிரவேண்டும்; அதுவே சிறந்ததும் சரியானதுமாகும்.
பாவத்திலிருந்து நம்மை மீட்க வந்தவர், பாவத்தின் கொடூரம் இன்னதென்று தெரியா தவராய், பாவத்திலிருந்து நமக்கு விடுதலையளிக்கவில்லை. அதைத்தான் எபிரெய ஆசிரியர், “…தாம் பூரணரான பின்பு, தமக்குக் கீழ்ப்படிகிற யாவரும் நித்திய இட்சிப்பை அடைவதற்குக் காரணரானார்” (எபி.6:8,9) என்று தெளிவுபடுத்தியுள்ளார். “தாம் பூரணரான பின்பு” என்பதைக் கவனிக்கவும். பாவத்தின் கொடூரம், மரணத்தின் உக்கிரகம், பாதாளத்தின் தனிமை யாவையும் அனுபவித்து, தமது கீழ்ப்படிதலை முழுமையாக்கிய பின்னரே, இயேசு, தமக்குக் கீழ்ப்படிகிற பிள்ளைகள் அந்தக் கொடுமைக்கு ஆளாகாதபடிக்கு தாமே மரணத்தை ஜெயித்து உயிர்த்து, இரட்சிப்பு அளித்தார். இந்த மகத்தான இரட்சிப்பை இன்று நாம் என்ன செய்கிறோம்?
இந்த இரட்சிப்பை அனுபவிக்காத ஒருவனால் அதன் மகிழ்ச்சியை பிறருடன் பகிர்ந்து கொள்ள முடியாது. இயேசு சிலுவைக்குப் போவதற்கு முன்னர், தமது சீஷருக்கு நேரிட இருந்த சோதனையை உணர்ந்தவராய் அவர்களுக்காக ஜெபித்தார், எதற்காக ஜெபித்தார்? சோதனையினின்று தப்பித்துக்கொள்ளவா? இல்லை! “நானோ உன் விசுவாசம் ஒழிந்துபோகாதபடிக்கு உனக்காக வேண்டிக்கொண்டேன்” என்று இயேசு சீமோனிடம் சொன்னதுமன்றி, “நீ குணப்பட்ட பின்பு உன் சகோதரரை ஸ்திரப்படுத்து” என்ற கட்டளையையும் கொடுத்தார். பேதுருவுக்கு சோதனை நிச்சயம். ஆனால் அதில் அவன் தன் விசுவாசத்தை இழந்துவிடாதபடிக்கு அவனுக்காக இயேசுவானவர் தாமே ஜெபிக்கிறார். பேதுரு, சோதனையில் அகப ;பட்டு மனந்திரும்பியதால்தான், பெந்தெகொஸ்தே நாளிலே துணிகரமாக எழுந்துநின்று, “நீங்களே …சிலுவையில் ஆணியடித்துக் கொன்றீர்கள்” என்று முழங்கினார்.
சுகம் பெற்றவனுக்குத்தான் வியாதியின் கொடூரம் புரியும். ஆக, நாம் குணப்பட வேண்டியது அவசியம். கிறிஸ்து அருளிய இரட்சிப்பை பிறருக்கு அறிவிக்கத் தயங்குவோமானால் நாம் இன்னமும் குணப்படவில்லையோ என்பதை சற்று ஆராய்ந்து பார்ப்பது நல்லது. இன்று இரட்சிப்பின் செய்தியை பிறருக்கு அறிவித்து பிறரும் குணமடைய நான் முயற்சிகளை எடுக்கவேண்டும். இன்று எனக்கு மரணம் நேரிடுமாயின், அல்லது மத்திய ஆகாயத்தில் இயேசு வருவாரானால் அவரைச் சந்திக்க நான் ஆயத்தத்துடன் இருக்கின்றேனா? சிந்திப்பேனாக.
💫 இன்றைய சிந்தனைக்கு:
என் சகோதரனை ஸ்திரப்படுத்துவதற்கு முன்னர் நான் குணப்பட்டவனாக இருக்கின்றேனா?
📘 அனுதினமும் தேவனுடன்.
